Monday, May 30, 2011

இடுகாடு

நிழலும் இலாது ஓரிடம்,
ஈட்டியது ஏதுமில்லாது இடுமிடம்!

இட்டபின், இட்டவரும் ஈட்டியவரும்,
ஏதுமிலாது இருக்குமிடம்!

நாடு இல்லையெனிலும்,
தன்னில் பஞ்சமில்லாது,
யாவருக்கும் ஓரிடம்!

Sunday, May 29, 2011

இறைவனடி

பொன்னடி தான் பணிந்து,
அவனடி அடைந்திடவே முயலுவார்;

தன்னடி தானறியாதிருக்க
இறைவனடியறிந்து அடைந்திட,
அவர்க்கு காலமாகும்!
அவர்காலம் ஆகும்!!

Saturday, May 28, 2011

தீக்குச்சி

ஆக்கலையும்,
அழித்தலையும்,
சிரத்தில் நிறுத்தி,
அக்னிக்குஞ்சை
ஒளித்திருக்கும்!

தீ தரும் வரை மதிப்போடு;
தந்த பின் மதிப்பேது?!

Tuesday, May 24, 2011

சுடுசொல்

சுட்ட பால் கண்டபின்,
ஐந்தறிவு பூனையும்
ஓடித்தான் போகும்!

சுடு சொல் தந்து, சூடு பட்டும்
எனக்கு சுடு சொல் விடும்
ஆறாம் அறிவுத்தான்
ஓடி போகிறது!

Monday, May 23, 2011

மெளன ஓசை

கண்கள் பேசும்,
உணர்வுகள் உணர்த்தும்,
காற்றின் வாசம் விளித்து,
திரும்ப வைக்கும்!

காதலில், காதலின் வாழ்தலில்,
அதனின் ஈர்த்தலில், வருமோசை;
காதலில் இருப்போர்க்கு மட்டும்
கேட்கும் மெளன ஓசை!!

Sunday, May 22, 2011

வெறுமை

சொத்தும், சுகமும்,
பகையும், கோபமும்,
பகட்டும், கெளரவமும்,
வீண்பிடிவாதமும்,
மனதின் அழுத்தமும்,
இறுதியில் வெறுமையாய்
யாவும் காணாது போகும்!

தெரிந்தும்,அறிந்தும்,
மாறாதிருக்கும்
மனமும், மனிதரும்
உலகில் இருந்தும்
இல்லாதிருக்கும்
வெறுமைபோலன்றோ?

Saturday, May 21, 2011

மறதி

வன்மம், தீமை,
சுடுசொல் பிறர்தர,
இனியும் வருமென்றறிந்தும்
மறந்திட, வளர்ந்திட,
உறவு வளர்த்திட
இறைவன் தந்த வசதி!

Friday, May 20, 2011

வாடாமல்லி

மனையாளுக்கென்று
பேர் சொல்லி கொடுத்தார்,
நம்பி வாங்கி வந்தேன்.

கத்திரி வெய்யிலில்
வீடு வருமுன் வாடியது!

வாடிய மலரையும்
வாடாமல்லி சிரித்தபடி
சூடிக்கொண்டாள்!!

Thursday, May 19, 2011

மெளன வலி

ஊடலில் காதலியின் மெளனம்,
தேடலில் கிடைக்காத மெளனம்,
இறப்பின் விளிம்பின் மெளனம்,
உறவின் சர்ச்சையின் மெளனம்,
பிரிவின் உணர்வின் மெளனம்,
வலி தரும் சத்தமின்றி
மெளனமாய்!

சத்தமில்லாது...

சத்தமின்றி நோக்கும் மனக்கண்,
பிடித்தவரை மட்டும் பார்க்கும்!
வாழ்வு இனிமையாகும்!

பார்க்கும் கண்ணை புரிந்து,
பார்த்தவரும் சத்தமின்றி படித்திட,
புரிதல் உருவாகும்!
காதல் வாழ்வாகும்!!

Wednesday, May 18, 2011

மனத்திரை

திரை ஒன்று வைத்தே
மனதை சிலர் மூடிடுவார் ;
யாரும் வாரதிருக்க அல்ல!

அத்திரை அகற்றி தன்
யார் என்றறியவே
உள் நோக்குவார்!

Tuesday, May 17, 2011

நாணம்

தெரியாது வந்திருக்கும்!
தெரிந்த பின் மறைந்திருக்கும்!
புரியாத சுகமிருக்கும்!
புரிந்தும் மறைத்திருக்கும்!
வருகையிலும், வந்தபின்னும்
அழகாயிருக்கும்!

Monday, May 16, 2011

சொல்!

சொல்லில் இருக்கும் வருத்தம்,
சொல்லாமல் விட்டதிலும் துரத்தும்!
சொல்லிவிட்டதிலும் வருத்தும்!

நேரத்தில் வராதிருக்கும் சொல்,
வரக்கூடாதிருந்து வந்த சொல்லிலும்,
வருந்தும் நேரம் இருக்கும்!

Tuesday, May 10, 2011

காதல் மதம்!

மதபேதம் இருக்கக் கூடாதென்றேன்!
மதவெறி ஓழிய வேண்டுமென்றேன்!
மதம் வைத்து, மனம்
மதங்கொள்ளாதிருக்க உரைத்தேன்!
நான் காதல் மதத்தில்
சேரும் வரை!

Monday, May 9, 2011

ஏகாந்தம்!

காரிருளில் கசிந்திருக்கும்,
காட்டினிடையில் கனிந்திருக்கும்,
ரசிப்பின் ஊடே லயித்திருக்கும்,
ஆளில்லா இடத்தில்
மிகுந்திருக்கும் என்றிடுவார்!
எனக்கோ என்னுள் இருக்கும்
தனிமையிலே தான் ஏகாந்தம்!!

Sunday, May 8, 2011

அம்மா!

மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!

அம்மா என்ற குரலுக்கும்,
அந்த ஒலிக்கும்,
இன்றும் மழலை போல் தான்
ஓடத்தோன்றுகிறது!

60 வெறும் எண் தானே?- கடந்தாலும்
அவள் என் பெண் தானே?
அம்மா என்ற
சொல்லுக்கு வயதேது?
வருத்தம் என்றால்
தஞ்சமடைய வேறிடமேது?

60ம் 70ம் வந்திருக்கும்
அம்மாவின் அன்பும், பாசமும்
தினமும் தொடர்ந்திருக்கும்,
அவை நிலைத்திருக்கும் என
என் மனமும் இறைவனிடத்தில்
தினமும் சொல்லியிருக்கும்…!

Wednesday, May 4, 2011

மரமும் மனிதரும்

வளர்ந்தவர் விதைத்தது, வளர்ந்தது,
வளர்ந்து அது மரமானது!

வளர்ந்தவரும் அது போல்
தான் வளர்ந்தார், தழைத்தார்;
கட்டையிலிட, மரத்தோடு
மரமாய் மறைந்திடுவார்!

மாந்தர் மரமாய் இருந்திட,
மரம் மாந்தராய் கனிவு காட்டுது
நிழலாய், விழுதாய்,கனியாய்!

மரத்தின் மனமறியாது,
மனதினை மரமாயாக்கி மரணிப்பார்,
மரம் மட்டும் அன்றும் தழைத்திருக்கும்
உண்மை ஓலித்திருக்கும்!

Tuesday, May 3, 2011

உழைப்பாளன்!

உழைப்பாளர் இருக்கும் வரை,
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி,
நிலமெல்லாம் நீராகும்!

சிந்திய நீரெல்லாம்
கதிரவன் குடித்திடுவான்!
மாதம் மும்மாரியாய்
உமிழ்ந்திடுவான்!!

உழைப்பாளனாய் இருக்க
இயற்கையும் செழித்திருக்கும்!
நம் வாழ்வும்
தித்தித்திருக்கும்!!

Monday, May 2, 2011

சமூகம்

உன்னில் தொடங்கும்,
உன்னில் அடங்கும்;

மாறுதல் உன்னில் தொடங்கி
உன்னிலேயே சங்கமமாகும்;

நீ மாற சமூகம் மாறும்
உன் உருவே சமூகமாகும்;

உன் மாறுதலை நீ உணர
மாற்றம் சுமுகமாகும்!

Sunday, May 1, 2011

காதல்!

காதல்
தீச்சுடர்போல்த்தான்!

எத்தனை தலைகீழாய் நின்றாலும்
மேலெழுந்து எரியும்!
கொண்டவரையே சுட்டெரிக்கும்!
சுடராய் முழுவதும் வியாபிக்கும்!!