Thursday, December 1, 2011

வேட்டை

ஆளின்றி அம்பின்றி
ஆளின்றி அரவமின்றி
ரணமாக்கும்
காதல் வேட்டை..!

வேடனே இரையாகும்
வேட்டை...!

Friday, November 18, 2011

விளக்கு

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்
விட்டில் பூச்சி அதனில்
இறக்கும் வரை

Thursday, November 17, 2011

சுழற்சி

உலகம் தன்னை
தினமும் சுற்றுகிறது
என்றறிந்தேன்
நான் இருக்கும் இடம்
மட்டும் ஏனோ நகரவேயில்லை

Wednesday, November 16, 2011

பயிற்சி

தாலி கட்டி,
வேலி கட்டி,
மஞ்சள் கொடியில்
என்னை கட்டி,
தினமும் விடுபட்டு,
தினமும் சிறைபட்டு,
முடியும் தினம் தெரியவில்லை...!

விடாது செய்கிறேன் நானும்
ஒரு பயிற்சி..!!

Tuesday, November 15, 2011

நாய்க்குட்டி!

நாய்க்குட்டியைப் போல
அவள் பின்னால்
தினமும் நான்...!

'வாலாட்டுவது' மட்டும்தான்
தெரிகிறது அவளுக்கு!

Monday, November 14, 2011

அயற்சி

கடலை கோப்பையில்
எடுத்து கரை சேர்க்க,
நெடுநாளாய் முயற்சிக்கிறேன்...
அலைகள் குறையவில்லை!

வேலை நடுவே விழித்தேன்...
வேலை குறையவில்லை!
அயற்சி மட்டும் தான் மிச்சம்!!

Sunday, November 13, 2011

முயற்சி

விண்ணை தொடத்தான் எம்பினேன்..
விட்டத்தை கூட தொடவில்லை!

ஆனாலும் எம்புவதை
விடவில்லை..!!

Thursday, November 10, 2011

குளியல்

முழு குளியல் என்றுமில்லை...
குளித்ததெல்லாம் போறவில்லை...
நீண்டதாய் இல்லை தினமும்...
சிறியதாயேனும் குளியல் உண்டு...

மனதிற்கும் ஒரு முறையேனும்
உற்சாக நினைவு தினமும் தேவை
குளியல் போலவே..!!

Sunday, November 6, 2011

அழகு

தேடியிருக்க,
தேடுதலிலும்
அழகில்லாதிருக்கும்!
நாடியிருக்க,
நாடுதலில்
நாட்டமின்றிருக்கும்..!
நல்லவையிலே
இருந்திருக்கும்!!

Saturday, November 5, 2011

பொறுமை

குடும்பத்தில் அன்பாகும்,
மற்றோரிடம் மதிப்பாகும்,
தன்னிடம் நம்பிக்கையாகும்,
இறைவனிடம் பக்தியாகும்,
இருந்திருக்க குணமாயிருக்கும்..!

Friday, November 4, 2011

கோபம்

தன்னில் தவறில்லையெனில்
தேவையில்லை..!

தவறாய் தானிருக்க
பயனில்லை...!!

தன்னிலை அறிந்திருக்க,
கோபம் என்றே ஒன்றில்லை..!!!

Tuesday, November 1, 2011

பயம்

நிழல் போல்
சிறியதையும்
பெரிதாய் காட்டும்..!

நிழல் போல்தான்
என்று மறந்திருக்க,
மறைந்திருக்கும்..!

அல்லால்
அவையே வாழ்வில்
நிறைந்திருக்கும்!

Monday, October 31, 2011

நினைப்பதை செய்

நினைவெல்லாம்
செயலாக,
நினைவே
வாழ்வாகும்!
வசமாகும்!!

செயலில்லா
நினைவாய்
மட்டுமிருக்க,
வாழ்வே
நினைவாய்
மட்டுமிருக்கும்!
வசமில்லாதிருக்கும்!!
வாசமில்லாது போகும்!!

Sunday, October 30, 2011

எல்லாம் சில காலம்

மழையாய், வெயிலாய்,
உதிர்தலாய், வசந்தமாய்,
எல்லாம் சில காலம்
மனிதரின் வாழ்வு போல...!

ஏற்றமும், இறக்கமும்,
இருப்பும், இல்லாமையும்,
உறவும், பிரிவும்,
சிரிப்பும், துக்கமும் என
எல்லாம் சில காலம்...!

புரிந்தோருக்கும் மட்டும்
என்றும் வசந்தகாலம்தான்...!!

Saturday, October 29, 2011

விதை

சிறிதாய் மண்ணுள் விதைக்க,
பெரிதாய் மரமாய் ஆனது;
ஸ்திரமாய் நிழலும் தந்தது!

சிறிதாய் என்னுள் விதைக்க,
பெரிதாய் வரமானது;
வாழ்வே ஸ்திரமானது!

விதை சிறிதேயானாலும்,
விதைத்தாலே பலனாகும்!
விதையாய் மட்டுமே
வைத்திருக்க வீணாகும்!!

Friday, October 28, 2011

கடனாயேனும் சிரி

தினமொரு முறையேனும்
கடனாய் சிரித்தாலும் போதும்!

உலகம் இனித்திடும்!!
உன்னை சுற்றி
யாவும் சிரித்திடும்!
இவ்வுலகமும் சிரிப்பாய்
இருந்திடும்...!!

Thursday, October 27, 2011

தீபாவளி - 3

கையெல்லாம் பட்டாசு மருந்து
முகமெல்லாம் பூரிப்பு
கடனாய் வந்ததென்றாலும்
கடலாய் இருந்தது சிரிப்பு அன்று..

கையில் படாது பட்டாசு வெடித்து
சொந்தமாய் யாவுமிருந்தும்
சொந்தங்கள் தூரமிருக்க
கடலாய் யாவுமிருந்தும்
கடனாய் வந்தது போலிருக்கும்
கண்ணாடி பார்த்து சிரித்திருக்கும் இன்று..

Wednesday, October 26, 2011

தீபாவளி - 2

காலையிலே எழுந்திக்கிட்டு,
எண்ணைதனை தேச்சிக்கிட்டு,
சுடுதண்ணில குளிச்சிக்கிட்டு,
புச்சு துணி உடுத்திக்கிட்டு,
சாமிதனை நெனச்சிகிட்டு,
பெரிசுகளை வணங்கிகிட்டு,
புஸ்வானம் பூத்துகிட்டு,
இனிப்புதனை நக்கிகிட்டு,
காரம்தனை ஏத்திகிட்டு,
டி வி தனை கட்டிகிட்டு,
ரிலீஸ் படத்த பாத்துகிட்டு,
ரிலாக்ஸா ஓட்டிக்கிட்டு...
இருக்கத்தானே தீபாவளி...!

தீபாவளி -1

வரிசையாய் ஒளி
விளக்காய் ஒளி
வெடியாய் ஒளி
மத்தாப்பாய் ஒளி
என எங்கும் ஒளியாய்
ஒரு பண்டிகை!

யாவருக்கும் இனி
ஒளிமயமாய் வாழ்விருக்க
ஒளி அறிந்தோருக்கு
மட்டுமிது தீபாவளி!

ஒளியே பாராது
என்றுமிருப்போரும்
ஒளி பார்த்திடும்
நாளதிலே
உலகெங்கும்
வந்திடும் தீபாவளி!

Saturday, October 22, 2011

கடன்

தீர்த்தது பாதி
தீர்ந்தது பாதி
ஆயுளிலும் மீதி

பிறந்ததும் பெற்றதும்
வளர்ந்ததும் வளர்த்ததும்
கடனே இங்கு

இறந்தாலும் போகாதிருக்கும்
இறைவனுக்கு மட்டும் தெரியும்

கடனில்லாத வாழ்வில்லையென்று
மற்றோருக்கு வார்த்தை
மட்டும் மிச்சமாய் இருக்கும்
கடனாய் நிற்கும்!

Friday, October 21, 2011

விதி

அறியாத, தெரியாத வாழ்வில்
பிறந்ததும் இறப்பதும் விதியே...!

நாளையும், வருடம்
தாண்டியும் திட்டமிடுவோம்...!
விதித்தது எதுவென்றறியாது
விதிப்பயன் என்றே வசித்திருப்போம்...!!

Thursday, October 20, 2011

ஓர் மடக்கு நீர்

நீரின் மகத்துவம்
நிதம் தெரியும் அதிசயம்!

குழப்பி விட்டாலும்
தெளிந்து போகும்...
எரிந்தே இருந்தாலும்
அணைத்திடும்...

குளிர்ந்த நீரினிலே
தலை நனைத்திடவே
துரோகமும், மன ரணமும்,
வலியும் ஏமாற்றமும்
மறைந்திடுமே...!

சினந்தனிலே
மன சுமைதனிலே
விழிகளில் கண்ணீருடன்
நீ இருக்கையிலே,
ஓர் மடக்கு நீர் போதும்...
ஓராயிரம் கவலைகள் போகும்!

Wednesday, October 19, 2011

எல்லைக்கோடு

நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல..
வீட்டினுள்ளும் இருக்குது!

எல்லை மீறி வாழ்தலே
மரபான இயற்கையாகும்...
எல்லை மீறாதிருத்தலே
செயற்கையாய் நன்மை தரும்...

இயற்கை நசித்து,
செயற்கை ரசித்து,
நலம் பெறும் உலகமிது ...
இல்லா எல்லையை விதித்து,
எல்லைக்கோடோடு வாழும் உலகிது...!

Sunday, October 16, 2011

அலை!

பையன் நல்லா பரிட்சை எழுதுவானா..?
பஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...?
பாஸு தாளிக்காம இருப்பாரா...?
பெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..!
மழை வரும்போல இருக்கே...!
வெங்காய வாசன தூக்குதே...!
என்ன கவிதை எழுதுறது ...?
வீக் எண்ட் எங்க போலாம்...?
அம்மாடி, மணியாச்சே!

அமைதி வேண்டி
அமர்ந்து செய்த
அய்ந்து நிமிட தியானத்தில்...
அலைபாயும் மனது...!!

Saturday, October 15, 2011

வேர்கள்

என் தேசத்து வேரெல்லாம்
கடல் தாண்டி வளர்ந்ததுவே!
வேர் வைத்த வேர்வை
தேசத்தில் வேறாயானதே;

வேர்வை தேடும் வேரிருக்க
என் தேசம் தழைத்திடுமே!
வேறாயிருக்க வேரின்றி
ஆயிடுமே!!

வேர் வைக்க வேர்த்திடுமென்றே
வேருக்கும் ஓதிடுவோம்...
வேரெல்லாம் தேசத்தோடு
சேர்த்தே வளர்த்திடுவோம்...
தேசத்து வேர்களாய்!

Friday, October 14, 2011

தர்மம்

தீராது தந்தும் தருமனுக்கு
வாராதிருந்த தர்மம்..

போறாது என்று கேட்ட
கண்ணனுக்கு அசராது
கர்ணன் தந்திட்ட தர்மம்..

கேளாத குசேலனை
பிடிஅவலினில் குபேரனாய்
ஆக்கிய தர்மம்..

பலன் தேடாத செய்கையிலே,
யாருக்கும் சேர்ந்திருக்கும்..!

Thursday, October 13, 2011

காமம்

விடலையில் கனவாய்,
இளமையில் புதிராய்,
முதுமையில் தெளிவாய்
இல்லாதிருக்க இணங்கும்
மனது அறிந்திருக்க,
இணங்கா வயதாய்,
யாரையும் தேடவைக்கும்...
பேதமில்லா தெய்வம் இது!
பழகாது வந்திடும் தியானமிது!

Wednesday, October 12, 2011

வாழ்வு

எந்நேரம் குந்திகிட்டு,
சாமிகிட்ட தவமிருந்தா,
வரம்தான் கெடச்சிருமா?
வளம்தான் சேந்திருமா?

துண்ணூறு இட்டுகிட்டு,
சாமிதனை வணங்கி விட்டு,
கடமைதனை செஞ்சி போட்டா,
வாழ்வும்தானே செழிச்சிருமே...!
பொறந்த கடன் அடஞ்சிருமே...!!

Tuesday, October 11, 2011

இல்லா இருப்பு

முதலில் பிறந்தது எமனாம்
அதுவே வேத சொல்லாம்...

இருப்பது இறப்பதற்கே
என்று புரிவதற்கே
இறப்பை பிறப்பித்து,
வாழ்வை தருவித்தவன்...

புரிந்தோர்க்கு இறப்பும்
நாளைய இருப்பாகும்...
இருப்பென்பதே
இல்லா பொருளாகும்..!

Monday, October 10, 2011

காதல் பத்தியம்

எடையில்லா இடையோடு
நடை பயின்றாள்......
அந்நினைவே பத்தியமாய்
எடையிழந்தான் அவன்..!

Sunday, October 9, 2011

வெளங்கல?!

புரியல?! படிச்சுபோட்டும் இத துவங்கலாம்...

காதல் புரியும் மாமா...
கன்னிய காக்க வெக்கலாமா...?

சாதி சனம் கூட்டியாந்து...
மேள தாளம் கொட்டிப்போட்டு...
தாலி ஒண்ண கட்டிபோட்டா
என்னிய நானும் கொடுத்திடுவேன்...

ஊரறிய சேத்துகிட்டா...
ஊரடங்கப்போ தந்திடுவேன்...

மையெழுதும் கண்ணில...
மனசெல்லாம் உன்னுல...
உடம்ப தேடும் வயசுல...
உனக்கு வெளங்க வெக்க முடியல...!

Saturday, October 8, 2011

புரியல?!

கண்ணுல காட்டுற ஆசையில,
அது தரும் போதையில...
மாதவியாத்தான் மயக்குற..!

மனசு தந்த தெகிரியத்துல,
கைகள் நீளும் நேரத்துல...
கண்ணகியாத்தான் தீய்க்குற...!

சுட்டாத்தானே
தங்கமும் துலங்குது...!
கைப்பட்டாத்தானே
பெண்மையும் மலருது..!
இது உனக்கு மட்டும்
ஏன் புரியாம போகுது...?!

-தொடரும் (?!)

Friday, October 7, 2011

காதலன் காதலியை வர்ணித்தல்..

கண்

என் முகம் காட்டும்,
அவள் மனம் காட்டும்,
மதி மயக்கும்,
விடாது என்னை
கட்டியிழுக்கும்!

நாசி

காற்றாய், மூச்சாய்
அவள் நாசியில்...
பின் காதலாய்,
காதலின் நினைவாய் ஆனது!

செவி

இருபக்கமும் பளபளக்க
தோடாய் தொங்கவிட்டு
வருவதில்,
என் மனதும்
தொங்கிப்போகுமதில்!


வாய்

மதுரமாய் மொழியாகும்
முத்தாய் சிரிப்பாகும்
மொத்தமாய் அள்ளிப்போகும்

காதல் தருவாயின்,
வாழ்வு தரும் வாயிலாய்...
வாழ்வின் வாசலாய்..!

Thursday, October 6, 2011

சந்ததி

பாட்டனும் தந்தையும்
பேசியதில்லை...
தந்தையும் நானும்
கைகோர்த்ததில்லை...
மகனிடம் நான்
எதையும் மறைப்பதில்லை...

இடைவெளி குறைதல்
குற்றமில்லை...!
குறைவாய் ஏதுமில்லை...!

Wednesday, October 5, 2011

காதல்

வலி என்றறிந்தும்,
வலிய வரவழைத்து,
வருத்திக்கொள்ளும்
விநோதம்!

Tuesday, October 4, 2011

எறிதல்

கல்லடிச்ச கொளத்தில
வானம்தான் கலஞ்சாச்சி...!

சொல்லடிச்ச நொடில
உறவுதான் தொலஞ்சாச்சி...!

Monday, October 3, 2011

காதலில் இருந்ததென்ன...?

வானவில்லாய் வந்ததென்ன...
வண்ணத்துப்பூச்சியாய் பறந்ததென்ன...

மனதை அள்ளிச் சென்றதென்ன..
நெஞ்சைக் கிள்ளிப் போனதென்ன..

மாற்றான் கைப் பிடித்ததென்ன...
சொல்லாமல் கொன்றதென்ன...

பித்துப் பிடித்ததென்ன...
செத்து வாழ்வதென்ன..

கேள்வியாய் நின்றதென்ன...
கேலியாய் ஆனதென்ன...

காதலில் இருந்ததென்ன...
காதலி போன பின்ன..?

Sunday, October 2, 2011

ஸ்டிக்கர் பொட்டு!

பெரிய மண்டபம் எடுத்து..
சீரு செனத்தி வெச்சி...
கண்ணாலம்தான் பண்ணீரு...!

அயல்நாடு சோடியாப்போனா
பொண்ணு, மருமவப்புள்ள...
பாத்த கண்ணுலதான் கண்ணீரு..!

சீரு செனத்தி என்னாச்சி...?
வங்கி இருப்புல மண்ணாச்சி...!

பொண்ணு நெத்தியில,
ஸ்டிக்கர் பொட்டுதான் மிச்சமாச்சி...!

Saturday, October 1, 2011

மித வேகம்

எதிலும் வேகம்,
எப்பொழுதும் வேகம்,
இன்றைய வாழ்வில்...!

திடீர் வேகம் தடுமாற்றும்...!
மித வேகம் முன்னேற்றும்..!.
வேகமும் மிதமாய்ததான்
வருமென உண்மை உணர்த்தும்...!!

இதை அறியாதோர் வேகம் தடையாகும்...!
அறிந்தோர்க்கு மாத்திரம் துரிதமாகும்...!!

Friday, September 30, 2011

ஒரு கோடு

பிறந்தும், வளர்ந்தும்,
வாழ்ந்தும், இறந்தும்,
இருக்கும் உலகில்...

வளர்ந்ததின், வாழ்ந்ததின்
அர்த்தம் அறிவிக்காது
பிறப்பு - இறப்பு என்று
மட்டுமே சேதி சொல்லும்!

இறந்தவர் நம்மிடை
இல்லாததைச் சொல்லும்...!!
நமக்கு நாளை இல்லாமல்
போவதைச் சொல்லும்...!

Thursday, September 29, 2011

ஏன் இறைவா?

புகழுக்கு நாணி,
கர்வத்திற்குக் கூனி,
பணிவிற்குப் பழகி,
பந்தத்திற்க்கடங்கி,
பாசத்திற்கு மயங்கி,
நேசத்திற்கு முடங்கி,
உறவுக்கு ஏங்கியிருக்கும்
பிறப்பாய் நான்...

உருவம் இருந்தும்
உறவும், பலரும்,
எனை அருவமாய்
பார்க்கும் அவலம்...!

இவையாவும் புரியும்படி
படைத்ததும்...

ஏன் இறைவா?!

Wednesday, September 28, 2011

காதல் குளம்

ஓரிடத்திலிருக்கும்,
தீராதிருக்கும்,
அமுதசுரபியாயிருக்கும்,
அனுபவம் தந்திருக்கும்,
சிரிக்கச் சிரித்திருக்கும்,
சலனப்படச் சலனமாகும்,
முங்கி எழ, மோகம் தரும்,
மீண்டும் முங்கச்சொல்லும்...

எல்லையை என்னிடத்தில் தந்தே...
எல்லையில்லாதிருக்கும்!

Tuesday, September 27, 2011

புரிதல்

அறிவதற்கு ஆயிரம் உண்டிங்கு..
அறிவதெல்லாம் புரிவதில்லை!
புரியாதது அறிந்தும் பயனில்லை..!!

சிறிதாய் அறிந்தாலும், புரிந்தே
அறிதல் சிறப்பாகும்...!
வாழ்வை சிறப்பாக்கும்..!!

Monday, September 26, 2011

ஏணி

ஏற்றம் தரும் ஏணிக்கு
என்றும் ஏற்றமில்லை!
தன்னிலை அறிந்து,
தன்னிடமே இருந்திட,
ஏமாற்றமில்லை!!

ஏறுவோர் இறுங்கிடுவர்
என்றறிந்த ஏணி போல்,
ஏற்றிவிடு மற்றவரை...!
இறங்குவோரை தாங்கிடவே
நீ நிலையாய் இருந்திட,
ஏமாற்றமில்லை வாழ்விலே!!

Sunday, September 25, 2011

பிரிவு

பிரிந்து நீ செல்லுமுன்னே,
அந்நினைவே துயர் தருமிங்கே!

நினைவிலும் பிரியாதிருக்க,
பிரிவென்றே சொல்லாதிரு,
என் அன்பே...!

Thursday, September 22, 2011

கானல் நீர்

பொருட்செல்வ பற்று
கானல் நீர் போல்...

எல்லை காட்டும்..
எல்லை சென்றடைய,
எல்லையில்லாது போகும்..!!

Wednesday, September 21, 2011

ஓர் கல்

குளத்தில் எறிந்தே
சலனமாக்கலாம்....
இலக்கில் எறிந்தே
கனியும் கொய்யலாம்...

வீசும் கையும்,
வீச்சும் நம்மிடத்தே...
வினையாயும்
விதையாயும் அவை...
அமைவதோ..
நம் எண்ணமிடத்தே..!!

Tuesday, September 20, 2011

காதல் கவிதை

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை! எழுதியது நினைவிருக்கலாம்...! இது முழுக்க முழுக்க சினிமாத் தலைப்புகள் வைத்து எழுதப்பட்ட கவிதை...! வேறு வார்த்தைகளைச் சேர்க்கக்கூடாது என்கிற வைராக்கியம்(?!)

எனக்கு 20 உனக்கு 18
இளமை ஊஞ்சலாடுகிறது ...!

கண் சிமிட்டும் நேரம்
காதல் வைரஸ்....
'சில்லு'னு ஒரு காதல்...

டார்லிங் டார்லிங் டார்லிங்...!
'ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே...!'
வா இந்த பக்கம்...!

கெட்டி மேளம்...?
தாலி பாக்கியம்..?
போலீஸ்காரன் மகள்...??!!

காதலிக்க நேரமில்லை...!!!

Monday, September 19, 2011

கவிதை திர'ட்டு'!

காதலி
நோட்டு,
காதலன்
பாட்டு...!

அப்பா
திட்டு...
கண்டிப்பா
வெட்டு..!

வீட்டை
விட்டு,
கம்பி
நீட்டு..!

கால்
கட்டு...
கட்டில்
தொட்டு,
தொட்டில்
ஆட்டு...!

இல்லை
துட்டு...!
கணவன்
சுட்டு...

அழுத
சிட்டு..
புத்தி
மட்டு..!

Sunday, September 18, 2011

வீழ்தலில் வாழ்தல்

சொல்லும் சொல்லில் வில்லும்
வைத்திங்கு வாழ்க்கை..
எய்தவனும் இலக்கும் வீழும்
விநோத வாழ்க்கை...

வீழ்தல் இங்கே தின நிகழ்வு;
வீழ்ந்த பின் எழுதலில்
அல்லவோ வாழ்வு??

வீழ்தலில் வீழ்ந்தே கிடத்தல்
இறப்பாகும்....
மீண்டும் இலக்காயினும் எழுதலே
சிறப்பாகும்...!

Saturday, September 17, 2011

மழைத்துளி

கடலில் சேர உருத்தெரியாது போகும்...
நிலத்தில் விழ மறைந்து போகும்...
கழிவில் விழ கழிவாகும்...

சிப்பிக்குள் விழ முத்தாகும்...
காரிகை முதல் கடவுள் வரை
அலங்கரிக்கும் சொத்தாகும்..!!

சேருமிடம் பொறுத்தே
மழைத்துளிக்கு கூட மகத்துவம்...
மாந்தர் நாம் எம்மாத்திரம்?

தேடி சேர்வோம்...
சேர்ந்தே தேடுவோம்...
நல்லிடத்தை..!!

Friday, September 16, 2011

உன் வசமாகும்

கடலும் மழைத்துளியாய் பொழியுதே!
காற்றும் உயிர் மூச்சாய் பெருகுதே!
மரங்கள் விதையாய் வளருதே!
சிறிதாய் யாவுமிருக்க கைக்குள் அடங்குதே!
பெரிதாயிருக்க் நோக்கில் மட்டும் பொருந்துதே!

பெரிதாயிருப்பதை சிறிதாய் ஆக்கவே,
உலகம் கையில் அடங்குமே...!
உன் வசமாகுமே..!!

Thursday, September 15, 2011

தாம்பத்ய தேர்

தாம்பத்ய தேரில்
வாழ்க்கை பவனி...!
இரு மாடுகளாய்
ஓர் வாழ்க்கை
இழுக்கும் பணி...!

சேராது சேருமிசை
அபஸ்வரமாய்...
இருந்தும் இனிக்கும்
இசையாகும்...!

திசை வேறாயிருந்தாலும்
சேர்ந்திழுத்து...
முன்னே இட்டுச் செல்லும்!

Wednesday, September 14, 2011

இணைதல்

இரு பாலரின் இணைதல்,
ஆலயத்தின் கருவறை போல்...
இருளினுள் தெய்வம் தேடும்,
செயலிலும் செயலிழந்திருக்கும்,
தன்னிலையிழந்தும் வாழ்ந்திருக்கும்,
முன்னிலையில்லாது வாழ்வுருவாக்கும்...!

Tuesday, September 13, 2011

அசையா உயிர்

அசையா உயிரும் அசையும்,
அசையும் உயிரிடத்தே...

அசையும் உயிரும் அசையாது போகும்...
அசையாது செய்யும் அசைவினிலே!

உயிரின் உயிர் அசைவில் இருக்க,
அசையாததெல்லாம் உயிராகிடுமே...
நம் அசைவின் பொருளாகிடுமே..!

-Inspired by an art named “Still Life”in Hyderabad Salar Jung Museum

Sunday, September 11, 2011

கண் தானம்

இறப்போர் ஈன்றிடவே,
பெற்றவர் மூலம்,
மீண்டும் பிறந்திடுவாரே..!

பகலிலும் இரவு கண்ட
பெற்றவரோ
இருளிலும் ஒளி காண்பாரே...!

நம் கண் இறவாது
இருந்திடவே
மறவாது கண் தானம்
செய்திடுவோமே..!

Saturday, September 10, 2011

நம் கையில்

வலியும் சுகமும்
நம்முள் நாம் தருவதே
சுகமும் துக்கமும்
நம்மில் நாம் தருவிப்பதே

இனிப்பும் துவர்ப்பும்
நமக்கு நாம் சுவைப்பதே
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நாம் நமக்கு தருவதே

நம் கையில் தான்
யாவுமிருக்குது இங்கே...!

Friday, September 9, 2011

ஏழ்மை பயில்

வாழ்வில் உயர,
ஏழ்மை பயில வேண்டும்!
ஏழ்மை அறியா வாழ்வு
அனுபவம் தரா படிப்பாகும்..!!

அன்றே அரசரும்
குருகுலமாய்
ஏழ்மை பயின்றார்
நாடாள...!
இன்று நாமும்
ஏழ்மை பயின்றிடுவோம்
நம்மை ஆளவே..!!

Thursday, September 8, 2011

நட்பின் ஊடல்

நட்பின் ஊடே
ஊடலுண்டு!
கேட்காதிருக்கும்,
பார்க்காதிருக்கும்,
பேசாதிருக்கும்...!

பழமை எண்ணங்கள் கூடி,
மீண்டும் கூடலாகும்,
மீண்டும் நட்பாகும்...!!

Wednesday, September 7, 2011

மனதே கடவுள்

பயின்றதும், பயிற்றுவித்ததும்
பயனுள்ள அனுபவமாகும்..
அனுபவமே கடவுளாகும்..
போதனை கேட்டுக்கொள்ளும்..!

நாமே அனுபவமாக,
நம் மனதே கடவுளாகும்..!
போதிக்கும்!!

Tuesday, September 6, 2011

நெடுஞ்சாலைப் பயணமாய்...(2)

எங்களை ஊக்குவிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி..!

நண்பா, பத்தாயிரம் என்ற எண்ணைப்பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது, இதில் தங்களின் பொன்னான நேரத்தை நம் பதிவிற்கு வந்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நம் நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும், அவர்கள் இன்றி இந்த எண் இல்லை.

அதே போல் நீ இன்றி உன் உந்துதல் இன்றி நான் தினமொரு கவிதை என்று ஆரம்பித்திருக்க முடியாது இது இன்னும் செம்மையாக தொடர அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்…

நம் நட்பு போல் நம் வாசகர்களின் நட்பும் ஊக்கமும் போல் என்றும் நிலைத்திருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஒத்திருந்து, ஓடித்திரிந்து,
ஊழியம் செய்தே...
உள்ளம் சிதைந்தோம்!

சிதைந்தது சரி பார்க்க,
சிந்தனை களைந்தோம்...
பயணம் தொடங்கி,
கவிதை வளர்த்தோம்..!

கைகோர்த்திங்கு பயணித்திருக்க...
கடந்த பாதையும், தூரமும்
கடந்ததை விட,
இருப்பதை காட்டும்!!

இதில் என் அடி
கடந்த சாலையும்
உன் அடி தாண்டிய
சாலையும் கணக்கில் வாரா...!

ஒத்திருந்து, ஓடி திரிய,
இருக்கும் சாலையே
நெடுஞ்சாலை என்றுணர்த்தும்...
பயணம் தொடர்ந்திருக்கும்,
சிந்தனை களைந்திருக்கும்,
இது நெடுஞ்சாலைபயணம்,
நிற்காது முடியாதிருக்கும்
தொடர்பயணம்,
நம் நட்பு போல்!

வாசகரின் உந்துதலில்
விடிவெள்ளி தேடும்
கவிதைப்பயணம் இது….!!

ஏழை

நிலமில்லாது நின்றிடுவர்...
வீடில்லாது வாழ்ந்திடுவர்...

கூடில்லாதும் சுற்றம் வளர்த்தே,
வேரில்லா மரமாய் இவர்கள்!

விழுது மட்டும் விட்டே
மறைந்திடுவாரே!!

Monday, September 5, 2011

உலகம் உன்னில்...!

விதைக்குள் வேராய்,
முன்னேற்றம் உன்னுள்...!

வேரும், நீரும்,
மன்ணுள்ளே...!

உன் விதைக்கு
நீ நீர் தேட,
வேரும் விண் பார்க்கும்...
தருவாக உருவாகும்..!

மற்றெல்லாம் மண்ணாகும்
காற்றுத்துகளாகும்!!

Sunday, September 4, 2011

உபகார உபத்திரவம்

சிற்றெறும்பு ஒன்றுக்கு
உபகாரமாய் இருந்திடவே,
போக்கை நிறுத்தி,
கையில் இருத்தி,
இலக்கில் சேர்த்தேன்...!

விட்ட நொடியில்
இலக்கின்றி ஆனது..!!

உபகாரம்,
செய்வதில் மட்டுமில்லை
செய்யாதிருத்தலிலும்
உண்டென்றே உணர்ந்தேன்!

Saturday, September 3, 2011

நெடுஞ்சாலைப் பயணமாய்...

அன்புள்ள அனைவருக்கும்,

நம்முடைய வலைதளத்தின் விருந்தினர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

http://inkavi.blogspot.com/

ஜே கே என் பெயரைச் சொன்னாலும்...இதனுடைய நாயகன் என்னமோ ஜே கே தான்....ஜே கையின் சில கவிதைகளைப் படித்தால் (நேரத்தை எடுத்துக்கொண்டு படியுங்கள்!) உங்களுக்குப் புரியும்.....நம்மோடு ஒரு கவிஞன் இருப்பதும் தெரியும்.

இனி என்ன? ஒரு புத்தகம்...? ஒரு ஆல்பம்? தெரியவில்லை. கோடு ஒன்றைப் போட்டிருக்கிறோம்....! நெடுஞ்சாலைப் பயணமாய் அமைய வாழ்த்துங்களேன்...!

என்றும் அன்புடன்,
கேயார்

Friday, September 2, 2011

அந்தரங்கம்

நான் புனைந்து, நான் பாடி,
நான் மட்டும் கேட்குமிசை!

எனக்கு சப்தஸ்வரம்...
மற்றோர் கேட்க அபஸ்வரம்!!

Thursday, September 1, 2011

பிள்ளையாரு வர்றாரு!!


வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!

காதுகளை விசிறிகிட்டு...
தும்பிக்கையை ஆட்டிகிட்டு ...
தொந்திதனை தூக்கிகிட்டு...
வர்றாரரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!

கொயுக்கட்டை துன்னுகிட்டு
கொயு கொயுன்னு இருக்கிறாரு...!
கொண்ட கடலை மென்னுகிட்டு
கொண்டாட்டம் செய்யுறாரு...!
பழங்களை முழுங்கிகிட்டு
பள பளன்னு சொலிக்கிறாரு...!

அலுங்காம, நலுங்காம,
தளுககாதான் பூபோட்டு,
அவர் காலைப் புடிச்சாத்தான்
நல்லத பேச விடுவாரு...!
நல்ல மனசை கொடுப்பாரு...!
'லஸ்மி'யான்ட சொல்லிவிட்டு,
'ரிச்'சா வாழ வெப்பாரு!

சிம்பிள் சாமி அவருதானே...!
அரச மரம் போதும்தானே...!
மஞ்சத்தூளை வெச்சி நாமும் - அவர்
மனசை புடிச்சி வெப்போமே!

மொத சாமி அவருதானே...!
மொத சுளியும் அவருதானே...!
டெய்லி அவரை நெஞ்சில வெச்சா,
கஸ்டமெல்லாம் தொலஞ்சிருமே..!
எல்லாம் சோக்கா முடிஞ்சிருமே...!!

வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!

Wednesday, August 31, 2011

கடற்கரை காதலி!

பட்டுக் கொண்டு...
படர்ந்து கொண்டு..

பற்றிக் கொண்டு..
சுற்றிக் கொண்டு..

நழுவிக் கொண்டு..
இறுகிக் கொண்டு..

அணைத்துக் கொண்டு..
அரவணைத்துக் கொண்டு..

மீண்டும் மீண்டும்
தென்றலே...
என்னைத் தொடு....!

Tuesday, August 30, 2011

தவம்

மீண்டும் மழலையாய் இருக்க
தவமிருப்பேன்...

இளமை திரும்பிட அல்ல..
முதுமை வாராதிருக்க அல்ல...

எந்தையும், தாயும்
மீண்டும் என்னை
பார்த்திருக்க...
கைகோர்த்திருக்கவே...!

Monday, August 29, 2011

என் சினம்

சினத்தை வென்றிடவே
சினங்கொண்டேன்
என் மேலே, என்னுள்ளே...
சினத்தினால் ஏதுமாகதென்றே!
என் சினம் பிறர் மேல் பாய,
உலகம் என்னில் சினங்கொண்டது!
உள்ளம் உண்மையை
இனம் கண்டது!

Sunday, August 28, 2011

ஆழ்மனம்

ஆழ்கடல் மனது இது...
ஆழம் தெரியாது....
எண்ணத்தைக் கொடுத்து,
ஏக்கத்தை வளர்த்து,
விளக்கம் தருமிது...!

உயரம் உயரம் என்றிருக்கும்,
உயர்ந்த பின்னும் தொடர்ந்திருக்கும்,

ஆறாஆசை கொண்டதிது...
குறையாவிசையுமிது..!

வேட்கையைக் கொடுத்து,
வேஷத்தை வளர்த்து,
இலக்கைத் தருமிது...!
புதிரைக் கொடுத்து,
விடுகதை வளர்த்து
விடையும் தருமிது...!

குழப்பம் மிகுந்திருக்கும்...
தேடல் இருந்திருக்கும்..
தெளிந்தும் தொடர்ந்திருக்கும்...!

Saturday, August 27, 2011

இல்லாத தவிப்பு

இருக்கையிலும்,
இணக்கத்திலும்
இணைந்ததிலும்,
நினைப்பிலும்,
எதிலும் தர்க்கமே

எனக்கு அவளிடம்...
இல்லாத நாளில் மட்டும்
தவிப்பானது...!

Friday, August 26, 2011

நட்பு!

மனதிற்கினிய வாக்குரைத்து,
இளமை பகிர்ந்தளித்து,
முதுமையில் கனிந்து,
இறப்பன்றி வேறேதும்
பிரிக்க முடியா உணர்விது...
மடை திறந்த வெள்ளம் போல்,
தடையில்லாது வளரும்..!

Thursday, August 25, 2011

என்றோ எழுதிய கவிதை - 24

இரவு படுத்தால்
விழித்தெழுவது
உன் கையில் இல்லை
எனும்போது...

'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!

Wednesday, August 24, 2011

வாழ்க்கை

கூட்டிக் கழித்துப்
பெருக்கி வகுத்து
வாழ்வதா வாழ்க்கை ?

கூடிக் களித்து,
சுருக்கிப் பகுத்து
வாழ்வோமே வாழ்க்கை!!

Tuesday, August 23, 2011

சுற்றம்

பெற்றவனை அறிந்தவனுக்கு
பெற்றவனே உற்றவனாவான்...
உற்றவன் உடனிருக்க சுற்றமாகும்
அவன் உலகாகும்...

அஃதல்லார்க்கு
சுற்றமே குற்றமாகும்..
உற்றவனேயில்லா
உலகாகும்..!

Monday, August 22, 2011

சிரித்திருப்போம்!

முன் ஜன்ம பகைதனை
மனதிலிருத்தி,
பின்னொரு ஜன்மமதிலே
பழிதீர்க்கும் படலம்...
இதிகாசமாய், புராணமாய்
படித்தறிந்தேன்...

எந்த ஜன்ம
பகைதீர்க்க
பிறந்திட்டேனோ அறிகிலேன்...
பிறந்த பகை தீர்க்க,
நேரமில்லையிங்கு...
முன் ஜன்ம பகை தீர்ப்பதேது?

இறப்பறிந்த பிறப்பிது ஆதலிலே
வாழ்வின் பகை அறுப்போம்...
இறப்பின் பகை தொடுத்தே,
புன்னகை போராட்டம் வளர்ப்போம்...!

பின் ஜன்மமில்லா பிறப்பாய் ஆக,
இந்த ஜன்மம் எல்லாம் சிரித்திருப்போம்!!

Sunday, August 21, 2011

வாழ்வின் அர்த்தம்

கருகி மடிவோம்
என்று அறிந்தும்
விளக்குத்திரியும்,
தீக்குச்சியும்
சுடராகும்...
மேலோங்கி எரியும்...
இருள் அகற்றும்..!!

நம் வாழ்வின்
அர்த்தம் புகட்டும்...!

Friday, August 19, 2011

நிர்ப்பந்தம்

எடையில்லா காற்றும்
எடைதாங்கும்
நிர்ப்பந்தத்தாலே...

விடையில்லா வாழ்வும்
எளிதாகும்
உடைதாங்கும்
உயிரும் உயர்வாகும்...

நிலைமாற்றும்
உருமாற்றும்
உயர்த்தி முகமாற்றும்...

உனை நீ நிர்ப்ப்ந்தித்தாலே..!

Thursday, August 18, 2011

உறவு

நன் நேரத்தில்
நீங்குதல் அறிந்து,

தாமரையிலைத்
தண்ணீராய்
நீங்கியும் நீங்காதிருக்க...

நீடித்து வளரும்...!

Wednesday, August 17, 2011

உன்னில் நான்

மெழுகாய் இருக்கிறேன்
உன்னில் தான் கரைகிறேன்
தன்னை எரித்து
தனக்கே நிழல் தரும்
மெழுகாய் இருக்கிறேன்

சருகாய் ஆகிறேன் நீயின்றி
உதிரும் சருகாய் ஆகிறேன்
தளிராய் இருந்து
வளர்ந்த இடத்தில் மடியும்
சருகாய் ஆகிறேன்

தன் தேனை உயிராய்
தான் கொடுத்தும்
வண்டு கண்டு மிளிரும்
மலராய் மெருகேறி போகிறேன்

உன்னில் சேர்ந்து
மெருகேற்றிக்கொள்கிறேன்...

Tuesday, August 16, 2011

நான் எழுதிய கவிதை....!

உதிர்ந்த இலை...
கசக்கும் காய்...
வெம்பிய பழம்...

கால் சூம்பிய சிறுவன்..
நான்காம் பிறைச் சந்திரன்..
சுவற்றிலட்ட சாணம்...

கடல் நீர்...
கை அளையும் மண்...
கால்களை வருடும் அலை...

மிச்சமான நெருப்பு..
அறுந்துபோன செருப்பு...
வாழ்ந்து கெட்டவனின் இருப்பு..

பேருந்துப் புகை...
சாலையின் குப்பை...
காற்றின் மாசு..
தங்காத தூசு...

சொல்லாத சொல்...
எழுதாத வார்த்தை...
நிரம்பாத பக்கம்..

நான் எழுதிய கவிதை....!

Monday, August 15, 2011

சுதந்திர தினச் சிறப்புக் கவிதைகள்



சுதந்திர தினம்

எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...

எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...

எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...

ஜெய்ஹிந்த்!



என் சுதந்திரம்

எல்லையிலே இருக்குது
எட்டிப்பார்த்தில்லை...!

வீட்டுப் பூட்டில் இருக்குது
திறந்து விட்டதில்லை...!

மனதிலிருக்குது
பகிர்ந்ததில்லை...!

நாட்டு ஏழ்மையிலிருக்குது
எண்ணிப்பார்த்தில்லை...!

உணர்விலெல்லாம் இருக்குது
உணர்த்திக்கொண்டதில்லை...!

கேட்ட சொல்லிலிருக்குது
சொல்லிக்கொண்டதில்லை...!

வரலாறாய் இருக்குது
வாழ்ந்ததில்லை...!

கிடைத்ததில் இருக்குது
விட மனமில்லை....!


எல்லையிலே சுதந்திரம்

இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...

Sunday, August 14, 2011

ஞானத்தேடல்

பிறப்பில் வருவது ஆசை!
இறப்பில் வருவது ஞானம்!

ஆதலில் தான் நான்
தினம் பிறக்கிறேன்!
தினமும் இறக்கிறேன்!!

ஆசையாய் ஞானம்
தேடுகிறேன்!!

Saturday, August 13, 2011

கண்ணீர்

என் வாழ்வின் நிகழ்விலெல்லாம்
கண்ணீருண்டு...

சோகமாய், ஆனந்தமாய், பக்தியாய்,
நன்றியாய், கோபமாய்,
செந்நீரோடு கலந்தே
வந்திடும் அவ்வப்போது...

நிகழ்வெல்லாம் நினைக்கையிலும்
அதே கண்ணீருண்டு...
சேமித்தே வைத்திருப்பேன் எனக்குள்
நினைவை அசைபோட!!


Friday, August 12, 2011

திரிசங்கு சொர்க்கம்

கூரை ஏறி,
விண்ணை தொடும்
எண்ணம் ஆசையாகும்...
தொடுவோர் சிலரே!

பலருக்கு
கூரையும் எட்டாது ...
விண்ணும் கிட்டாது...
தரையும் தெரியாது...
ஏணியே வாழ்வாகும்...
திரிசங்கு சொர்க்கமாகும்!

Thursday, August 11, 2011

எல்லாம் தந்தாயோ?

யாவும் தந்த இறைவா!

இறப்பின் இடமும், நேரமும்
தெரியாது வைத்தாயே...

பேசும் சொல்லின் சூட்சமம்
புரியாது வைத்தாயே...

உறவும் கூட புரிந்திடா
புதிராய் செய்தாயே...

உணர்வும் கூட என் சொல்
கேளாது வைத்தாயே...

எல்லாம் தந்தும்
என் கேள்விக்கு விடையின்றி
போக வைத்தாயே....

இன் சொல்லாய் கேட்கிறேன்
மறு சொல்லாய் சொல்வாயோ...

இறைவா!
எனக்கு எல்லாம் தந்தாயோ?!

Wednesday, August 10, 2011

விரதம்

கிட்டா உணவிற்கு
ஏங்கும் ஏழைக்கு
ஆயுளே விரதமாகும்!

கிட்டும் உணவினை
மதிகட்டி எட்டாது
வைக்கும் மற்றோர்க்கு
விரதமே ஆயுளாகும்!

Sunday, August 7, 2011

ஆசை

ஈடேறும் ஆசைக்கு
மனதும், மதியும்
முயற்சிக்கு ஈடுகொடுக்கும்!

அதையும்
கொடுத்திடாதே
ஈடேறா ஆசைதனுக்கு!

Friday, August 5, 2011

நீரின் அடியில்

என் மன அழுத்தமெல்லாம்
நீரின் அடியில் விட்ட காற்றாய்...

என் கனவெல்லாம்
நீரின் அடியில் இட்ட கண்ணீராய்...

என் பாசமெல்லாம்
நீரின் அடியில் மண்டும் பாசியாய்...

என் உணர்வெல்லாம்
நீரின் அடியில் கிணற்று ஊற்றாய்...

என் எண்ணமெல்லாம்
நீரின் அடியில் அலையாய்...

என் காதலும்
நீரின் அடியில் பளிங்காய்...

என் வாழ்வு மட்டும்
கால பட்ட நீராய்...
பிரதிபலிக்கும் பிம்பமாய்...
அலைந்து, கலைந்தே...
வளர்கிறது!!

Thursday, August 4, 2011

விட்டுக்கொடுத்து

விட்டுக்கொடுத்தால்
இனிமை என்றேன்...

பின்பற்ற
பறைசாற்றினேன்...

பின்பற்றி
இன்பம் கண்டேன்...

என்னையே
விட்டுக்கொடுத்து,
பின்பு உணர்ந்தேன்....

அதையும்
விட்டுக்கொடுத்தாலே
இனிமையென!!

Saturday, July 30, 2011

வயசுக்கோளாறு

பலமிருந்தும் மனமின்றி
இளமையில்!

மனமிருந்தும் பலமின்றி
முதுமையில்!

விடலையாய்,
விட்டேத்தியாய் இருந்திட,
வயசுக்கோளாறென்றே
உலகம் கூறும்!!

Wednesday, July 27, 2011

சிரிப்பு!

வெற்று, வேடிக்கை,
அழகு, ஆனந்தம் - என
சிரிப்பு, சிரிப்பு, பூரிப்பு!

உன்னைப் பார்த்து சிரி!
உன் உருவைப் பார்த்து சிரி!
நினைவில் வைத்து சிரி!
நிஜமாய் நிதமும் சிரி!

தோல்வி கண்டால் சிரி!
துவண்டு போனால் சிரி!
துக்கம் போக சிரி!
ஊக்கம் பெற சிரி!

வயது குறைய சிரி!
வியாதி போக சிரி!
விவாதமின்றி சிரி!
விகாரமின்றி சிரி!
வித் விதமாக சிரி!

கூடி நின்று சிரி!
கூடி வாழ்ந்திட சிரி!
சுகம் பெற்றிட சிரி!
பேரின்பம் அடைந்திட சிரி!

Sunday, July 24, 2011

நீயும் நானும்

நீ எல்லையை நிர்ணயிக்க,
நான் மீறுகிறேன்...
நீ மரபு தனை விதிக்கிறாய்;
நான் தாண்டுகிறேன்...
நீ வரையறுக்க.
நான் கரையின்றி ஆகிறேன்...
கட்டுப்பாடு என்று நீ நினைக்கிறாய்;
விடுதலை என்கிறேன் நான்...

நீ எல்லையாய்,
மரபாய், விதியாய் இருக்க
மீறுதலும், கரை தாண்டுதலுமே
இயற்கையன்றோ?!

நீ எல்லாமாய் இருக்க,
நான் எல்லையாய்,
மரபாய், விதியாய் ஆகுதலே
நியமம் அன்றோ?!

Wednesday, July 20, 2011

நிழல் கவிதை - 2


கடலைப்
பார்த்தமர்ந்து,
அலையோசையில்
நம்மையிழந்து,
கரையோடு
பேச்சாய்
இருந்த்தெல்லாம்
மாறிப்போயாச்சு!

கடலையும்,
கரையையும்,
நெனப்பையும்
வீட்டிலே
அடைச்சு வெச்சாச்சு...
உன்னைப் போல...!!

Monday, July 18, 2011

நிழல் கவிதை - 1


எல்லையில்லா
ஊக்கத்துடன் கடல்...
எதையும் தாங்கும்
பலத்துடன் மணல்..
என்றும் தீரா
முயற்சியுடன் அலை..
அடிக்க அடிக்க
அணைக்கும் கரை...

இவைகளை
நாம் உட்கார்ந்து
பார்த்தால் போறும்...!
வாழ்வில் என்றும்
உற்சாகம் ஊறும்!!

என்றோ எழுதிய கவிதை - 23

பாடிப் பறந்தேன்...!
தாவித் திரிந்தேன்...!
யார் கையிலும் சிக்காத
காற்றின் சுதந்திரம் எனக்கு...!

அனைத்தையும்
'மூன்று முடிச்சு'-களில்
இழந்து விட்டேன்!!

Sunday, July 17, 2011

நிழல் கவிதை!

வாசக அன்பர்களே...!

நிழல் கவிதைக்கு பதில் கவிதை அனுப்புங்களேன்...!


அது உங்கள் பக்கத்தின் பதிவாய் இருக்கலாம்.. அல்லது இங்கு பின்னூட்டமாய் இருக்கட்டும் :-)

பி கு - இங்குதான் அமர்ந்து தோழர் ஜே கே அவர்கள் தினமும் கவிதை எழுதுகிறாராம்!

Saturday, July 16, 2011

ஊட்டச்சத்து

அம்மை அமுதில் துவங்குவது
தந்தை கரம் பிடித்தே வளர்வது

சகோதரி பாசத்தில் செழிப்பது
சகோதரன் கைகோர்க்க நிற்பது
நண்பன் தோளில் சாய்வது

மனையாள் பரிவில் தழைப்பது
மகன் போர்வையில் வாழ்வது

ஊட்ட ஊட்ட ஊருமிது..
அறியாது உள்ளிருக்க..
புரியாது ஊர்ந்திருக்க...
தேவைக்கு மட்டும்
கைக்கொடுக்கும் ஊட்டச்சத்து!!

Friday, July 15, 2011

புவியீர்ப்பு!

வாழும் போதும்,
வாழ்ந்த பின்னும்,

மிதித்தோருக்கும்
உறங்க இடங்கொடுக்கும்
பூமியாயிருக்க....

ஆசையெனக்கு!!

Thursday, July 14, 2011

மின்னல்!

தன்னில் வரும் மின்னலை
தாங்குதே வானம்
என்றே வியந்திருந்தேன்....

உன் பார்வைத்தாக்கம்
என்னில் தெரியும் வரை!

Wednesday, July 13, 2011

கடிகாரத்துவம்!

கடிகாரம்
போல்தான் வாழ்வு!
மற்றவரின் உந்து
சக்தியிலேதான் சுழற்சி!

உந்துதல் நிற்க
காட்சி பொருளாவோம்!
பயனற்று, உயிரற்று,
வெறும் பொருளாவோம்!!

Tuesday, July 12, 2011

தெகட்டாதிருக்கும்...

உண்ணுதலும் கசந்து போகும்,
பழகு தமிழும் கூட துவர்க்கும்,
பேச்சும் தெகட்டிப்போகும்...
அதிகமாகும் போதிலே!

காதல் மட்டும்
தெகட்டாதினித்திருக்கும்
அதிகமாகையிலே..!

Monday, July 11, 2011

வரமும் சாபமும்

காதலிக்க தன்னை மறந்தான்
காதல் வரம் சாபமானது...

தோல்வியில் காதலை அறிந்தான்
சாபமே வரமானது..!

Sunday, July 10, 2011

காத்தலும் அழித்தலும்

காத்தலும் அழித்தலும்
இயற்கையின் இருமுகமாம்!

ஓர் முகம் மறைத்து மறு முகம்
காட்டுவதே இயற்கையாம்!!

Wednesday, July 6, 2011

நீங்கா வாசம்

கூடிய நினைவெல்லாம் சுவாசமாய்..
பேசிய பேச்செல்லாம் வாசமாய்..
தனிமையிலும் தெரியுது!

கூடமெல்லாம் புரண்டாலும்,
மண் வாசம் கூட சேர மறுக்குது..!
கடல் தாண்டி சென்றாலும் கூட
உன் வாசம் என்னுள் நீங்காதிருக்குது..!!

Friday, July 1, 2011

கைவசமாகாதது..

இளமையில் சிந்தையும்
மனதும் உறங்க,
உடல் விழிக்கச்சொன்னது!

முதுமையில் சிந்தையும்
மனதும் விழித்திருக்க,
உடல் உறக்கம் கேட்கிறது!

ஒத்துவரா முரணிது,
வசப்படுத்த நினைத்தும்,
கைவசமாகாதது!!

Thursday, June 30, 2011

தொடு வானம்

அருகில் வர, தூரம் போய்...
தூரம் போக, அருகில் இருப்பதாய்...

உன் காதல் தொடுவானத்தில்
தினமும் தொலைந்து போகிறேன்!!

Wednesday, June 29, 2011

நவீன பசலை!

கட்டிய கை சற்றே அகல,
அவ்வளவில் வந்ததாம்
பசலை அக்காலத்தில்!

பேசிய கைபேசியை
வைத்தவுடன் வந்திடுமாம்
பசலை இக்காலத்தில்!!

Tuesday, June 28, 2011

கொஞ்சம் விட்டு

ஆதியில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே மீண்டும் ஆதியாகும்!
பசியில் கொஞ்சம் விட்டால்
மீண்டும் பசியாகும்!
பாசத்தில் கொஞ்சம் விட்டால்
நேசம் மிகுதியாகும்!
கோபத்தில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே சாதனையாகும்!
தாகத்தில் கொஞ்சம் விட்டால்
மீதமே வேட்கையாகும்!
கச்சையில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே சேமிப்பாகும்!
இச்சையில் கொஞ்சம் விட்டால்
அதுவே மோகமாகும்!
இன்பத்தில் கொஞ்சம் விட்டால்
அனுபவமே ஞானமாகும்!
கொஞ்சமாய் விட்டுவிட,
மீதமே வாழ்வின் ஆதியாகும்!
ஒரு தொடர்கதையாகும்!!

Monday, June 27, 2011

மனையாளின் பிறந்தநாள்

மறதி ஒரு வரம்
என்றே நினைத்திருந்தேன்;
அவளின் பிறந்த நாளை
மறக்கும் வரை!!

மறந்திட்டதை நினைத்தே
சொல்லும் மனது!
சொன்னதே குற்றமாகும்!
குற்றமே வலியாகும்!
வலியே நினைவாகும்!!

நினைவாய் என்றுமிருக்கும்,
அவளின் பிறந்த நாளாய்
மறவாது நினைவிலிருக்கும்!!!

Friday, June 24, 2011

கவிதைக்கு இன்று பிறந்த நாள்! (June 24)


பலமும் பலவீனமும்

முனவர் குணசீலன் அவர்கள் பதிவின் பாதிப்பு

இருகோடுகளாய் இருந்திருக்கும்,
ஒன்றின் அளவே மற்றொன்றின்
அளவுகோலாகும்!

வளர்வதும் குறைவதும்
போலாகும்,
இறுதியில் மனதின்
நிலையாகும்!

Tuesday, June 21, 2011

காதலும் செல்வமும்

இல்லாது ஏங்கியிருக்கும்,
ஏங்கியும் இல்லாதிருக்கும்,
சொல்லாது வந்திருக்கும்,
வந்தும் நிறையாதிருக்கும்,
என்றும் குறைவாயிருக்கும்,
அதுவும் சுகமாயிருக்கும்!!

Monday, June 20, 2011

என்றோ எழுதிய கவிதை - 22

தலையில் வீட்டுக் கடன்...
உடலில் உறவானவரின் கடன்...
நெஞ்சில் நண்பர்களின் கடன்...
உயிரில் உயிரான்வரின் கடன்...
இத்துணை சுமைகளின் நடுவில்...
ஒரு துளி தேனாய்...
இன்றைய கவிதை!

Sunday, June 19, 2011

என்றோ எழுதிய கவிதை - 21

தோழர் ஜே கே 'சொல்லிக்காம கொண்டுக்காம'  போனதால... இதோ இப்ப 'சைடு கேப்ல' நம்ம கவிதை...!

தன்னந்தனியாய் அவள்...
தாகமாய் நான்...!
திகட்டாத தித்திப்பாய் அவள்...
தீயாய் நான்...!
துள்ளலாய் அவள்..
தூண்டில் மீனாய் நான்..!
தெம்மாங்காய் அவள்...
தேனிசையாய் நான்...!
தையலாய் அவள்...
தொட்டு விடும் தூரத்தில் நான்...! - என்றாலும் 
தோல்வியில் முடிந்தது எங்கள் காதல்..!!

Tuesday, June 14, 2011

காதல்வயப்பட்டு

இதழில் கதை
எழுத முற்பட்டு,
இடையில்
என்னையும் சேர்த்தெழுதி,
இறுதியில்
அவள் கதை எனதானது!
என் கதை
என்று இல்லாது போனது!!

Monday, June 13, 2011

காதல் நோக்கு!

முள்ளில்லா கடிகாரம்
கையில் கட்டி,
வாராதிருந்தாலும்
காத்திருக்க வைக்கும்!
வாராத சாலையை
பார்த்திருக்க வைக்கும்!!

இரு கண்களிலும்
வேறு உலகின்றி
காதல் மட்டும்
நிறைந்திருக்கும்!!

Sunday, June 12, 2011

முதுமைக்காதல்

முதுமை முன் நடக்க,
பின் நோக்கி சரி பார்க்கும்;
தன்னவளின் கதி பார்க்கும்!

பார்வையில் வைத்திருக்கும்,
மனதில் சார்ந்திருக்கும்,

சொல்லாது ஒருவர்
மற்றவரில் வாழ்ந்திருக்கும்!

Saturday, June 11, 2011

தன்னை இழந்து...

தன்னை வதைத்து,
பட்டுப்பூச்சி, பட்டாய் அவளை அணைத்தது!

தன்னையே தந்து,
பூக்களும் அவளை அடைந்தன!

தன்னை இழைத்து,
மஞ்சளும் அவளை பொலிவித்தது!

தன்னை சிதைத்து,
மருதாணியும் அவளில் சிவந்தது!

தன்னையே உருமாற்றி,
தங்கமும் அவளை அலங்கரித்தது!

தன்னை உருக்கி,
வெள்ளியும் அவளுக்கு கொலுசானது!

இவை பார்த்து தன்னை இழந்தே,
அவனும் அவளை அடைந்தான்!

Friday, June 10, 2011

காதல் திருமணம்

இரு மனம் ஒன்றிணைந்து,
ஒரு மனமாய் ஆக்கிடும்!
பல மனம் மணமிழந்து,
காதலில்லாதிருத்திடும்!!

விரிசல் முகம் காட்டும்
கண்ணாடியிது,
ஒர் முகம் தேட
பன்முகம் காட்டும்!

எதிரில் கண்ணாடியாய்
இருந்திடினும்
விரிசல் மட்டும்
முகத்தோடு இருந்திருக்கும்
பிம்பமாய்!

அதிலும் காதல்
தழைத்திருக்கும்,
இரு மனம் ஒன்றிணைந்து,
ஒரு மனமாய்!!

Thursday, June 9, 2011

மரணத்தில் மரணம்

மறதியில் நினைவுகள் மரணிக்கும்,
நினைவுகளிலும் மறதி பயணிக்கும்!

பிரிவினில் இணைதல் இருந்திருக்கும்,
இணைதலில் பிரிவு ஒளிந்திருக்கும்!

தோல்வியில் வெற்றி வித்திருக்கும்,
வெற்றியில் தோல்வி விழித்திருக்கும்!

இங்கே மரணத்தில் மரணம் காணும்
முரண் இருக்கும்!

கொள்ளி எரி கொண்டு,
சவப்பெட்டி பொதி கொண்டு,
மானுடர் மரணிக்க,
சுற்றம் மரணம் காணும் சூத்திரம்!

பார்த்தாலே புரியும்,
பார்க்காததில் மறையும் தந்திரம்,
மரணத்தில் மரணம்!

Wednesday, June 8, 2011

பிரிவு

உள்ள வரை
உள்ளவரை
காணாதிருக்கும்!

இல்லாதிருக்க
தேடவைக்கும்!

வரும்வரை
வாட வைக்கும்!

வந்த பின்
செய்வதறியாது
நிற்க வைக்கும்!

Tuesday, June 7, 2011

இல்லாது போகும் தெய்வம்

தீமையும், தவறும்,
தீராத் துன்பமும்
தானிழைத்து,
தானறிந்து வருந்தும்
மனமெல்லாம் தெய்வமே!

அறிந்தும், வருந்தாதிருக்க
தெய்வமே இல்லாது
போகுமே அவர்க்கு!

Monday, June 6, 2011

நிழல் மேகம்

நீல வானை மறைத்து,
கூரை தாண்டி,
சாலை அடைத்து,
வீச்சுக் காற்றோடு,
நிழல் பரப்பி
என்னைக் கடந்து
செல்லக்கண்டேன்!

என் காதலியின்
வருகை போல்!

Sunday, June 5, 2011

தொலைந்த தேடல்

விதையில் வேர் தேடி,
விருக்ஷம் தொலைத்து,
சதையில் சுகம் தேடி,
இன்பம் தொலைத்து,
மமதையில் கெளரவம் தேடி,
ஞானம் தொலைத்து,
சிதையில் மரணம் தேடி,
காரணம் தொலைத்து,

அவசரத்தேடலில்
தன்னையே தொலைத்தது அறிய,
தொலைத்ததெல்லாம் மீண்டும் தேட,
இன்னுமொரு ஜன்மம் வேண்டுமென்றே
இறைவனை தேடிடுவாரே!!

Saturday, June 4, 2011

மரணப் பயணம்!

சமீபத்தில் எங்கள் நண்பர் குழுவைப் புரட்டிப் போட்ட மரணம் அது...காயங்களுக்குத் தன் நாவாலேயே ஆறுதல் தேடும் பூனையைப் போல....எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொண்ட ஆறுதல்...

ஜே கே! நம் சந்ததியில் துவங்கி விட்டதடா மரணப் பயணம்... உன் கவிதை எனது கண்களை மேலும் பனிக்கச் செய்து விட்டதடா!


-கேயார்

கயவராய் பலர் இப்பூமியில்...
கடுஞ்சொல் ஊனத்தோடு சிலர்...
பழி உணர்ச்சியில் இன்னும் சிலர்...
துரோகியாய் கொஞ்சம் பேர்...
புன்னகையே தெரியாதோர் பலர்...
வஞ்சம் மனதிடை கொண்டோரும் உளர்...
என இவ்வுலகில்
பாவிகளுக்கெல்லாம் இடமிருக்க...

சிரித்த முகமாய், இனிய சொல் பேசி,
கடமைக்கென்று ஊர் ஊராய் திரிந்து,
கண்ணியமாய் வாழ்ந்து,
கடவுளை நம்பினவருக்கேன் மரணம்!

அவர் மரணித்து இல்லாதிருக்க,
அவர்தம் உறவுகள் இருந்தும்,
மரணிப்பது என்ன நியதி?
புரியாத புதிராய் பல கேள்விகள்...

கண்ணீர் துளியாய் இமைகள் பாரம் சுமக்க,
மனது “அத்திம்பேருக்கு”
அவரின் ஆன்மாவுக்கு,
கடவுளிடை சேர்ந்திட,
சேர்ந்தே அவரின்
மனையாளையும்,மக்களையும்,
கடவுளாய்க் காத்திட....
ஆழ்ந்த பாரத்துடன்,
மனமார வேண்டிக்கொள்கிறேன்!

Monday, May 30, 2011

இடுகாடு

நிழலும் இலாது ஓரிடம்,
ஈட்டியது ஏதுமில்லாது இடுமிடம்!

இட்டபின், இட்டவரும் ஈட்டியவரும்,
ஏதுமிலாது இருக்குமிடம்!

நாடு இல்லையெனிலும்,
தன்னில் பஞ்சமில்லாது,
யாவருக்கும் ஓரிடம்!

Sunday, May 29, 2011

இறைவனடி

பொன்னடி தான் பணிந்து,
அவனடி அடைந்திடவே முயலுவார்;

தன்னடி தானறியாதிருக்க
இறைவனடியறிந்து அடைந்திட,
அவர்க்கு காலமாகும்!
அவர்காலம் ஆகும்!!

Saturday, May 28, 2011

தீக்குச்சி

ஆக்கலையும்,
அழித்தலையும்,
சிரத்தில் நிறுத்தி,
அக்னிக்குஞ்சை
ஒளித்திருக்கும்!

தீ தரும் வரை மதிப்போடு;
தந்த பின் மதிப்பேது?!

Tuesday, May 24, 2011

சுடுசொல்

சுட்ட பால் கண்டபின்,
ஐந்தறிவு பூனையும்
ஓடித்தான் போகும்!

சுடு சொல் தந்து, சூடு பட்டும்
எனக்கு சுடு சொல் விடும்
ஆறாம் அறிவுத்தான்
ஓடி போகிறது!

Monday, May 23, 2011

மெளன ஓசை

கண்கள் பேசும்,
உணர்வுகள் உணர்த்தும்,
காற்றின் வாசம் விளித்து,
திரும்ப வைக்கும்!

காதலில், காதலின் வாழ்தலில்,
அதனின் ஈர்த்தலில், வருமோசை;
காதலில் இருப்போர்க்கு மட்டும்
கேட்கும் மெளன ஓசை!!

Sunday, May 22, 2011

வெறுமை

சொத்தும், சுகமும்,
பகையும், கோபமும்,
பகட்டும், கெளரவமும்,
வீண்பிடிவாதமும்,
மனதின் அழுத்தமும்,
இறுதியில் வெறுமையாய்
யாவும் காணாது போகும்!

தெரிந்தும்,அறிந்தும்,
மாறாதிருக்கும்
மனமும், மனிதரும்
உலகில் இருந்தும்
இல்லாதிருக்கும்
வெறுமைபோலன்றோ?

Saturday, May 21, 2011

மறதி

வன்மம், தீமை,
சுடுசொல் பிறர்தர,
இனியும் வருமென்றறிந்தும்
மறந்திட, வளர்ந்திட,
உறவு வளர்த்திட
இறைவன் தந்த வசதி!

Friday, May 20, 2011

வாடாமல்லி

மனையாளுக்கென்று
பேர் சொல்லி கொடுத்தார்,
நம்பி வாங்கி வந்தேன்.

கத்திரி வெய்யிலில்
வீடு வருமுன் வாடியது!

வாடிய மலரையும்
வாடாமல்லி சிரித்தபடி
சூடிக்கொண்டாள்!!

Thursday, May 19, 2011

மெளன வலி

ஊடலில் காதலியின் மெளனம்,
தேடலில் கிடைக்காத மெளனம்,
இறப்பின் விளிம்பின் மெளனம்,
உறவின் சர்ச்சையின் மெளனம்,
பிரிவின் உணர்வின் மெளனம்,
வலி தரும் சத்தமின்றி
மெளனமாய்!

சத்தமில்லாது...

சத்தமின்றி நோக்கும் மனக்கண்,
பிடித்தவரை மட்டும் பார்க்கும்!
வாழ்வு இனிமையாகும்!

பார்க்கும் கண்ணை புரிந்து,
பார்த்தவரும் சத்தமின்றி படித்திட,
புரிதல் உருவாகும்!
காதல் வாழ்வாகும்!!

Wednesday, May 18, 2011

மனத்திரை

திரை ஒன்று வைத்தே
மனதை சிலர் மூடிடுவார் ;
யாரும் வாரதிருக்க அல்ல!

அத்திரை அகற்றி தன்
யார் என்றறியவே
உள் நோக்குவார்!

Tuesday, May 17, 2011

நாணம்

தெரியாது வந்திருக்கும்!
தெரிந்த பின் மறைந்திருக்கும்!
புரியாத சுகமிருக்கும்!
புரிந்தும் மறைத்திருக்கும்!
வருகையிலும், வந்தபின்னும்
அழகாயிருக்கும்!

Monday, May 16, 2011

சொல்!

சொல்லில் இருக்கும் வருத்தம்,
சொல்லாமல் விட்டதிலும் துரத்தும்!
சொல்லிவிட்டதிலும் வருத்தும்!

நேரத்தில் வராதிருக்கும் சொல்,
வரக்கூடாதிருந்து வந்த சொல்லிலும்,
வருந்தும் நேரம் இருக்கும்!

Tuesday, May 10, 2011

காதல் மதம்!

மதபேதம் இருக்கக் கூடாதென்றேன்!
மதவெறி ஓழிய வேண்டுமென்றேன்!
மதம் வைத்து, மனம்
மதங்கொள்ளாதிருக்க உரைத்தேன்!
நான் காதல் மதத்தில்
சேரும் வரை!

Monday, May 9, 2011

ஏகாந்தம்!

காரிருளில் கசிந்திருக்கும்,
காட்டினிடையில் கனிந்திருக்கும்,
ரசிப்பின் ஊடே லயித்திருக்கும்,
ஆளில்லா இடத்தில்
மிகுந்திருக்கும் என்றிடுவார்!
எனக்கோ என்னுள் இருக்கும்
தனிமையிலே தான் ஏகாந்தம்!!

Sunday, May 8, 2011

அம்மா!

மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!

அம்மா என்ற குரலுக்கும்,
அந்த ஒலிக்கும்,
இன்றும் மழலை போல் தான்
ஓடத்தோன்றுகிறது!

60 வெறும் எண் தானே?- கடந்தாலும்
அவள் என் பெண் தானே?
அம்மா என்ற
சொல்லுக்கு வயதேது?
வருத்தம் என்றால்
தஞ்சமடைய வேறிடமேது?

60ம் 70ம் வந்திருக்கும்
அம்மாவின் அன்பும், பாசமும்
தினமும் தொடர்ந்திருக்கும்,
அவை நிலைத்திருக்கும் என
என் மனமும் இறைவனிடத்தில்
தினமும் சொல்லியிருக்கும்…!

Wednesday, May 4, 2011

மரமும் மனிதரும்

வளர்ந்தவர் விதைத்தது, வளர்ந்தது,
வளர்ந்து அது மரமானது!

வளர்ந்தவரும் அது போல்
தான் வளர்ந்தார், தழைத்தார்;
கட்டையிலிட, மரத்தோடு
மரமாய் மறைந்திடுவார்!

மாந்தர் மரமாய் இருந்திட,
மரம் மாந்தராய் கனிவு காட்டுது
நிழலாய், விழுதாய்,கனியாய்!

மரத்தின் மனமறியாது,
மனதினை மரமாயாக்கி மரணிப்பார்,
மரம் மட்டும் அன்றும் தழைத்திருக்கும்
உண்மை ஓலித்திருக்கும்!

Tuesday, May 3, 2011

உழைப்பாளன்!

உழைப்பாளர் இருக்கும் வரை,
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி,
நிலமெல்லாம் நீராகும்!

சிந்திய நீரெல்லாம்
கதிரவன் குடித்திடுவான்!
மாதம் மும்மாரியாய்
உமிழ்ந்திடுவான்!!

உழைப்பாளனாய் இருக்க
இயற்கையும் செழித்திருக்கும்!
நம் வாழ்வும்
தித்தித்திருக்கும்!!

Monday, May 2, 2011

சமூகம்

உன்னில் தொடங்கும்,
உன்னில் அடங்கும்;

மாறுதல் உன்னில் தொடங்கி
உன்னிலேயே சங்கமமாகும்;

நீ மாற சமூகம் மாறும்
உன் உருவே சமூகமாகும்;

உன் மாறுதலை நீ உணர
மாற்றம் சுமுகமாகும்!

Sunday, May 1, 2011

காதல்!

காதல்
தீச்சுடர்போல்த்தான்!

எத்தனை தலைகீழாய் நின்றாலும்
மேலெழுந்து எரியும்!
கொண்டவரையே சுட்டெரிக்கும்!
சுடராய் முழுவதும் வியாபிக்கும்!!

Thursday, April 28, 2011

இதழ்!

உன் இதழ் எழுதும்
கவிதைகளை வாசிக்க
முடியவில்லை,
ஆனால் சுவாசிக்க முடிகிறது
என்றும் என்னுடனிருக்க..!

Wednesday, April 27, 2011

தேய்பிறை

தேய்வது போல்
தோன்றினாலும் தேய்வதில்லை!

முழு நிலவின் பாதி தெரியும்
நம் கண்களில்தான் தேய்பிறை!!

Tuesday, April 26, 2011

உன் பார்வை!

என் பிம்பம் தெரியும்
உன் கண்ணில்!

நீ பார்க்கும்
பார்வை என் உலகாகும்!

என் உலகின்
பார்வையாவும் நீயாகும்!

முடிவில்லா சுற்று இது!!

Monday, April 25, 2011

உன் காதல்

உன் காதல்
கடலலையாய் ஓயாதிருக்கும்!
ஈரமணலாய் என்
மனமதில் காயாதிருக்கும்!!

Sunday, April 24, 2011

கல்வியும், கலவியும்!

ஜே கே 'ஷ்டைல்'-ல் ஒரு கவிதை!

கற்கக் கற்க
முதலுமில்லை, முடிவுமில்லைதான்...!

புதிராயும், புதுமையாயும்
இருப்பது எப்போதும் இங்குதான்...!

ஒவ்வொரு முறையும்
கற்பதும், கற்பிப்பதும் சுகம்தான்...!

நடந்ததை நினைவில் வைத்து,
அசை போடுவதில் என்றும் ஆனந்தம்தான்..!

ஒன்றைப் பொதுவில் வைத்து,
ஒன்றை மறைவில் வைத்து
வாழ்தல் முறையாகும்...!

மாறாய்க்
கலவியைப் பொதுவிலிட்டு,
கல்வியைக் குடத்திலிட்டு
வாழ்தல் பிழையாகும்...!

Wednesday, April 20, 2011

மெய்ஞானம்

மெய் என்ற ஞான பாதை
வழி தெரியா பாதையாம்!
வழி மட்டுமே குரு காட்ட,
தேடல் வேண்டுவோர்க்கு!!

தேட தேட பாதை தெளிவாகும்,
வழி புலனாகும்; மற்றோர்க்கு
அஞ்ஞானம் மட்டும் மிச்சமாகும்!
வழி புரியா பாதையாகும்!!

Tuesday, April 19, 2011

தியானம்

மனதினை வெற்றிடமாக்கி,
வெற்றிடத்தில் ஏதும்
இல்லாதிருக்க வைத்து,
ஏதும் இல்லாததை பார்த்திருத்தல்!
அதனில் லயத்திருத்தல்!!

Monday, April 18, 2011

கோபம்

தீனி போட்டு வளர்த்திட,
நம்மையே தின்றிடும்!
தள்ளி நின்று பார்த்திட,
புகையாய் மறைந்திடும்!
உருவமென்றெதுமில்லை இதற்கு!
நாம் இடங்கொடுக்க, நமக்கு
இடமின்றி ஆக்கிவிடும்!!

Sunday, April 17, 2011

கலவி

கலையாமல் கலைத்து,
கலைத்ததில் திளைத்து,
கலந்திருக்கும் தியான நிலை!

தானே கற்க,
தனக்கே கற்பிக்கும்
மோன நிலை!!

Saturday, April 16, 2011

மன அழுக்கு

ஆழ் மனதின் அழுக்கு பல நாளாய்
ரணமாய் உறுத்தலாய் என்னிலிருந்தது,
முயற்சியெல்லாம் பலனின்றி ஆனது
அழுக்கின்றி இருந்திட வழி தேடி
நின்றிருந்தேன் பல நாளாய்...

மனப்பார்வை மட்டுமுள்ளவரை
சாலை தாண்டிவிட்டேன் ஓர் நாள்,
நன்றி தேடாது பாதை மாறினேன்
அவர் கோல்பார்வையில் தரை
தட்டி செல்ல என் அழுக்குதிர கண்டேன்...!

Friday, April 15, 2011

அழகு

தன் உணர்வை, தானே பிம்பமாய்,
திகட்டாது கண்டு களிக்கும் மனது!

முதுமை வயதினில் உண்டு,
மனதிலன்று என்றுணர்தவர்க்கு
அவர்முகம் என்றுமே அழகு!

Thursday, April 14, 2011

புத்தாண்டு

புன்முறுவலை உதட்டுக்கு
வாடகை கொடுத்து,
எல்லா துயரும், தடையும்
திடத்தோடு வரும் நாளில் தாண்ட,
வருடத்தில் ஓர் நாள் புத்தாண்டு!

நிதமும் திடமிருப்பின்,
புன்முறுவல் நிலையாயிருப்பின்,
தினமும் எனக்கு புத்தாண்டு!

Wednesday, April 13, 2011

பரிசு

தருவதின் சந்தோஷம் கொண்டு,
தருவோர்க்கு வருமே சந்தோஷம்!

அத்தருதலில் அத்தருணத்தில்
அஃதே அவரின் பரிசு!!

Tuesday, April 12, 2011

வலி

தன்னுயரம் தானறியாது,
வலிக்க, வலிக்க,
உயர்ந்திருக்கும், மரத்திருக்கும்!
நம் வலி நமக்கு மட்டும் தான்!!

சிறு வலியை பெரு வலி மறக்கடிக்கும்
பெரு வலி பழகிட, புது வலி
தேடியிருக்கும் நம் வாழ்வு!

Saturday, April 9, 2011

புத்தகம்

ஆசானாய் கோலின்றி,
கோபமின்றி போதிக்கும்!

தேடுதல் தந்திடும், தேடவிடாது!
தவறெல்லாம் திருத்திடும்
வன்சொல்லில்லாது..!!

என் உலகாயிருக்கும்
மனிதரேயின்றி போனாலும்
புத்தகம் போதும்
உற்ற நண்பன் போலாகும்...!

Friday, April 8, 2011

சந்தேகம்

வெற்றியின் முயற்சியையும்
கூர்முனை இல்லாது செய்யும்
நம் மன போக்கு,
அகத்திடை வந்திட அகமே புறமாகி,
மனமழுங்கிட வைக்கும்!

Thursday, April 7, 2011

புகழ்

நீரின் வட்ட அலைகளாய்
ஒருமுறை கிட்டிட
தொடர்ந்திருக்கும் விரிந்திருக்கும்..!

தன்னிலை புரியாதிருந்தால்
மீண்டும் நீராய் வடிந்திருக்கும்..!!

Wednesday, April 6, 2011

ஏழை உணவு

ஒரு பானை சோற்றுக்கு
ஒரு சோறு பதம் என
பதம் பார்த்து உண்போர் சிலர்!

பதம் பார்க்கும் அரிசியே
உணவாம் இவர்க்கு!!

Tuesday, April 5, 2011

பட்டாம்பூச்சி!

வீட்டின் கரப்பானை
விரட்டி வீரம் கொண்டேன்!

எத்திவிட தூரம் சென்றது
கவிழ்ந்து விழுந்தது!

முழுதாய் விரட்டிட
அருகில் சென்றேன்
சிறிதாய் பறந்தே
வெளியில் சென்றது!

என் வயிறெல்லாம்
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு!!

Sunday, April 3, 2011

உலகக் கோப்பை

தோனியே தோணியாய்க்
கரைசேர்த்துத் தந்தார் இந்தியாவிற்கு!

இது பல கோடி
இந்தியர்க்கு ஒரு சந்தோஷக் கோப்பை!!

Saturday, April 2, 2011

முதுகு

நம் முதுகின்
நிலையறியாமலே,
புற முதுகின்
அழுக்கையும்,
கரைகளையும்
பார்த்தே வளர்கிறோம்!

புறமுதுகு போரினில் மட்டுமல்ல
வாழ்வினிலும் அழகல்லவே!
அகமுதுகாய் மனதின் அழுக்கை அகற்ற
புறமுதுகும் அழகாகுமன்றோ!!

Friday, April 1, 2011

என்றோ எழுதிய கவிதை - 20

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை!

அன்னக்கிளியாய் அவளிருக்க,
ஆசையுடன் நான்
'இதயத்தை திருடாதே' என்றேன்!

'உயர்ந்த மனிதன் நீ,
ஊருக்கு உழைப்பவன் நீ,
எங்கள் தங்கம் நீ,
ஏணிப்படிகள் ஏறினாலும் எட்டாத
ஒரு தலை ராகம் நம் காதல்' என்றதும்
ஓசையின்றி நொறுங்கிப் போனேன்!

Thursday, March 31, 2011

எதிர் பார்ப்பு

கொடுப்பதை சிந்தையில் இருத்தி,
கேட்பதை செயலில் வைத்திருக்கும்!

முன்னால் வருவதை
பின்னால் பார்த்திருக்கும்!

வருகையிலேயே பார்த்திருந்தால்
நிறைவைத் தந்திருக்கும்..!!

Wednesday, March 30, 2011

என் பாட்டி!

பொக்கை வாய் கிழவியாய்,
அனுபவத்துக்கத்தை சுகமாய்,
சிரிப்பாய் காட்டியிருப்பாள்,
அமுதோடு, வாழ்வும் ஊட்டி வளர்ப்பாள்!

இறக்கையில் கைகூப்பி
வணக்கம் கூறிச்சென்றவள்!
இறப்பென்பதை எனக்கு
கண்ணில் காட்டியவள்!!

கூடி நின்றவர்
வழி விட்டு வழி அனுப்ப
என்னை விட்டுச்சென்றாள்!
என்னுடன் அவள் பாசம் மட்டும்
விட்டுச்சென்றாள்!

எல்லாருக்கும் ஒர் பாட்டி
இருந்திடல் வேண்டும்!
கொஞ்சலும், வருடலும்,
நேசமும், மன்னிப்பும்
பழகிட என் பாட்டி போல்
ஒருவர் நிச்சயம் வேண்டும்!

Tuesday, March 29, 2011

எதிர் பயணம்

வாகனத்தின் திசையெதிரில்
அமர்ந்து எதிர் பயணம்
செய்ததுண்டோ?

காலம் போல் பிம்பங்களும் சாலையும்
நம்மை எதிர்கொண்டு செல்லும்,
காற்றும் நாசியை அடைத்து,
கேசத்தை தடவி வீச்சைக்காட்டும்!
வெற்றித்தோல்வி போல்
யாவும் கடந்து போகும்!

வாழ்வோடு பயணித்தல் உடன்பயணம்,
சர்ச்சையின்றி, சத்தமின்றி போகும்!
எதிர்பயணம் கூச்சலாய், போராட்டமாய்
இறுதியின் இன்பம்
வழிநெடுகிலும் காட்டிச்செல்லும்,
வாழும் நொடி காட்டிச்செல்லும்!

Monday, March 28, 2011

உதிர்காலம்

பிறப்புதிர்காலம்,
இறப்புதிர்காலம்
மட்டுமே வாழ்வில்!

இதில்
இறந்த காலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
என பிரிப்பது எதற்கு?

உதிர உதிர பூக்கும்,
பூக்க பூக்க உதிர்வதே
காலத்தின் இரகசியம்!
வாழ்வெல்லாம் உதிர்காலமாய்
இருப்பதே நம் வாழ்வின் அதிசயம்!

Sunday, March 27, 2011

பேருந்து கவிதைகள் - 3

உடுத்தும் உடை,
நடக்கும் நடை,
படிக்கும் கவிதை,
மலரும் முகம்,
உதட்டுப் புன்னகை,
கனிவுப் பேச்சு,
பரிவுப் பார்வை என
எதிலும் என்னை
அவளிடம் உயர்வாய்க் காட்டும்!

மனதினுள் மட்டும் மறைந்திருக்கும்,
ஆயின் எப்போதும் விழித்திருக்கும்
அந்த 'தீண்டும்' மிருகம்!

Saturday, March 26, 2011

தலையணை மந்திரம்!

இருபதில் தோள்தட்டும்,
முப்பதில் முணுமுணுக்கும்,
நாற்பதில் நாயாகும்,
ஐம்பதில் ஆயாசமாய்,
அறுபதில் ஆறுதலாய்!

சொன்னாலும் கேட்டாலும்
பயனில்லை என்றுணர்ந்து
கூறும், பகிரும் மந்திரம்!

இரவில் விழிக்கும்,
இருவருக்கு மட்டும் ஒலிக்கும்,
ஒவ்வொரு தலையணையிலிருக்கும்!!

Friday, March 25, 2011

தாழ்ந்திருத்தல்

தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
கோபுரமாய் தானிருந்த போதிலும்
தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
தரந்தாழாதிருந்திடலே போதுமன்றோ!

தாழ்ந்த இடந்தன்னில் தானே
தண்ணீரும் தங்கும் என
தாழ்ந்தே வணங்கிட வேண்டும்,
உயரமாய் இருந்திட்டாலும் உயர்ந்திருந்திட்டாலும்;

வணக்கம் வழங்க வணக்கம் பெறுவோம்
இணக்கம் பெருகும் ஆதலில்
தாழ்ந்திருத்தல் குறையேயில்லை...!

Thursday, March 24, 2011

முடிவல்ல ஆரம்பம்!

இங்கே முடிவென்பது ஏதுமில்லை,
யாவும் தொடக்கத்தின் அறிகுறியே!
முடிவைத்தேடியே தொடங்குகின்றோம்,
முடிவை மட்டும் வெறுக்கின்றோம்!!

முடிவறியா தொடக்கம்
இனந்தெரியா துக்கந்தரும்!
முடிவுணர்ந்த தொடக்கம்
தொடருமிங்கு சந்தோஷக் கூச்சலாய்
முடிவு தேடும் மீண்டும் தொடங்க..!!

ஆனந்தமிங்கு முடிவினிலே தான்,
ஆனந்தமாயிருக்க தொடர்ந்து தொடங்குவோம்,
நிதமும் புதிது புதிதாய் முடிவைத்தேடி!

Wednesday, March 23, 2011

காத்திருத்தல்..

காத்திருத்தல் சுகமென்றுரைத்தேன்
முழுதாய் காக்க வைத்தாள்!

முதலில் காதலில்,
அவள் உள்ளத்தில்
திருமணத்திற்கு பின் இல்லத்தில்
அவளை முழுதாய் ”காக்க” வைத்தாள்!!

Tuesday, March 22, 2011

கதவோரக் காதல்!


என் தாத்தாவும் பாட்டியும்
என் தந்தையும் தாயும்
கட்டி தழுவி கைப்பிடித்து
மகிழ்ந்து உறவாடி பார்த்ததில்லை

நான் பார்த்ததெல்லாம்
விளிக்க எட்டிப்பார்த்த இருகண்கள்
கதவோரம் கேட்டு நிற்கும்
இட்ட கட்டளை நிறைவேற்றி
மீண்டும் கதவோரம் வேர்த்திருக்கும்
வந்தவர் போகும் வரை ;

காலை முதல் இரவு வரை
கதவோரமே குரலும் பதிலும்
சமையலாய் காப்பியாய் உபசாரமாய்
ஆனாலும் அன்பும் பரிவும் மிக அதிகமென
அந்த கதவோர கண்கள் கூறும்
சங்கதி சொல்லி சந்ததி வளர்க்கும்

காதலின் அர்த்தம் அவ்விருவருக்கு
மட்டுமென இருந்த காலமது
கதவோர காதல் வாழ்ந்த காலமது !

Monday, March 21, 2011

சுனாமி

நிலத்தையெல்லாம் கடலாக்கி,
கடலை நிலமாக்கி,
கலியின் கிலியை
அரங்கேற்றி,
கண்டோர் கண்ணீர் சேர்த்திங்கு
ஒரு சுனாமியானது!

உணர்ந்தோர் மனமெல்லாம்
பூகம்பமாய் போனது!!

Sunday, March 20, 2011

தேர்தல் வாக்கு

கேட்டோரும் கொடுத்தோரும்
கேட்டபின் கொடுத்தபின்
மறந்திடும் போக்கு!

தேர்வாளரின் வாக்கு
தேர்தலின் நோக்கு!
தேர்வு செய்வோரின் வாக்கு
தேசத்தின் போக்கு!!

அறியாது வைத்திருந்து,
அறிந்தும் தொல்லைத்திடுவோம்
மீண்டும் மீண்டும்!

Saturday, March 19, 2011

சு!

இளசு 
வயசு!

ஐசு
சைசு!

நைசு
கொலுசு!

சொகுசு
பரிசு!

தரிசு 
மனசு!

Friday, March 18, 2011

கிட்டாதாயின்..

கிட்டாதாயின்
வெட்டெனமற என்பார்!

அவள் கிட்டவில்லை என
தன்னை மறந்தான்!!

Thursday, March 17, 2011

ஆசை

தன்னிலை மறக்கடிக்கும்!
ஆரோகண பாதரசம்!

இறப்பிலும் தங்கச்சிலுவை கேட்கும்!
சந்தனக் கட்டையிலிடச் சொல்லும்,
மணிக்கூண்டு வைத்திட ஏங்கும்!

வாராதிருக்காது, வந்தால் விடாது!
எல்லையில்லா உலகில்
எல்லையில்லாதிருக்குமிது!

Wednesday, March 16, 2011

என்றோ எழுதிய கவிதை - 19

தங்கத் தமிழ்
தாலாட்டும் தமிழ்
திக்கெட்டும் தமிழ்
தீந் தமிழ்
துள்ளும் தமிழ்
தூரிகைத் தமிழ்
தெளிவுத் தமிழ்
தேன் தமிழ்
தைரியத் தமிழ்
தொலைந்த தமிழ்
தோகைத் தமிழ்
த்த்த் தமிழ்!

Tuesday, March 15, 2011

தெய்வம் நின்று கொல்லும்

விதேசம் விட்டு தேசம்
வந்தவன் நான்!

உறவுகள் எனக்கு தெய்வம் போல்,
தெய்வம் நின்று கொல்லும்!

Monday, March 14, 2011

மன இருள்

என் வீட்டு முற்றத்தில்,
வாசலில்,
நடு வீட்டில்,
விட்டத்தில்,
ஜன்னல் கம்பிகளில்,
முகப்பில், கொல்லையில்,
என வெள்ளி கதிராய்
வெய்யிலின் வெளிச்சத்தை
என் வீடு தக்க வைத்துகொள்கிறது!!

என மனதேனோ திறந்திருந்தும்
இருளாகிறது அடிக்கடி!!

Sunday, March 13, 2011

ஒப்பிடுதல்!

என் வீட்டு கூரை பக்கமிருந்த
சிறு வீட்டை பார்த்து
பெருமிதம் கொண்டேன்!

சற்றே திரும்ப,
அண்ணாந்து பார்த்த அடுக்கு மாடி
ஏக்கம் தந்தது!

இங்கே பெருமை என ஏதுமில்லை;
இருகோடுகளாய் தானிருக்கும்,
ஒரு கோட்டிற்கு மற்றது பெரிதாகும்,
புரிந்தால் எளிதாகும்!!

Saturday, March 12, 2011

நாற்பது

முதுமையின் வாசலை காட்டும்,
இளமையின் வாசனை காட்டும்,
அனுபவந்தந்து, அனுபவித்திட முடியாது,
வைத்திருக்கும் வயது!!

Friday, March 11, 2011

நிழல்! (பா ராவின் கவிதை பாதிப்பு)

நிழல் நேரம் காட்டும்,
முன்னேயும் பின்னேயும்
நடந்து வரும்,
இல்லாத போது இதுவும்
கடந்து போகும் என புரிய வைக்கும்,
இனித்திருக்கையில் என்னை
முகம் பார்க்க வைக்கும்,
தனித்திருக்கையில் என்னோடு பேசும்,
வெறித்திருக்கையில் எனக்கு
நிழல் நேரம் காட்டும்!!

Thursday, March 10, 2011

முதல் இரவு

தன் பாதி தனை தந்தவளுக்கு,
என் பாதியை நான் தந்து,
முதல் உறவான முதல் இரவு!

Wednesday, March 9, 2011

இறப்பும் பிறப்பும்

நாளை வாழ்ந்திருக்க இன்று
வாழ்பவர் பார்க்க வருதல் பிறப்பு!

நாளை இறந்திடுவோர்
பார்க்க இன்று வருவது இறப்பு!!

எப்பொழுது என்றறியாமல்
எப்பொழுதும் நடக்கும் அதிசயமிது!!!

Tuesday, March 8, 2011

புத்த பாடம்

புத்தனின் கதை கேட்டு
வீட்டுக்கொரு புத்தனை உருவாக்க
நினைத்தான் அரசனொருவன்;
வீட்டுக்கொரு போதி மரம்
வளர்க்கச்சொன்னான்;

ஊரெல்லாம் போதிமர தோப்பாச்சு,
புத்தனாய் யாருமாகவில்லை!
பித்தனாயானான் அரசன்!!

தோப்பின் நிழலில் ஊரின் அழகும்.
மக்களின் உழைப்பும் பெருகும்,
செயல் கண்டான்!
ஞானம் கொண்டான்!!

ஞானம் வர புத்தனுக்கு போதி மரம்;
மனமிருப்பின்
நமக்கு நிழலே போதுமென்றுணர்ந்தான்!!

Monday, March 7, 2011

பந்தபாசம்

நாயிடை தென்னம்பழமாய்
பந்தபாசம் என்னிடம்;
தினமும் உருட்டி கொண்டிருக்கிறேன்
நான்!

Sunday, March 6, 2011

ஜோதிடம்

நவதுவார வீட்டை ஆட்டிப்பைடைக்கும்
நவகிரஹத்தின் நாலு கோடுகள்!
மெய்ஞானமாய் விதி வழி சொல்லும்
விஞ்ஞானம்!!

Saturday, March 5, 2011

வேலைக்காரன்!

என் மனதின் குப்பையை
அன்றாடம் சுத்தம் செய்யும்
விநோத வேலைக்காரன் நான்!!
குப்பையாக்குவதும் நானே தான்!!

Friday, March 4, 2011

எண்ணங்கள்

எண்ணங்களன்றி வேறேதுமில்லை
என்னிடம்!
எண்ணங்களும் இல்லாது போகும் நாளில்
கூடாய், காற்றாய், வெறும் புகையாய்
ஆவேன்!

Thursday, March 3, 2011

திருக்குறள்

வாழ்வை மலரவைக்கும் விதை!
உள்ளத்தை ஒளிரவைக்கும் இருவரி கவிதை!!

Wednesday, March 2, 2011

இரவு

விடியும் என்றிருப்போருக்கு
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!

நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!

Tuesday, March 1, 2011

கொஞ்சம்...

கொஞ்சம் அறிவு கூடுதலாய்,
கொஞ்சம் அழகு கூடுதலாய்,
கொஞ்சம் உயரம் கூடுதலாய்,
கொஞ்சம் நிறம் கூடுதலாய்,
கொஞ்சம் பணம் கூடுதலாய்,
இல்லாதிருக்க
கொஞ்சம் ஆதங்கமாயானது!

Monday, February 28, 2011

குற்றம் பார்க்கும் உறவுகள்

தன் குற்றம் தானறியாது,
மற்றவர் குற்றம் மறப்பதறியாது,
வாழும் மனிதப் பிரிவுகள்!

Saturday, February 26, 2011

வாழ்க்கை

கண்ணாடி வாழ்க்கை வாழ்கிறோம்,
அதன் முன்னாடி தேயப்பார்க்கிறோம்.
தள்ளாடி ஊர்ந்து போகிறோம்,
முன்னேற்றம் என்ற மாயை ஏற்கிறோம்.

பளபளக்கும் பிம்பம் பார்த்து மயங்கி போகிறோம்,
விரிசலோடு அதை வாங்க பார்க்கிறோம்,
சிதறிப்போகும் துகளாயாகும் தன்மை மறக்கிறோம்,
உதறிப்போகும் நிமிடம் கரைத்து உண்மை உணர்கிறோம்!

இல்லாத நாளை இங்கே விட்டுச்செல்வோமே!
இருக்கும் இன்றை ஏற்றுக்கொள்வோமே!
நடக்கும் நொடியை நமதாக்கிகொள்வோமே!
இன்ப நெடியை நுகர்ந்து வாழ்வோமே!!

Friday, February 25, 2011

பேருந்து கவிதைகள் - 2


எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும்
அழகான பெண்ணைத்தான் கேட்க வேண்டும்...

என் கண்களில் தெரிவது
'கயமையா, கண்ணியமா?' என!

Thursday, February 24, 2011

என் உலகம்

அவள் உறங்கையில் இருளுது
என் உலகம்!
அவள் விழிக்கையில் விடியல்
எனக்கு!

இருளில் விழித்திருந்து
பகலில் கனவு,
கனவில் கண்டது ஏதும்
நிஜத்தில் வாராது,

அவளும், அவள் நினைவும்
என்னை சிறை வைக்க,
காதல் என் சிறகாயானது,
என் உலகாயானது!!

Wednesday, February 23, 2011

நம்பிக்கை

பாலைவனத்தின் சோலை,
ஊனத்திற்கு ஊன்றுகோல்,
ஏளனத்திற்கு எதிர்ச்சொல்,
ஊக்கத்தின் அளவுகோல்,
வாழ்வின் பிறப்பு,
வீழ்வின் மறுபிறப்பு,
என்றும் தீரா அமுதசுரபி!

Tuesday, February 22, 2011

பெண்

பூவாய் பெண் பாவாய்
கண்ணாய் கண்ணிண் மணியாய்
என்னை தாங்கினாய்!

மங்கையாய் நங்கையாய்
எனை பெற்றெடுத்தாய்!
தங்கையாய், தமக்கையாய்
உடன்பிறந்தாய், ஆயுளாய் என்னுடனிருந்தாய்!

தாரமாய், ஆதாரமாய்
என்னை கரம் பிடித்தாய்!
என் வாழ்வாய் என் சிரம் தந்தாய்!
வித்தாய் விழுதாய் என் மகளாய்
நீ பிறந்தாய்!
ஆரமாய் பூப்பாரமாய் என்னை
அளந்தாய்!!

சுகமாய் எனக்கிருக்கையில் நீ
அதனில் நிழலாய் இருந்தாய்!
துக்கமாய் எனக்கிருக்கையில் நீ
தூணாய் அங்கிருந்தாய்!!
பிறப்பாய் இறப்பாய் என்னில் நீ
ஆதியாய் அந்தமாயிருந்தாய்!
என் மூலமாய் எனக்கு
வாழ்வாயிருந்தாய்!
என் வாழ்வாய் இருந்தாய்!!

Sunday, February 20, 2011

பெற்றோர்!

இவர்கள் ஆலாயிருக்க
நான் ஆளானேன்;

வேராயிருக்க வளர்ந்தேன்;
தேராயிருக்க வலம்வந்தேன்;
ஊராயிருக்க உலகறிந்தேன்.

விழுதாகி இன்று நான் ஆலாகி
அவர்களின் உலகாயுள்ளேன்!

Saturday, February 19, 2011

அனுபவம்

அனுபவம் அழிதலில் ஆரம்பம்
இளமை அறிதலில் இளமை அழியும்
முதுமை புரிதலில் வாழ்வே முடியும்
புத்தகம் புரிய அதை முடித்தாலே இயலும்
பிறப்பின் இரகசியம் இதுவே
இறப்பில் தான் புரியும்

பயின்றதும் புரிந்ததும் மீண்டும்
கல்வியாகும் அனுபவம் கேள்வியாகும்
அனுபவம் ஞானமாக
தன்னையே அழித்திட அந்த
ஞானம் அனுபவமாகும்

Thursday, February 17, 2011

காதல் – மாற்றம்

சோற்றைக் களையும்
உடையைக் கலைக்கும்
இரவை பின்னுக்கு தள்ளும்
விடியலை முன்னுக்கு தள்ளும்
இரவில் விழித்திருக்கும்
பகலில் கனவு காணும்
நினைவில் வாழ்ந்திருக்கும்
நிஜத்தில் ஒளிந்திருக்கும்
மாற்றமே காதலாகும்
மாறுதலே மரபாகும்.

Tuesday, February 15, 2011

காதல் – விடியல்

அவள் இல்லாது போக,
தூக்கம் சொல்லாது போகும்!
விடியில் இல்லாது ஆகும்!!
அவள் விரும்பி வந்திட,
விடிந்து விடும், வாழ்வும் சேர்ந்து!

Monday, February 14, 2011

காதல் – கண்ணாடி

காதல் பாதரசம்
எங்களிருவள்ளும் பூசியிருக்க
அவள் கண்ணில் நானும்
என் கண்ணில் அவளும்
தெரிகிறோம்!

Sunday, February 13, 2011

காதல் – மாயை

இருப்பது போல் இல்லாதிருக்கும்;
இல்லாதது போல் இருந்திருக்கும்.
இருந்தாலும் இல்லாது போனாலும்,
தன்னுயிரை மற்றவருக்கு தந்தும்,
உயிருடன் இருக்கும்!

Saturday, February 12, 2011

நிழலும் நிஜமும்

இறந்தவர் ஜாடையில் பிறந்தவர் இருந்திட
இறந்தவர் நிஜமாவர், பிறந்தவர் நகலாவர்.

நிஜமிருந்து நகல் வாழும் நிழல் உலகமிது,
நகலும் நிஜமாகி இறந்து போகும் பூடக வாழ்வுமிது,
நிழலும் நிஜமாகும் கலியுகமிது!

Friday, February 11, 2011

விடாமுயற்சி

கடல் மண் எடுத்து, கடல் அலை
பின் செல்ல வீடு கட்டும் பணி
இங்கே மனிதர் பலரும் செய்கின்றனர்;

அலை மீண்டும் மீண்டும் கட்டிய
வீட்டை கலைக்கும் ;
அலை அயரும் நாளன்று வீடும் முடிந்து விடும்!

அன்று வரை மீண்டும் மீண்டும்
பணி தொடரும் விடாமுயற்சியாய்,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை!

Thursday, February 10, 2011

தந்தை

அவரை இதுவரை
அண்ணாந்து பார்த்தே வளர்ந்துவிட்டேன்!

இன்று அண்ணாந்து பார்க்கையிலும்
அவர் உயரம் உயருது - ஆயினும்
என் உள்ளம் ஏனோ உருகுது!!

Wednesday, February 9, 2011

கடமை

ஒன்றின் ஜிவிதம் உணவாம்,
மற்றதிற்கு விலங்கினத்தில்.

விலங்கினமாய் மனிதர் மத்தியில் கட்சிகள்,
ஒன்றின் ஜிவிதம் உண்வாம் மற்றதிற்கு!

கொன்று தின்பதே கடமையாம் இவ்வினங்களுக்கு,
அதன் முறையே தீமையாகும் மனிதர்க்கு!!

தீங்கை நினைந்து வாழ்தல் மடமையாகும்,
கடமையை புரிந்து வாழ்தலே அறிவாகும்!

Tuesday, February 8, 2011

என்றோ எழுதிய கவிதை - 18

அலைகள் ஒரு நாள் ஓயும்...
சூரியன் மேற்கில் உதிப்பான்..
காற்று கைகளில் சிக்கும்...
காதலுக்குக் கூட மரியாதை கிட்டிவிடும்..
ஆயின்..
மாமியார் - மருமகள் உறவில்
சமாதான உடன்படிக்கை
என்று கையெழுத்திடப்படும்?!

Monday, February 7, 2011

வோட்டு

உழுதவனையும், உண்டவனையும்
தொழுது பலரும் கேட்கும் ஒன்று;
கேட்டவரில் ஒருவருக்கு
நிச்சயம் கிடைக்கும்!
போட்டவருக்கு தொழுகை மட்டும்
மிச்சமாகும்!!

Sunday, February 6, 2011

நெருப்பு!

பார்த்தாலும், பாராதிருந்தாலும்,
தொட்டாலும் தொலைவாயிருந்தாலும்,
சுடும், தகிக்க வைக்கும்!
தீயாய் எரிக்கும்!
என்றும் எரியத் தயாராய்,
தணலாய் மனமாகும்,
உன்னை நினைக்கையில்!

பெண்ணே நீயும் நெருப்பு தானோ?!

Friday, February 4, 2011

மெளன மொழி

காதலியின் ஊடலில்,
மனைவியின் பசலையில்,
தாயின் பாசத்தில்,
தந்தையின் கடமையில்,
மகனின் ஆசையில்,
என அகராதியில்லாமல்
புரியவைக்கும் மொழி!
என்னை எப்பொழுதும்
இவர்கள் வெற்றி கொள்ளும் வழி!!

Thursday, February 3, 2011

மகனின் கேள்வி!

முழுதாய் இருத்தல் முக்கியமென்றும்,
ஆற்றல் மட்டும் இலக்கென்றும்,
அழித்தலும், அழிவும் நல்லதல்ல என்றே
கற்பித்தேன், மகனிடம் போதித்தேன்;

படைத்ததெல்லாம் அழியுமென்று அறிந்தும்
படைக்கும் இறைவனுக்கு
இதையேன் யாரும் கூறவில்லையென்று?
பதிலாய்க் கேள்வி கேட்டான் தகப்பன் சாமியாய்.

இறைவனை வினவ இயலாது,
மகனுக்கும் பதில் தெரியாது,
போதனை பாதியில் நின்று போக,
விடை தெரியா வினாவாய் கற்றதும்,
அறிந்ததுமே கேள்வியாயிற்று.

புரியாத கேள்வி கேட்டு புயலாய்
சென்று விட்டான்;
விடை தேடும் என் மனதில் மட்டும்
புயல் வீசி ஓயவில்லை!

Wednesday, February 2, 2011

இறைவன்

என்னுள் இறைவனை நான் கண்டேன்,
மற்றோரின் ஆசையை பூர்த்தி செய்கையில்!

என் ஆசை தான் தீர மற்றோர்
இறைவனைத் தேடுகின்றேன்!!

இறைவனாய் ஆகையில்
தன்னிறைவு தானே வருகுது!

என் நிறைவு ஏனோ
இறைவனைத் தேடுகையில்
இல்லாமல் போகுது!!

Tuesday, February 1, 2011

மனிதன்!

நேற்று உடல்நலத்தை விற்றுக் காசாக்கி,
இன்று அந்தக் காசில் உடலைக் காத்து
நாளையை யோசித்து, இன்றை செலவழித்து
என்றும் வாழாது இருக்கிறான்!

சாவில்லாது போல் வாழ்ந்து,
வாழாது சாகிறான்!

Monday, January 31, 2011

தாம்பத்யம்

ஊடல் கொண்டு, கூடல் செய்து,
கடமை பயின்று, கர்மம் கழித்து,
முடிந்தால் சந்ததி பெருக்கி வாழ்வதென்பர்!
கடமையும், கர்மமும் தானே கழிய
சந்ததி சிலருக்கு மட்டுமாகும்.
ஊடல் தின நிகழ்வாகி,
தான் பத்தியமாயிருக்க,
தாம்பத்யம் இங்கே தேடலாகிறது!

Sunday, January 30, 2011

யுத்தம்

மாறுபட்ட யுத்தமொன்று
நடக்குது என்னுள் தினமும்
இரு மனங்களுக்கிடையில்
எது வென்றாலும் தோற்றாலும்
வெற்றி எனக்குத்தான்
அன்றைய தோல்வியே
அனுபவ பயிற்சியாய், ஆயுதமாகும்
மீண்டும் மீண்டும் யுத்தம்
நடக்கும் , யுத்தமே
தினமும் அனுபவமாகும்

Saturday, January 29, 2011

விரக தாபம்!

நிலமாய் நிலைத்திருக்கும்;
நீராய் வேர்த்திருக்கும்;
விண்ணாய்ப் பரந்திருக்கும்;
நெருப்பாய் எரித்திருக்கும்;
காற்றாய் அலைபாய்ந்திருக்கும்.
இது, பஞ்ச பூதங்கள் சேர்ந்த
ஆறாம் பூதம்!
நம்மிடமிருக்க
தவமாய், வரமாய், சுகமாய், ஆகும்!
அதனிடம் நாமிருக்க
பூதமாய், அழிவாய்ப்போகும்!!

Friday, January 28, 2011

அவமானம்!

அன்று போராட்டம் அரசியல்
நடத்த -
வென்றதில் கொடி பறந்தது
பட்டொளி விசி வெற்றியில்!!

இன்று அரசியல் நடத்த
போராட்டம் -
மானத்தையும் சேர்த்து
கொடி பறக்கிறது!!

அவமானம் இவர்களுக்கல்ல..
நம் கொடிக்கு தான்!!

Thursday, January 27, 2011

தாயன்பு போலாகுமா?!

தன்னிலே விதைத்து,
தன்னையே வதைத்து,
என்னையே தந்தாளம்மா!
என்னையே தந்தாலும்
தாய் போலாகுமா?

விண்ணையே அளந்து, மண்ணையும் பிளந்து,
தேடினாலும் கிடைக்குமா?
தாயன்பு போலிங்கு வேறேதம்மா?

சிறையிலே சிறகு வைத்து,
தன்னையே சிறையாய் வைத்து,
விண்ணிலே விட்டாளம்மா!
பறந்தாலும், திரிந்தாலும்
தாயன்பு கிடைத்திடுமா?
தாயன்பு போலிங்கு வேறேதம்மா?
என் தாய் போலாகுமா?

தன்னிலே ஓளித்து, ஊணிலே வளர்த்து,
மண்ணிலே விட்டாளம்மா!
விதைத்தாலும், வளர்த்தாலும்
தாயன்பு வந்திடுமா?
தாயன்பு போலிங்கு வேறேதேம்மா?
என் தாய் போலாகுமா?

மடி தந்து, மதி தந்து,
உடை தந்து, உணர்வும் தந்து,
விழி தந்து, வழி தந்து,
வாழ்வும் தந்து, வாழ்வாய் வந்து,
என்னுள்ளே இருப்பாளம்மா!
இருந்தாலும், இறந்தாலும்,
தாயன்பு அகலாதம்மா!
தாயன்பு போலிங்கு வேறேதேம்மா?
என் தாய் போலாகுமா?

Tuesday, January 25, 2011

காற்று!

தென்றலாய், புயலாய்,
நறுமணமாய், பல விதமாகி
என் சுவாசமாய்
என்னை சூழ்ந்திருக்கிறது
உன்னை போல்!

Monday, January 24, 2011

கடலோரம்

அலைகள் என் காலோரம் சேர்கையில்
கடலோர மண்ணில், காற்றில்
அந்த கடலின் ஓசையில்
என் காதல் உன் செவியில் விழாதிருக்கும்..
விழியில் மட்டும் தெரிந்திருக்கும்!
விடியலாய் மனதில் விரிந்திருக்கும்!!