Wednesday, August 31, 2011

கடற்கரை காதலி!

பட்டுக் கொண்டு...
படர்ந்து கொண்டு..

பற்றிக் கொண்டு..
சுற்றிக் கொண்டு..

நழுவிக் கொண்டு..
இறுகிக் கொண்டு..

அணைத்துக் கொண்டு..
அரவணைத்துக் கொண்டு..

மீண்டும் மீண்டும்
தென்றலே...
என்னைத் தொடு....!

Tuesday, August 30, 2011

தவம்

மீண்டும் மழலையாய் இருக்க
தவமிருப்பேன்...

இளமை திரும்பிட அல்ல..
முதுமை வாராதிருக்க அல்ல...

எந்தையும், தாயும்
மீண்டும் என்னை
பார்த்திருக்க...
கைகோர்த்திருக்கவே...!

Monday, August 29, 2011

என் சினம்

சினத்தை வென்றிடவே
சினங்கொண்டேன்
என் மேலே, என்னுள்ளே...
சினத்தினால் ஏதுமாகதென்றே!
என் சினம் பிறர் மேல் பாய,
உலகம் என்னில் சினங்கொண்டது!
உள்ளம் உண்மையை
இனம் கண்டது!

Sunday, August 28, 2011

ஆழ்மனம்

ஆழ்கடல் மனது இது...
ஆழம் தெரியாது....
எண்ணத்தைக் கொடுத்து,
ஏக்கத்தை வளர்த்து,
விளக்கம் தருமிது...!

உயரம் உயரம் என்றிருக்கும்,
உயர்ந்த பின்னும் தொடர்ந்திருக்கும்,

ஆறாஆசை கொண்டதிது...
குறையாவிசையுமிது..!

வேட்கையைக் கொடுத்து,
வேஷத்தை வளர்த்து,
இலக்கைத் தருமிது...!
புதிரைக் கொடுத்து,
விடுகதை வளர்த்து
விடையும் தருமிது...!

குழப்பம் மிகுந்திருக்கும்...
தேடல் இருந்திருக்கும்..
தெளிந்தும் தொடர்ந்திருக்கும்...!

Saturday, August 27, 2011

இல்லாத தவிப்பு

இருக்கையிலும்,
இணக்கத்திலும்
இணைந்ததிலும்,
நினைப்பிலும்,
எதிலும் தர்க்கமே

எனக்கு அவளிடம்...
இல்லாத நாளில் மட்டும்
தவிப்பானது...!

Friday, August 26, 2011

நட்பு!

மனதிற்கினிய வாக்குரைத்து,
இளமை பகிர்ந்தளித்து,
முதுமையில் கனிந்து,
இறப்பன்றி வேறேதும்
பிரிக்க முடியா உணர்விது...
மடை திறந்த வெள்ளம் போல்,
தடையில்லாது வளரும்..!

Thursday, August 25, 2011

என்றோ எழுதிய கவிதை - 24

இரவு படுத்தால்
விழித்தெழுவது
உன் கையில் இல்லை
எனும்போது...

'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!

Wednesday, August 24, 2011

வாழ்க்கை

கூட்டிக் கழித்துப்
பெருக்கி வகுத்து
வாழ்வதா வாழ்க்கை ?

கூடிக் களித்து,
சுருக்கிப் பகுத்து
வாழ்வோமே வாழ்க்கை!!

Tuesday, August 23, 2011

சுற்றம்

பெற்றவனை அறிந்தவனுக்கு
பெற்றவனே உற்றவனாவான்...
உற்றவன் உடனிருக்க சுற்றமாகும்
அவன் உலகாகும்...

அஃதல்லார்க்கு
சுற்றமே குற்றமாகும்..
உற்றவனேயில்லா
உலகாகும்..!

Monday, August 22, 2011

சிரித்திருப்போம்!

முன் ஜன்ம பகைதனை
மனதிலிருத்தி,
பின்னொரு ஜன்மமதிலே
பழிதீர்க்கும் படலம்...
இதிகாசமாய், புராணமாய்
படித்தறிந்தேன்...

எந்த ஜன்ம
பகைதீர்க்க
பிறந்திட்டேனோ அறிகிலேன்...
பிறந்த பகை தீர்க்க,
நேரமில்லையிங்கு...
முன் ஜன்ம பகை தீர்ப்பதேது?

இறப்பறிந்த பிறப்பிது ஆதலிலே
வாழ்வின் பகை அறுப்போம்...
இறப்பின் பகை தொடுத்தே,
புன்னகை போராட்டம் வளர்ப்போம்...!

பின் ஜன்மமில்லா பிறப்பாய் ஆக,
இந்த ஜன்மம் எல்லாம் சிரித்திருப்போம்!!

Sunday, August 21, 2011

வாழ்வின் அர்த்தம்

கருகி மடிவோம்
என்று அறிந்தும்
விளக்குத்திரியும்,
தீக்குச்சியும்
சுடராகும்...
மேலோங்கி எரியும்...
இருள் அகற்றும்..!!

நம் வாழ்வின்
அர்த்தம் புகட்டும்...!

Friday, August 19, 2011

நிர்ப்பந்தம்

எடையில்லா காற்றும்
எடைதாங்கும்
நிர்ப்பந்தத்தாலே...

விடையில்லா வாழ்வும்
எளிதாகும்
உடைதாங்கும்
உயிரும் உயர்வாகும்...

நிலைமாற்றும்
உருமாற்றும்
உயர்த்தி முகமாற்றும்...

உனை நீ நிர்ப்ப்ந்தித்தாலே..!

Thursday, August 18, 2011

உறவு

நன் நேரத்தில்
நீங்குதல் அறிந்து,

தாமரையிலைத்
தண்ணீராய்
நீங்கியும் நீங்காதிருக்க...

நீடித்து வளரும்...!

Wednesday, August 17, 2011

உன்னில் நான்

மெழுகாய் இருக்கிறேன்
உன்னில் தான் கரைகிறேன்
தன்னை எரித்து
தனக்கே நிழல் தரும்
மெழுகாய் இருக்கிறேன்

சருகாய் ஆகிறேன் நீயின்றி
உதிரும் சருகாய் ஆகிறேன்
தளிராய் இருந்து
வளர்ந்த இடத்தில் மடியும்
சருகாய் ஆகிறேன்

தன் தேனை உயிராய்
தான் கொடுத்தும்
வண்டு கண்டு மிளிரும்
மலராய் மெருகேறி போகிறேன்

உன்னில் சேர்ந்து
மெருகேற்றிக்கொள்கிறேன்...

Tuesday, August 16, 2011

நான் எழுதிய கவிதை....!

உதிர்ந்த இலை...
கசக்கும் காய்...
வெம்பிய பழம்...

கால் சூம்பிய சிறுவன்..
நான்காம் பிறைச் சந்திரன்..
சுவற்றிலட்ட சாணம்...

கடல் நீர்...
கை அளையும் மண்...
கால்களை வருடும் அலை...

மிச்சமான நெருப்பு..
அறுந்துபோன செருப்பு...
வாழ்ந்து கெட்டவனின் இருப்பு..

பேருந்துப் புகை...
சாலையின் குப்பை...
காற்றின் மாசு..
தங்காத தூசு...

சொல்லாத சொல்...
எழுதாத வார்த்தை...
நிரம்பாத பக்கம்..

நான் எழுதிய கவிதை....!

Monday, August 15, 2011

சுதந்திர தினச் சிறப்புக் கவிதைகள்



சுதந்திர தினம்

எல்லையாய் கோடாய்
இருக்குதே சுதந்திரம்
இருப்போர்க்கு நிலைத்திடவே...

எலலையிலே சுதந்திரம் இல்லாமலே
வீடு விட்டு, நாடு விட்டு
தன்னலத்தை பொதுவிலிட்டு
போராடுவோர் பலருண்டு...

எல்லையில்லாமல், போராடாமல்
சுதந்திரமாய் அவரும் இருக்கும் தினமே
உண்மையாய் சுதந்திர தினம்...

ஜெய்ஹிந்த்!



என் சுதந்திரம்

எல்லையிலே இருக்குது
எட்டிப்பார்த்தில்லை...!

வீட்டுப் பூட்டில் இருக்குது
திறந்து விட்டதில்லை...!

மனதிலிருக்குது
பகிர்ந்ததில்லை...!

நாட்டு ஏழ்மையிலிருக்குது
எண்ணிப்பார்த்தில்லை...!

உணர்விலெல்லாம் இருக்குது
உணர்த்திக்கொண்டதில்லை...!

கேட்ட சொல்லிலிருக்குது
சொல்லிக்கொண்டதில்லை...!

வரலாறாய் இருக்குது
வாழ்ந்ததில்லை...!

கிடைத்ததில் இருக்குது
விட மனமில்லை....!


எல்லையிலே சுதந்திரம்

இன்று வரை எல்லையாய் இருக்குது சுதந்திரம்...
எல்லை மீறாதிருக்க மீண்டுருக்கும்...
எல்லை மாறாதிருக்க நமக்கிருக்கும்...
மற்றவர் எல்லை நமக்கு புரிந்திருக்க,
எல்லாருக்கும் என்றும் நிலைத்திருக்கும்...

Sunday, August 14, 2011

ஞானத்தேடல்

பிறப்பில் வருவது ஆசை!
இறப்பில் வருவது ஞானம்!

ஆதலில் தான் நான்
தினம் பிறக்கிறேன்!
தினமும் இறக்கிறேன்!!

ஆசையாய் ஞானம்
தேடுகிறேன்!!

Saturday, August 13, 2011

கண்ணீர்

என் வாழ்வின் நிகழ்விலெல்லாம்
கண்ணீருண்டு...

சோகமாய், ஆனந்தமாய், பக்தியாய்,
நன்றியாய், கோபமாய்,
செந்நீரோடு கலந்தே
வந்திடும் அவ்வப்போது...

நிகழ்வெல்லாம் நினைக்கையிலும்
அதே கண்ணீருண்டு...
சேமித்தே வைத்திருப்பேன் எனக்குள்
நினைவை அசைபோட!!


Friday, August 12, 2011

திரிசங்கு சொர்க்கம்

கூரை ஏறி,
விண்ணை தொடும்
எண்ணம் ஆசையாகும்...
தொடுவோர் சிலரே!

பலருக்கு
கூரையும் எட்டாது ...
விண்ணும் கிட்டாது...
தரையும் தெரியாது...
ஏணியே வாழ்வாகும்...
திரிசங்கு சொர்க்கமாகும்!

Thursday, August 11, 2011

எல்லாம் தந்தாயோ?

யாவும் தந்த இறைவா!

இறப்பின் இடமும், நேரமும்
தெரியாது வைத்தாயே...

பேசும் சொல்லின் சூட்சமம்
புரியாது வைத்தாயே...

உறவும் கூட புரிந்திடா
புதிராய் செய்தாயே...

உணர்வும் கூட என் சொல்
கேளாது வைத்தாயே...

எல்லாம் தந்தும்
என் கேள்விக்கு விடையின்றி
போக வைத்தாயே....

இன் சொல்லாய் கேட்கிறேன்
மறு சொல்லாய் சொல்வாயோ...

இறைவா!
எனக்கு எல்லாம் தந்தாயோ?!

Wednesday, August 10, 2011

விரதம்

கிட்டா உணவிற்கு
ஏங்கும் ஏழைக்கு
ஆயுளே விரதமாகும்!

கிட்டும் உணவினை
மதிகட்டி எட்டாது
வைக்கும் மற்றோர்க்கு
விரதமே ஆயுளாகும்!

Sunday, August 7, 2011

ஆசை

ஈடேறும் ஆசைக்கு
மனதும், மதியும்
முயற்சிக்கு ஈடுகொடுக்கும்!

அதையும்
கொடுத்திடாதே
ஈடேறா ஆசைதனுக்கு!

Friday, August 5, 2011

நீரின் அடியில்

என் மன அழுத்தமெல்லாம்
நீரின் அடியில் விட்ட காற்றாய்...

என் கனவெல்லாம்
நீரின் அடியில் இட்ட கண்ணீராய்...

என் பாசமெல்லாம்
நீரின் அடியில் மண்டும் பாசியாய்...

என் உணர்வெல்லாம்
நீரின் அடியில் கிணற்று ஊற்றாய்...

என் எண்ணமெல்லாம்
நீரின் அடியில் அலையாய்...

என் காதலும்
நீரின் அடியில் பளிங்காய்...

என் வாழ்வு மட்டும்
கால பட்ட நீராய்...
பிரதிபலிக்கும் பிம்பமாய்...
அலைந்து, கலைந்தே...
வளர்கிறது!!

Thursday, August 4, 2011

விட்டுக்கொடுத்து

விட்டுக்கொடுத்தால்
இனிமை என்றேன்...

பின்பற்ற
பறைசாற்றினேன்...

பின்பற்றி
இன்பம் கண்டேன்...

என்னையே
விட்டுக்கொடுத்து,
பின்பு உணர்ந்தேன்....

அதையும்
விட்டுக்கொடுத்தாலே
இனிமையென!!