Thursday, March 31, 2011

எதிர் பார்ப்பு

கொடுப்பதை சிந்தையில் இருத்தி,
கேட்பதை செயலில் வைத்திருக்கும்!

முன்னால் வருவதை
பின்னால் பார்த்திருக்கும்!

வருகையிலேயே பார்த்திருந்தால்
நிறைவைத் தந்திருக்கும்..!!

Wednesday, March 30, 2011

என் பாட்டி!

பொக்கை வாய் கிழவியாய்,
அனுபவத்துக்கத்தை சுகமாய்,
சிரிப்பாய் காட்டியிருப்பாள்,
அமுதோடு, வாழ்வும் ஊட்டி வளர்ப்பாள்!

இறக்கையில் கைகூப்பி
வணக்கம் கூறிச்சென்றவள்!
இறப்பென்பதை எனக்கு
கண்ணில் காட்டியவள்!!

கூடி நின்றவர்
வழி விட்டு வழி அனுப்ப
என்னை விட்டுச்சென்றாள்!
என்னுடன் அவள் பாசம் மட்டும்
விட்டுச்சென்றாள்!

எல்லாருக்கும் ஒர் பாட்டி
இருந்திடல் வேண்டும்!
கொஞ்சலும், வருடலும்,
நேசமும், மன்னிப்பும்
பழகிட என் பாட்டி போல்
ஒருவர் நிச்சயம் வேண்டும்!

Tuesday, March 29, 2011

எதிர் பயணம்

வாகனத்தின் திசையெதிரில்
அமர்ந்து எதிர் பயணம்
செய்ததுண்டோ?

காலம் போல் பிம்பங்களும் சாலையும்
நம்மை எதிர்கொண்டு செல்லும்,
காற்றும் நாசியை அடைத்து,
கேசத்தை தடவி வீச்சைக்காட்டும்!
வெற்றித்தோல்வி போல்
யாவும் கடந்து போகும்!

வாழ்வோடு பயணித்தல் உடன்பயணம்,
சர்ச்சையின்றி, சத்தமின்றி போகும்!
எதிர்பயணம் கூச்சலாய், போராட்டமாய்
இறுதியின் இன்பம்
வழிநெடுகிலும் காட்டிச்செல்லும்,
வாழும் நொடி காட்டிச்செல்லும்!

Monday, March 28, 2011

உதிர்காலம்

பிறப்புதிர்காலம்,
இறப்புதிர்காலம்
மட்டுமே வாழ்வில்!

இதில்
இறந்த காலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
என பிரிப்பது எதற்கு?

உதிர உதிர பூக்கும்,
பூக்க பூக்க உதிர்வதே
காலத்தின் இரகசியம்!
வாழ்வெல்லாம் உதிர்காலமாய்
இருப்பதே நம் வாழ்வின் அதிசயம்!

Sunday, March 27, 2011

பேருந்து கவிதைகள் - 3

உடுத்தும் உடை,
நடக்கும் நடை,
படிக்கும் கவிதை,
மலரும் முகம்,
உதட்டுப் புன்னகை,
கனிவுப் பேச்சு,
பரிவுப் பார்வை என
எதிலும் என்னை
அவளிடம் உயர்வாய்க் காட்டும்!

மனதினுள் மட்டும் மறைந்திருக்கும்,
ஆயின் எப்போதும் விழித்திருக்கும்
அந்த 'தீண்டும்' மிருகம்!

Saturday, March 26, 2011

தலையணை மந்திரம்!

இருபதில் தோள்தட்டும்,
முப்பதில் முணுமுணுக்கும்,
நாற்பதில் நாயாகும்,
ஐம்பதில் ஆயாசமாய்,
அறுபதில் ஆறுதலாய்!

சொன்னாலும் கேட்டாலும்
பயனில்லை என்றுணர்ந்து
கூறும், பகிரும் மந்திரம்!

இரவில் விழிக்கும்,
இருவருக்கு மட்டும் ஒலிக்கும்,
ஒவ்வொரு தலையணையிலிருக்கும்!!

Friday, March 25, 2011

தாழ்ந்திருத்தல்

தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
கோபுரமாய் தானிருந்த போதிலும்
தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
தரந்தாழாதிருந்திடலே போதுமன்றோ!

தாழ்ந்த இடந்தன்னில் தானே
தண்ணீரும் தங்கும் என
தாழ்ந்தே வணங்கிட வேண்டும்,
உயரமாய் இருந்திட்டாலும் உயர்ந்திருந்திட்டாலும்;

வணக்கம் வழங்க வணக்கம் பெறுவோம்
இணக்கம் பெருகும் ஆதலில்
தாழ்ந்திருத்தல் குறையேயில்லை...!

Thursday, March 24, 2011

முடிவல்ல ஆரம்பம்!

இங்கே முடிவென்பது ஏதுமில்லை,
யாவும் தொடக்கத்தின் அறிகுறியே!
முடிவைத்தேடியே தொடங்குகின்றோம்,
முடிவை மட்டும் வெறுக்கின்றோம்!!

முடிவறியா தொடக்கம்
இனந்தெரியா துக்கந்தரும்!
முடிவுணர்ந்த தொடக்கம்
தொடருமிங்கு சந்தோஷக் கூச்சலாய்
முடிவு தேடும் மீண்டும் தொடங்க..!!

ஆனந்தமிங்கு முடிவினிலே தான்,
ஆனந்தமாயிருக்க தொடர்ந்து தொடங்குவோம்,
நிதமும் புதிது புதிதாய் முடிவைத்தேடி!

Wednesday, March 23, 2011

காத்திருத்தல்..

காத்திருத்தல் சுகமென்றுரைத்தேன்
முழுதாய் காக்க வைத்தாள்!

முதலில் காதலில்,
அவள் உள்ளத்தில்
திருமணத்திற்கு பின் இல்லத்தில்
அவளை முழுதாய் ”காக்க” வைத்தாள்!!

Tuesday, March 22, 2011

கதவோரக் காதல்!


என் தாத்தாவும் பாட்டியும்
என் தந்தையும் தாயும்
கட்டி தழுவி கைப்பிடித்து
மகிழ்ந்து உறவாடி பார்த்ததில்லை

நான் பார்த்ததெல்லாம்
விளிக்க எட்டிப்பார்த்த இருகண்கள்
கதவோரம் கேட்டு நிற்கும்
இட்ட கட்டளை நிறைவேற்றி
மீண்டும் கதவோரம் வேர்த்திருக்கும்
வந்தவர் போகும் வரை ;

காலை முதல் இரவு வரை
கதவோரமே குரலும் பதிலும்
சமையலாய் காப்பியாய் உபசாரமாய்
ஆனாலும் அன்பும் பரிவும் மிக அதிகமென
அந்த கதவோர கண்கள் கூறும்
சங்கதி சொல்லி சந்ததி வளர்க்கும்

காதலின் அர்த்தம் அவ்விருவருக்கு
மட்டுமென இருந்த காலமது
கதவோர காதல் வாழ்ந்த காலமது !

Monday, March 21, 2011

சுனாமி

நிலத்தையெல்லாம் கடலாக்கி,
கடலை நிலமாக்கி,
கலியின் கிலியை
அரங்கேற்றி,
கண்டோர் கண்ணீர் சேர்த்திங்கு
ஒரு சுனாமியானது!

உணர்ந்தோர் மனமெல்லாம்
பூகம்பமாய் போனது!!

Sunday, March 20, 2011

தேர்தல் வாக்கு

கேட்டோரும் கொடுத்தோரும்
கேட்டபின் கொடுத்தபின்
மறந்திடும் போக்கு!

தேர்வாளரின் வாக்கு
தேர்தலின் நோக்கு!
தேர்வு செய்வோரின் வாக்கு
தேசத்தின் போக்கு!!

அறியாது வைத்திருந்து,
அறிந்தும் தொல்லைத்திடுவோம்
மீண்டும் மீண்டும்!

Saturday, March 19, 2011

சு!

இளசு 
வயசு!

ஐசு
சைசு!

நைசு
கொலுசு!

சொகுசு
பரிசு!

தரிசு 
மனசு!

Friday, March 18, 2011

கிட்டாதாயின்..

கிட்டாதாயின்
வெட்டெனமற என்பார்!

அவள் கிட்டவில்லை என
தன்னை மறந்தான்!!

Thursday, March 17, 2011

ஆசை

தன்னிலை மறக்கடிக்கும்!
ஆரோகண பாதரசம்!

இறப்பிலும் தங்கச்சிலுவை கேட்கும்!
சந்தனக் கட்டையிலிடச் சொல்லும்,
மணிக்கூண்டு வைத்திட ஏங்கும்!

வாராதிருக்காது, வந்தால் விடாது!
எல்லையில்லா உலகில்
எல்லையில்லாதிருக்குமிது!

Wednesday, March 16, 2011

என்றோ எழுதிய கவிதை - 19

தங்கத் தமிழ்
தாலாட்டும் தமிழ்
திக்கெட்டும் தமிழ்
தீந் தமிழ்
துள்ளும் தமிழ்
தூரிகைத் தமிழ்
தெளிவுத் தமிழ்
தேன் தமிழ்
தைரியத் தமிழ்
தொலைந்த தமிழ்
தோகைத் தமிழ்
த்த்த் தமிழ்!

Tuesday, March 15, 2011

தெய்வம் நின்று கொல்லும்

விதேசம் விட்டு தேசம்
வந்தவன் நான்!

உறவுகள் எனக்கு தெய்வம் போல்,
தெய்வம் நின்று கொல்லும்!

Monday, March 14, 2011

மன இருள்

என் வீட்டு முற்றத்தில்,
வாசலில்,
நடு வீட்டில்,
விட்டத்தில்,
ஜன்னல் கம்பிகளில்,
முகப்பில், கொல்லையில்,
என வெள்ளி கதிராய்
வெய்யிலின் வெளிச்சத்தை
என் வீடு தக்க வைத்துகொள்கிறது!!

என மனதேனோ திறந்திருந்தும்
இருளாகிறது அடிக்கடி!!

Sunday, March 13, 2011

ஒப்பிடுதல்!

என் வீட்டு கூரை பக்கமிருந்த
சிறு வீட்டை பார்த்து
பெருமிதம் கொண்டேன்!

சற்றே திரும்ப,
அண்ணாந்து பார்த்த அடுக்கு மாடி
ஏக்கம் தந்தது!

இங்கே பெருமை என ஏதுமில்லை;
இருகோடுகளாய் தானிருக்கும்,
ஒரு கோட்டிற்கு மற்றது பெரிதாகும்,
புரிந்தால் எளிதாகும்!!

Saturday, March 12, 2011

நாற்பது

முதுமையின் வாசலை காட்டும்,
இளமையின் வாசனை காட்டும்,
அனுபவந்தந்து, அனுபவித்திட முடியாது,
வைத்திருக்கும் வயது!!

Friday, March 11, 2011

நிழல்! (பா ராவின் கவிதை பாதிப்பு)

நிழல் நேரம் காட்டும்,
முன்னேயும் பின்னேயும்
நடந்து வரும்,
இல்லாத போது இதுவும்
கடந்து போகும் என புரிய வைக்கும்,
இனித்திருக்கையில் என்னை
முகம் பார்க்க வைக்கும்,
தனித்திருக்கையில் என்னோடு பேசும்,
வெறித்திருக்கையில் எனக்கு
நிழல் நேரம் காட்டும்!!

Thursday, March 10, 2011

முதல் இரவு

தன் பாதி தனை தந்தவளுக்கு,
என் பாதியை நான் தந்து,
முதல் உறவான முதல் இரவு!

Wednesday, March 9, 2011

இறப்பும் பிறப்பும்

நாளை வாழ்ந்திருக்க இன்று
வாழ்பவர் பார்க்க வருதல் பிறப்பு!

நாளை இறந்திடுவோர்
பார்க்க இன்று வருவது இறப்பு!!

எப்பொழுது என்றறியாமல்
எப்பொழுதும் நடக்கும் அதிசயமிது!!!

Tuesday, March 8, 2011

புத்த பாடம்

புத்தனின் கதை கேட்டு
வீட்டுக்கொரு புத்தனை உருவாக்க
நினைத்தான் அரசனொருவன்;
வீட்டுக்கொரு போதி மரம்
வளர்க்கச்சொன்னான்;

ஊரெல்லாம் போதிமர தோப்பாச்சு,
புத்தனாய் யாருமாகவில்லை!
பித்தனாயானான் அரசன்!!

தோப்பின் நிழலில் ஊரின் அழகும்.
மக்களின் உழைப்பும் பெருகும்,
செயல் கண்டான்!
ஞானம் கொண்டான்!!

ஞானம் வர புத்தனுக்கு போதி மரம்;
மனமிருப்பின்
நமக்கு நிழலே போதுமென்றுணர்ந்தான்!!

Monday, March 7, 2011

பந்தபாசம்

நாயிடை தென்னம்பழமாய்
பந்தபாசம் என்னிடம்;
தினமும் உருட்டி கொண்டிருக்கிறேன்
நான்!

Sunday, March 6, 2011

ஜோதிடம்

நவதுவார வீட்டை ஆட்டிப்பைடைக்கும்
நவகிரஹத்தின் நாலு கோடுகள்!
மெய்ஞானமாய் விதி வழி சொல்லும்
விஞ்ஞானம்!!

Saturday, March 5, 2011

வேலைக்காரன்!

என் மனதின் குப்பையை
அன்றாடம் சுத்தம் செய்யும்
விநோத வேலைக்காரன் நான்!!
குப்பையாக்குவதும் நானே தான்!!

Friday, March 4, 2011

எண்ணங்கள்

எண்ணங்களன்றி வேறேதுமில்லை
என்னிடம்!
எண்ணங்களும் இல்லாது போகும் நாளில்
கூடாய், காற்றாய், வெறும் புகையாய்
ஆவேன்!

Thursday, March 3, 2011

திருக்குறள்

வாழ்வை மலரவைக்கும் விதை!
உள்ளத்தை ஒளிரவைக்கும் இருவரி கவிதை!!

Wednesday, March 2, 2011

இரவு

விடியும் என்றிருப்போருக்கு
விடியலை காட்ட காத்திருக்கும் பொழுது!
விடியாதென்று இருப்போருக்கு
விடியலை மீண்டும் தேட வைக்கும் பொழுது!

நடந்த நாள்
நல்லதாயிருக்க நள்ளிரவு;
இல்லாத போது மறக்க
இறைவன் தரும் நல்லிரவு!

Tuesday, March 1, 2011

கொஞ்சம்...

கொஞ்சம் அறிவு கூடுதலாய்,
கொஞ்சம் அழகு கூடுதலாய்,
கொஞ்சம் உயரம் கூடுதலாய்,
கொஞ்சம் நிறம் கூடுதலாய்,
கொஞ்சம் பணம் கூடுதலாய்,
இல்லாதிருக்க
கொஞ்சம் ஆதங்கமாயானது!