Saturday, February 27, 2010

சுஜாதா!


மரபுக் கவிதைகளுக்கு நடுவே
ஒரு புதுக்கவிதை!

நெடிதுயர்ந்த அடர்ந்த மரங்களுக்குள்
ஒரு போன்ஸாய்!

வீட்டுக்கு வீடு ஜன்னலில்
குடி புகுந்த புது நிலவு!

ஞான தாகத்தை லேசாய்
தீர்த்த பானகம், பருகிட
மீண்டும் தாகம் தரும் அமுதம்!

உன் புத்தகங்கள் படித்தாலும் ரத்த அழுத்தம்
படிக்காவிட்டாலும் தான்!

உன் எழுத்துக்கள் வந்தது
நன்கறிந்த தமிழ் வார்த்தையில் தான்
ஒவ்வொரு முறையும் புதுமணப்பெண்ணாய்!

சங்க இலக்கியம் போல் நீ
தந்தது தொழில்நுட்ப இலக்கியம்
பாமரனையும் பட்டதாரியாக்கினாய்!
பட்டதாரியையும் பாமரனாக்கினாய்!!

பாதரசம் போல் உன் படைப்புகள்
படிப்போரின் திறன் பொறுத்து
உருவம் பெறும்!

பழரசம் போல் உன் கருத்துக்கள்
ருசிப்போரின் ரசனை பொறுத்து
ரசிப்பு தரும்!

அருவம் ஆகி நின்றபோதும்
உருவமாய் இருக்கின்றாய்
பல நூல்களில்,

உன்னை பத்திரமாய் வளர்த்து வருவேன்,
என் அகத்தில் நூலகமாய்,
வளர்ந்த பின் என் பிள்ளை
படிக்க கொடுப்பதற்கு!


எழுத்தாளர் திரு சுஜாதா அவர்கள் மறைந்த வருடம் எழுதப்பட்டது.
திரு சுஜாதா நினைவு நாள் - 27/02/2010.

Thursday, February 25, 2010

பசுமைப் புரட்சி!

கல்லும் மண்ணுமாய் நகரங்கள்
மழையும் பசுமையும் காணவில்லை!

தன்னுயிர் காக்கும் மாந்தர்கள்
புத்துயிர் தரும் தாவரம் வளர்க்க
இன்றே புது நீதி செய்குவோம்!

இலை தழை வெட்ட ஓராண்டு சிறை!
செடி கொடி கொய்தால் ஆறாண்டு சிறை!!
மரம் வெட்டினால் ஆயுள்!!!
காடு தோப்பு அழித்தால் மரணம்!!!!

தன்னுயிர் காக்க தன்னோடு தாவரம் வளர்ப்பர்
பசுமை தழைத்தோங்கும்
தரணி குளிர்ந்துபோகும்
ஓவ்வொரு புது ஜனனத்தில் ஒர்
மரம் நடுவோம்!

இனி வரும் தலைமுறை
பசுமையில் வாழ புது விதி செய்குவோம்!

Saturday, February 20, 2010

கனவும் நிஜமும்!

என் மரணத்தை நானே
கண்டேன் கனவினில்

கண் மூடி கால் நீட்டி
நடுக்கூடத்தில் நான்!

இதோ சில மணியில்
நான் பஸ்பமாவது உறுதி!

சுடும் நெருப்பின் பயம்
கனவை கலைத்தது!

இன்று கனவில், நாளை
நிஜத்தில்!

இடையில் கனவாய் நிஜ
வாழ்க்கை!!

Wednesday, February 17, 2010

காத்திருந்தேன்!

காத்திருந்தேன் நான் காத்திருந்தேன்
கானல் நீரும் கண்ணீராகும் வரை
காத்திருந்தேன்
என் நிழலும் இருளில் மறையும் வரை
காத்திருந்தேன்
நிலவும் கூட கதிராகும் வரை
காத்திருந்தேன்
அல்லி மொட்டும் மலராகும் வரை
காத்திருந்தேன்

இராமனுக்காக சீதை அன்று
காத்திருந்தாள்
அந்த சீதைக்காக இராவணணும்
கூட காத்திருந்தான்
கடமைக்காக கர்ணணும் தானே
காத்திருந்தான்
காதல் மடமைக்காக நானும்
இங்கே காத்திருந்தேன்

உள்ளத்தில் உன்ன வைச்சு
காத்திருந்தேன், என்
உயிருக்குள்ளே ஒளிச்சு வெச்சு
காத்திருந்தேன்
என் ஆயுளில் பாதி உனக்களிக்க
காத்திருந்தேன்
இப்போ மிச்ச மீதி ஆயுளும் போக
காத்திருந்தேன் நான் காத்திருந்தேன்

Sunday, February 14, 2010

காதலர் தினம்!

யத்தனிக்க தித்தித்திருக்கும்
எட்டிப்பிடித்து சுவைத்திருக்கும்
நினைவை பகிர்ந்திருக்கும் காதலர் தினம்
நிதம் நிதம் புதுமையாய் ஆகும் உலகு
காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம்

Wednesday, February 10, 2010

யாசகம்

ஓட்டையான ஒடெடுத்து
ஓடி வந்தேன் யாசிக்க
போட்டெதெல்லாம் போதவில்லை
போன இடம் தெரியவில்லை

கேட்கத்தான் யாருமில்லை
கேட்டுத்தான் பலனுமில்லை
கொடுத்தாலும் போதவில்லை
கொண்டு செல்ல இடமுமில்லை

சேதி சொல்ல யாருமில்லை
தேதி சொல்ல ஆளுமில்லை
முடிவுல அவனுமில்லை
முயற்சியில மீளவில்லை

அனுபவத்தை தேடவில்லை
அனுபவமா “அவன” பார்க்கவில்லை
தேடுதலில் சளைக்கவில்லை
தேடுதலே அவனென புரியவில்லை!!