Thursday, December 31, 2009

ஜே கே!

திசம்பர் 31 பிறந்த நாள் காணும்
எங்கள் அண்ணன்(?!) ஜே கே
அவர்களை
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!

Wednesday, December 30, 2009

இலட்சியம்!

கல் எய்து பழம் தேடுவோம்
கல்லாய் பதில் வர ஓடுவோம்
எய்தல் நிறுத்த பழம் மறப்போம்
பழம் தேட எய்தல் தொடருவோம்
எறிதலும் பெறுதலும் தொடர்கதையிங்கு
அறிந்து நடக்க பழம் நிச்சயமாகும்
முறிந்து மறக்க கல் மட்டுமே மிச்சமாகும்

Saturday, December 26, 2009

நம் வாழ்க்கை!

தகிக்கும் சூரியன்
தேயும் நிலவு
தொடமுடியா வானம்
முகந்தெரியா காற்று
ஆழந்தெரியா கடல்
நிற்கத்தெரியா அலை
மூலம்தெரியா மழை
முடிவில்லா பூமி
எப்பொழுதென்று அறியா ஜனனம்
என்றென்று அறியா மரணம்
புதிராய் ஒர் உலகமிது,
விடையில்லா விடுகதையாய் இவையிருக்க,
இதில் தொடர்கதையாய் நம் வாழ்க்கை !!

Tuesday, December 22, 2009

அலைக்கழியும் தூக்கம்

துக்கங்கள் மட்டுமல்ல..
சில சமயங்களில்
சந்தோஷங்களும்தான்
தூக்கத்தை
அலைக்கழிக்கின்றன...!

Thursday, December 17, 2009

என்றோ எழுதிய கவிதை - 13

ரோஜா ஒன்று என் காதோரம் வந்து
க(வி)தை பேசிற்று...

"இருந்தாலும் ஒரே மணம்
பறித்தாலும் ஒரே மணம்
முகர்ந்தாலும் ஒரே மணம்
பரமனுக்குப் படைத்தாலும் ஒரே மணம்
பாவை அவள் வைத்தாலும் ஒரே மணம்
பிய்த்தாலும் ஒரே மணம்
வாடி உலர்ந்தாலும் ஒரே மணம்

ஆயின்...உங்களுக்கு

களிப்பிற்கு ஒரு முகம்
கவலைக்கு ஒரு முகம்
வஞ்சனைக்கு ஒரு முகம்
வாசனைக்கு ஒரு முகம்
அசிங்கமாய் ஒரு முகம்
அவலமாய் ஒரு முகம்
நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு முகம்
மொத்தத்தில் எங்கே தொலைந்தது
உங்கள் திருமுகம்?"

கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை...
உங்களிடம்...?

Wednesday, December 16, 2009

மௌனம்

இறுதி வரை நம்முடனிருக்க
நாமறியோம்!
இறுதியில் நம்முடனிருக்க
நாமறியோம்!

Sunday, December 13, 2009

முள் வேலி

முள் வேலி ஒன்று நெய்திட்டேன்
காதலாய்

காதல் கொண்டு வேலி வளர்த்தேன்
காதல் வென்று வாழ்வும் வளர்த்தேன்
வாழ்வோடு காதல் மலர
வேலி நிற்கும் கேள்வியாய்

ஆண்டுகள் பல ஓடியும்
காதல் இன்னும் ஓயவில்லை
முள்ளும் மலரவில்லை
வேலியும் மறையவில்லை

முள்ளாய் வலியாய் என்னுள்
வேலியாய் இடவெளியாய்
என் சுற்றத்துள்

Friday, December 11, 2009

"பாயும் புலி" பாட்ஷா!

ரஜினி அவர்கள் பிறந்த நாளன்று (12/12/2002) எழுதப்பட்ட கவிதை
இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.


அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் உரைப்பவனே!
துடிக்கும் கரங்கள் உடையவனே!
தர்மத்தின் தலைவனான
இந்த முத்து எங்கள் சொத்து!

முரட்டுக்காளையாய் இருந்தாலும்
மூன்று முடிச்சில் அடங்கித்தான் போனாய்!
ஆறிலிருந்து அறுபது வரை ஆன்மிகம்தான்
என்றாலும் அகிலமெங்கும் உன் கொடி பறக்குது!

பொல்லாதவன் எனச் சிலர் நினைக்க
நல்லவனுக்கு நல்லவன் நான் என்றாய்!
போக்கிரி ராஜா எனச் சிலர் தூற்ற
தனிக்காட்டு ராஜா நான் என்றாய்!
அவர்கள் விமர்சனம் உனக்கு எங்கேயோ கேட்ட குரல்!
ஏனெனில் அனேக தமிழர் உன் படையப்பா!

நான் அடிமை இல்லை என உரக்க நீ உரைத்தாலும்
இந்த அண்ணாமலைக்கு நாங்கள் அடிமைதான்!
பாபா முத்திரைதான் எங்களுக்குப் பாட முத்திரை!!

அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

Thursday, December 10, 2009

மகாகவி பாரதி!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!

மகாகவி பாரதி உதித்த தினம்
(11 திசம்பர்)

Tuesday, December 8, 2009

மரணம்!

காற்றை உள்வைத்துக்
காற்றைத் தேடிக்
காற்றாயாகும் பயணம்!

தூசி!

விழிக்குளத்தில்
தூசி விழுந்ததால்
கலங்கலாயிற்று...!

Sunday, December 6, 2009

மணிவிழா நாயகன் - 4

இரு வேடங்களில் ரஜினி!


அமிதாப் படங்களின் தமிழாக்கத்தில் ரஜினி நடிக்கத் துவங்கியது 'பில்லா' (1980) படத்திலிருந்துதான்.

கடத்தல் மன்னனாக, தெருவோர ஆட்டக்காரனாக இரு வேடங்களில் தன்னை முழுமையாகக் கொடுத்து, இந்திப் பதிப்பிற்கு ஈடாக பொருத்திக் கொண்டார் ரஜினி. கண்ணதாசன் எழுதிய 'மை நேம் இஸ் பில்லா', 'நாட்டுக்குள்ள எனக்கு ஒரு ஊருண்டு' பாடல்களின் வரிகள் ரஜினியை நடிகனுக்கும் மேலான தனி மனிதனாய் மக்களுக்கு அடையாளம் காட்டின. சூப்பர் ஸ்டார் பட்டம் 'பைரவி' தந்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ரஜினிக்குக் கிடைத்த படம் 'பில்லா'.

அன்றைய அலங்கார் திரையரங்கில் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி ரஜினிக்குப் புகழை வாரிக்கொடுத்த 'பில்லா', தயாரிப்பாளர் பாலாஜி அவர்களுக்கும் 'ரீமேக்' படங்களைத் தயாரிக்கும் ஆர்வத்திற்குப் 'புதுப்பாதை' அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.



ரஜினி-மகேந்திரன் கூட்டணியில், வித்தியாசமான பின்னணியில் அமைந்த படம் 'ஜானி'(1980).

நாவிதராக வரும் ரஜினியின் கஞ்சத்தனம் - வீட்டிற்கு இரு பூட்டுக்களைப் பூட்டிவிட்டு இழுத்துப் பார்ப்பது, செடியிலுள்ள பூக்களை எண்ணி எண்ணிச் சரி பார்ப்பது - sober look, நடை, உடை அனைத்திலும் வித்தியாசமோ வித்தியாசம். கத்திரிக்கோலைப் பிடிப்பதிலும், முடி வெட்டுவதிலும் ஸ்டைலோ ஸ்டைல். ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப் பொருத்தம் இயல்பு+சூப்பர். திருடன் ரஜினி, ஸ்ரீதேவியிடம் அன்பை எதிர்பார்க்கும் இடம் இனிமை.

'எப்போதும் ஒண்ணை விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதுக்கு முடிவே இல்ல' என்கிற ரஜினி டயலாக் படத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான் எத்துணை பொருத்தமானது?!

இளையராஜாவின் இசை + அசோக்குமார் ஒளிப்பதிவு படம் முழுதும் ஒட்டியிருப்பது மற்றுமொரு சிறப்பு.

"பாகவதரிடமோ, எம்ஜியாரிடமோ இருந்த சில சிறப்பு அம்சங்கள் எதுவுமே இல்லாமல், தனக்கென உயர்வான ஒரு தனி மேடையை மக்களால் அமைத்துக்கொண்ட ரஜினியின் ஆற்றல் மகத்தானது. " 'சூப்பர் ஸ்டார்' பட்டம் நிரந்தரமல்ல," என்று அவர் சொன்னாலும், 'சூப்பர் ஸ்டார்' புகழ் மக்களால் தரப்பட்டது. இனியொருவர் இந்த இடத்தைப் பிடிப்பது நடக்கிற காரியமில்லை" என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.


பொதுவாக மகன் தவறு செய்வான்; தந்தை தட்டிக் கேட்பார். இதுவே தலைகீழாயிருந்தால்? நெற்றிக்கண்(1981) கதை இதுதான்.

தன் வயதிற்கு மீறிய வேடமென்றாலும், ரஜினி அப்பா 'சக்ரவர்த்தி'யாக ஏற்று நடித்துக் காட்டிய ஸ்டைல், தோரணை அடேங்கப்பா! ரஜினியின் நடிப்புக்கு சவால் விடும் ரெட்டை வேடங்கள், 'நடிப்பு பிசாசு'கள் லக்ஷ்மி/சரிதா, விசுவின் அருமையான கருத்து/கசையடி வசனங்கள், இளையராஜாவின் இன்னிசை என அத்துணை அம்சங்களும் இருந்தால் படம் ஏன் நூறு நாட்கள் ஓடாது?!

"அப்பா பிள்ளை டூயல் ரோல் என்பதால் இரண்டு பேரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் ரொம்பவே மெனக்கிட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் மாஸ்க் பண்ணிப் பண்ணித்தான் எடுக்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்குமிடையே சண்டையும் வரும். அதையும் மிகவும் கவனமாக மாஸ்க் பண்ணித்தான் பாபு எடுத்தார். அப்படி மாஸ்க் பண்ணும்போது, நடுவில் கோடு தெரியாமல் எடுக்கும் லாவகத்தை ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் பெற்றிருந்தார்" என இயக்குநர் எஸ் பி எம் பெருமிதமாய்ப் பேசுகிறார்.

'ரஜினி என்னும் வைரத்தை நான் கண்டுபிடித்தாலும், வைரத்தைப் பலவிதமான கதா பாத்திரங்களைக் கொடுத்து, எஸ் பி எம் பட்டை தீட்டினார்' என்கிறார் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.

மூன்று படங்களும் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளியில் வெளி வந்து, வெற்றி முத்திரை பதித்து, ரஜினியை 'புது அவதார'மாய்ப் படவுலகுக்கு அடையாளம் காட்டின.

இவைகளுக்கு நடுவில் மிக முக்கியமான படமொன்றிலும் ரஜினி நடித்தார், அது...

தகவல்களுக்கு நன்றி
ஏவி எம் தந்த எஸ் பி எம் - விகடன் பிரசுரம்
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்

கவிதை என்ன செய்யவேண்டும்?

இந்தியா தனது ஜனநாயகத்தை விரயம் செய்து கொண்டிருப்பதைப் போல நம் கவிஞர்கள் கவிதையைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிதை என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கையையும் மொழியையும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சமூகத்தையும் சக மனிதர்களையும் காதலிக்கக் கற்றுத்தரவேண்டும். மரபின் மீது பெருமிதமும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

Saturday, December 5, 2009

விடைகொடு என் தோழா!

இன்றைய கணிப்பொறி உலகில் நிலையானது ஏதுமில்லை.

என்னுடன் உழைத்த சக நண்பர்களில் ஒருவர் வேலையிழக்க நேரிட்டது. 8 வருட காலமாக பக்கத்து இருக்கையில், 12 மணி நேரம் பின் கணினி மூலம், இன்னும் சில, என்று இருந்தவர் இனி பேசக்கூட இல்லாமல் போய் விடுவார் என்ற வருத்ததிலும்,

இறுதி நாளில் இருந்த கடைசி 10 நிமிடங்களில் அவருக்கு ஏதேனும் பரிசாய், நினைவாய், கொடுக்க எண்ணி எழுதியது இது.

அவர்தம் குடும்ப சகிதம் இதைப் படித்து அனுபவித்ததையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இழப்பு சோகம், இருந்தும் இல்லாமல் இருப்பது பெரும் சோகம், அதுவும் நம் நாடன்றி வெளிநாட்டில் இது தாளாத சோகம்..


விடைகொடு என் தோழா, விடையற்ற வினாவோடு
விடைகொடு என் தோழா,
விடாது இருக்கும் நம் நட்பு, தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நதிபோல் பல பாதை நாம் கடந்தோம்
கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் களைந்தோம்
சேர்ந்தே தெளிந்தோம் யாவும் பகிர்ந்தோம்
நம்மை விதைத்தே நாம் வளர்ந்தோம்
பிரிவென்பதை மறந்தோம் உழைப்பினில்
நம்மை மறந்தோம்

தேடுதலில் புரிதலின்றி வேட்டையில் இலக்கின்றி
பாதையில் நோக்கின்றி காலத்தின் மாற்றம் கண்டோம்
இனி விவாதிக்க, வம்பிழுக்க சிரித்திருக்க, வெறுமே
பார்த்திருக்க பக்கத்தில் உன் உருவமில்லாது போகும்

இருக்கைகள் எல்லாம் இளைப்பாற
நினைவுகள் வேலை செய்யும் நேரமிது
வெற்று பார்வையில் காற்றை தீண்டி
இல்லாத தாகத்திற்கு தண்ணீர் தேடி
கடிகார முள்ளை நானும் சேர்ந்தே தள்ளி
நாள் நகர்த்தும் காலமிது

வேற்று கிரகம் போல் என் இடமாகும்
நீருற்று போல் நாம் இருந்த காலம்
நினைவில் ஓடும்
வழியில் பார்ப்போமினி
கை உயர்த்தி கண் இருத்தி
பெருமூச்சோடு நம் வழி தொடருவோம்
விடாது இருக்கும் நம் நட்பு தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நீ இனி போகுமிடமெல்லாம்
வெற்றி கண்டு வீடோடு சிரித்திருக்க
என் மனதோடு பிரார்த்திருப்பேன்
விடைகொடு என் தோழா!

Friday, December 4, 2009

மணிவிழா நாயகன் - 3

நினைத்தாலே இனிக்கும் (1979)




பாலச்சந்தர் இயக்கத்தில், சுஜாதா எழுத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நனைந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியின் பங்கு முக்கியமானது.

கொஞ்சம் உன்னிப்பாக நோக்கினால் தீபக் பாத்திரத்தில், சுஜாதாவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான வஸந்த்-ஐப் பார்க்கலாம். பேச்சில் நக்கல், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தன்மை, எந்தப் பெண்ணைப் பார்த்ததும் விழிகள் விரிவது, கொஞ்சம் புத்திசாலித்தனம்/நகைச்சுவை கலவையில், குறுந்தாடி ரஜினி 'புகுந்து விளையாடிய' படம்.

சின்னச் சின்ன திருட்டுக்கள், 'டேப் சுந்தரி'யைத் தேடி அலைவது, 'வரவேற்பாளினி' (நன்றி: சுஜாதா)யைப் பார்த்து ஜொள்ளு விடுவது, 'சிவ சம்போ' (அப்போதே சிவனுடன் சம்பந்தம் இருந்திருக்கிறது!)வை விடாது பிடித்திருப்பது, 'சிவ சம்போ' / 'நம்ம ஊரு சிங்காரி' பாடல்களில் ஏகத்துக்கு 'ஷ்டைலு', போக வில்லன்களைப் போட்டு உதைப்பது என ரஜினிக்குத் தீனி நெறைய்ய!

இதையெல்லாம் விட, டொயோட்டா காருக்கு ஆசைப்பட்டு, இறுதியில் 'சுண்டு விரல் போதும் ஸார்!' என உச்சபட்ச டென்ஷனுடன் ரஜினி அடங்கிப்போவது ஹிலேரியஸ் அடேங்கப்பா!

ரஜினிக்கு நகைச்சுவை உணர்வு(ம்) உண்டு என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காட்டிய முதல் படமும் இதுதான்!

Thursday, December 3, 2009

தியாவிற்கு நன்றி!

கவிதை கொண்டு, விதையிட்டு,
தமிழ் வளர்த்து, தமிழ் ரசித்தோம்!

தீயாய் தரணியில்,
தீரா தாகம் கொண்ட தியா,
தன்னிலும் வளர்த்து, பிறரிலும் ரசித்து,
விருதொன்று தந்து,
பதிவுகளுக்கு விழுதாய் ஆகிவிட்டாரே!

நண்பர்களுக்கு விருந்தாய்,
பதிவிற்கு விருது தந்து,
தன்னையே அனைவரிலும் பதிந்து விட்டாரே!

கவிதை வளர்க்கக்
கவிதையாய் வித்திட்டாரே!
தான் உயர, தரம் உயரும்,
நாம் உயர,தரணி உயரும்
என உணர்த்திட்டாரே!

பதிவாளர்களையும் வாழ்த்தி
நன்றியாய் வந்த கவிதை இது!
நன்றாய் ஏற்றுக்கொள்வாயா
நண்பரே, தியாவே?!

விருது பெற்ற அனைத்து பதிவாளர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Tuesday, December 1, 2009

சின்னதாய் ஒரு தோட்டம்...

என் தோட்டம்
மிகச் சிறியது...

முன் காலையில்
இலையின் விளிம்பிலின்று
சந்தோஷமாய்த்
தற்கொலை செய்து கொள்ளும்
பனித்துளி!

தோட்டமொன்றை வைக்கச்
செடிகளை விடச்
சிந்தனைகள்தான் வேண்டும் எனச்
சொல்லாமல் சொல்லிப்போகும்
வண்ணத்துப்பூச்சி!

மெத்தென்ற புல்வெளியில்
தன் 'குட்டி' குட்டிகளைப் போட்டு
இரை தேடிச் செல்லும்
பூனை!

அவ்வப்போது வந்து...
ஆங்கிலத்தில் கொஞ்சி
ரோஜா கேட்கும்
மழலை மொழி!

இன்று என் வீடு,
நாளை மாடி வீடு - என
உயரும் கிறிஸ்துமஸ் செடி!

மெலிதான தூறல்களின்
தாளத்துக்குத் தாக்குப் பிடிக்கும்
சின்னச் சின்ன விதைகள்...

கவிதையே தோட்டமா??
தோட்டமே கவிதையா??

இரண்டும் ஒன்றுதான்..
பெரிது பார்வையும்
சிறிது நேரமும் இருந்தால்...!

ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது...!

ஒரு கவிதையின் அழகு
படைப்பவரைப் பொறுத்தது..!

கனவுகளில்லாமல்
வாழ வந்த
இந்திய நகரத்தில்
கனவு கண்டது

சின்னதாய் ஒரு வீடும்
பெரியதாய் ஒரு தோட்டமும்...!

நிழலின் முகத்தில்
நிஜமறிய
மனது திருத்திக்கொண்டது!

சின்னதாய் ஒரு வீடும்
(அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்
ஒரு தோட்டமும்..!

Monday, November 30, 2009

மணிவிழா நாயகன் - 2


முள்ளும் மலரும் (1978)


அண்ணன்-தங்கை பாசம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'பாச மலர்'; இதற்கடுத்து, பளிச்செனப் பதிவது 'முள்ளும் மலரும்'தான்.

சில காட்சிகளை யாராலும் மறக்க முடியாது!

டிபிகல் தொழிலாளிபோல் 'ஸார் உடனே வரச்சொன்னீங்களாமே' என ஷேவிங் க்ரீம் முகத்துடன் அப்பாவி லுக்-குடன் சரத்பாபு முன் ரஜினி நிற்பது...

ஆஸ்பத்திரியிலிருந்து வரும் ரஜினியை அணைக்கும்போது 'இடது கை' துண்டித்திருப்பதை ஷோபா உணரும்போது...

'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...

படாபட், ரஜினியை மீறி, சரத்பாபுவிடம் ஷோபாவை ஏற்கச் சொல்லும்போது...

'இவ்ளோ பேர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை; ஏன்னா எந்த நாயும் என்னோட கூடப் பொறக்கலை; ஆனா, வள்ளி நீ....நீயுமா என்னை விட்டு போறே?' என ஷோபாவிடம் நெகிழும்போது...

ரஜினி என்கிற குணச்சித்திர நடிகருக்குக்கான அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பம்!

படத்திற்கு 'ரஜினி'தான் 'காளி' என்பதைத் தீர்மானித்து, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் இயக்குநர் மகேந்திரன் சொன்னபோது,

'என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு; நல்ல கறுப்பு வேறே...வேணவே வேணாம். வேற யாராச்சும் சொல்லு.'


இதே வேணு செட்டியார் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு "அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே...படத்துல வசனமே இல்லே...அங்கே ஒண்ணு...இங்கே ஒண்ணு வருது வசனம்..படமா எடுத்திருக்கே..." என்று இயக்குநரைத் திட்டித்தீர்த்து விட்டார்!

படம் வந்த முதல் மூன்று வாரங்கள் பரபரப்பேயில்லாமிலிருக்க, 'படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்க' என ரஜினியும், மகேந்திரனும் கெஞ்ச, வேணு செட்டியார் சொன்னார்: "ஓடாத படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை...ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை. அது தெரியுமா, உங்களுக்கு?!'

உண்மைதானே? நான்காவது வாரத்திலிருந்து துவங்கிய ஆரவாரம் நூறாவது நாள் வரை ஓயத்தான் இல்லை!

தகவல்களுக்கு நன்றி:
சினிமாவும், நானும் - இயக்குநர் மகேந்திரன்

Friday, November 27, 2009

ஏலாமை!

ஆங்கே வீடின்றி
யாவரும் அலைகையில்
இங்கே என்னுள்ளே
வெற்றிடம்!

Thursday, November 26, 2009

மணிவிழா நாயகன் - 1

மணிவிழா நாயகன் என்கிற தொடர் பதிவில், ரஜினி என்கிற கலைஞனைப் பற்றிய எங்கள் கண்ணோட்டங்கள் இடம்பெறும். மற்றபடி அரசியலில் அவருடைய நிலைப்பாடுகள், இன்னபிற விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் இருந்ததேயில்லை.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)


மகரிஷி எழுதிய நாவலைப் படமாக்க முற்பட்டபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், திரைக்கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்திற்கும் தோன்றிய 'வில்லனா நடிக்கற 'புதுப்பையனை' ஹீரோவாகவும், கதாநாயகனா எஸ்டாப்ளிஷான சிவக்குமாரை வில்லனாகவும் மாத்திப் போட்டா என்ன?' தான் ரஜினி எனும் நாயகன் உருவாகக் காரணமாயிருந்தது.

சம்பத் என்கிற இளைஞனாக, காதலை இழந்த காதலனாக, சந்தர்ப்பவசத்தால் தன்னை இழந்த நாயகிக்குக் கணவனாக, குடித்துக்குடித்து உடலை வருத்திக்கொள்ளும் நோயாளியாக, ரஜினியை மாற்றிய பெருமை நிச்சயம் இயக்குநர் எஸ் பி எம்-க்கு உண்டு. அதிலும் சிகரெட்டைப் புகைத்தபின், சாம்பலைச் சுண்டும் ரஜினி ஸ்டைல் அடேங்கப்பா!

படப்பிடிப்பின் முதல் நாளில் தனக்கு நீட்டப்பட்ட வசனங்களைப் பார்த்துவிட்டு 'பாலச்சந்தர் ஸார் ஒரு முழுப்படத்துக்கே இவ்ளோ டயலாக் தரமாட்டார். எந்த நம்பிக்கையிலே எனக்கு இவ்ளோ தர்றீங்க. ரொம்ப கஷ்டம், என்ன விட்டுடுங்க' எனத் தப்பிக்க நினைத்த ரஜினியைச் சமாதானப்படுத்தி நடிக்க வைத்த புண்ணியமும் எஸ் பி எம்-க்குத்தான்!

ரஜினியால் தன்னுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போவது, எங்களுக்குத் தெரிந்து இந்த ஒரு படத்தில் மட்டும்தான்!

நடிகர் திரு சிவகுமார் அவர்கள் கூறியது போல 'அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தியை எடுத்து, ரஜினியை வரவேற்கத் துவங்கிவிட்ட காலகட்டம் அது!'

தகவல்களுக்கு நன்றி:
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - விகடன் பிரசுரம்
இது ராஜபாட்டை அல்ல - அல்லையன்ஸ்

Wednesday, November 25, 2009

மனிதமும் மல்லிகையும்!

குப்பை லாரியின் பின்னால்
இழுத்துப் புரண்டு சிதைந்து
வாழ்க்கையின் ஏதோ ஒரு
பக்கத்தை நினைவுபடுத்தியபடி
செல்கிறது
நேற்றெங்கோ மணத்த
மல்லிகைச் சரம்.

கவனிக்க மனமின்றி
இயங்குகிறது
காங்க்ரீட் சதுரங்களில்
நசுங்கிக் கசியும்
இயல்பு மறந்த மனிதம்!

Saturday, November 21, 2009

என்றோ எழுதிய கவிதை - 12

தொட்டால் குழையும் சோறு...
தொட்டால் விறைக்கும் மனைவி...
நொந்து போகுது மனசு!

Friday, November 20, 2009

ஜே கே-வுக்கு எது பிடிக்கும், பிடிக்காது?!

பொது வாய்ப்பு அளித்த பா ரா விற்கு நன்றி!!

அரசியல்:

பிடித்தது இந்திய அரசியலில் இளைஞர்கள்.

பிடிக்காதது ஜோதி பாசு, கருணாநிதி , வாஜ்பாய் என நடக்க கூட முடியாது இன்னமும் அரசியலில் இருக்கும் மூதறிஞர்களையும் அவர்களின் சுயசெயலையும்.

எழுத்து:

பிடித்தது சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், சொல்லிக்கொண்டே போகலாம்.

பிடிக்காதது தமிழ் என்று வந்து விட்டால் எல்லாம் சுகமே; பிடிக்காதது ஏதுமில்லை.

கவிதை:

பிடித்தது நம் இணையதள நண்பர்களின் கவிதைகள் (புகழ்பெற்ற அனைவரையும் விதிவிலக்காய் தள்ளிவைத்து அவங்களை பிடிக்கும் பிடிக்கலைன்னு சொல்ல முடியாதுப்பா!!) .

பிடிக்காதது நம் நண்பர்கள் போன்று எழுத முனையும் போது, என்னை!

நடிகர்:

பிடித்தது ப்ருத்விராஜ், நானா படேகர், நாசர் , பிரகாஷ் ராஜ் (ரொம்ப சாதாரணமாய் நடிப்பவர்கள் -man next door).

பிடிக்காதது கமல், சிவாஜி , ரஜினி, அமிதாப் இவர்கள் எல்லை தாண்டி வயதிற்கு ஒப்பாமல் நடிக்கும் பொழுது.

நடிகை:

பிடித்தது நமிதா! (விநாயக முருகனுக்காக!) எல்லாரையும் பிடிக்கும்! (ஹிஹிஹி!)

பிடிக்காதது இப்பொழுது வரும் பெரும்பான்மையான புதுமுகங்களை!

இயக்கம்:

பிடித்தது மணிரத்னம், மிஷ்கின்.

பிடிக்காதது ராம் நாராயணன் (இவர் எப்படியும் மிருகத்தை வச்சு தான் எடுப்பார் இதுல் சேர்த்துகலாமா? ) .

இசை:

பிடிக்காததுன்னு ஏதுமில்லை.

கிரிக்கெட்:

பிடித்தது மொத்தமாக இந்திய அணி யார் ஆடினாலும் நாக்கை தொங்க போட்டு பார்ப்பேன்.

பிடிக்காதது அதே இந்திய அணி தான் ரொம்ப காலமா ஜெயிக்கற மாதிரி பாவ்லா காட்டி விட்டு தோற்பது.

ஊர்கள்:

பிடித்தது பல தமிழ் நாட்டு கிராம்ங்கள் மனதில் நின்றாலும் சுந்தர பாண்டியபுரம் புல்லாந்திட்டும், ஆறும் , சென்னையும்.

பிடிக்காதது வட ஆறகாடு சாயல்குடி, முதுகுளத்தூர் பக்கம் ரொம்ப வறண்டு இருக்கும்.

சமையல்:

பிடித்தது அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்! (இத மாத்தி சொல்லி யாரு வாங்கி கட்டிக்கறது?!) .

பிடிக்காதது நல்லா பசிக்கும் போது இவங்களே சொதப்பி நம்மள சாவடிக்க, நாம் சிரித்துக்கொண்டே விழுங்கும் போது..!

Wednesday, November 18, 2009

பிரிவு!

இந்தப் பிரிவு

உங்களை
நெகிழ வைக்கும்!
சிரிக்க வைக்கும்!
புன்னகைக்க வைக்கும்!

படித்துப் பாருங்களேன்!!

லாட்டிரி டிக்கெட்!

1. கையில் பல லட்சங்கள்...!
வயிற்றுப்பசியுடன் விற்கும் சிறுவன்!!

2. கையில் பல லட்சங்கள்...!
கவலைகளுடன் என் தாத்தா!!

Monday, November 16, 2009

என்றோ எழுதிய கவிதை - 11

கற்பனை கூட பல சமயங்களில்
கிணற்றிலிட்ட
கல் போல அமிழ்ந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
நெஞ்சிலிருக்கும் வார்த்தைகளாய்
உறைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
காகிதங்களில் அச்சாகாமல்
கரைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
கையில் சிக்காத காற்றாய்
காணாமல் போகிறது!

கற்பனை கூட சில சமயங்களில்
கவிஞனின் கைபட்டு
காவியமாய் மிளிர்கிறது!

Sunday, November 15, 2009

ப்ரயாணம்!

பரந்து விரிந்த பாலையாய்
மாட்டுவண்டித் தடங்களூடே
நடந்துபோன மனிதர்களின்
காலடித் தடங்களைக்
கலைக்காமல் வைத்திருந்து
கடந்துபோனதொரு
பெயர் தெரியாத ஆறு.

சற்று முன் கூட வந்து
சட்டென்று திரும்பி
வேறெங்கோ செல்லும்
இருப்புப் பாதையொன்று.

ஒரு நவீன ஓவியம் போலும்
கலைந்து கூடும் மேகப் பொதிகளின்
பின்னணியில் மாலை வெயிலினூடே
நீண்ட நிழல் சிலுவைகளோடு
சற்றே பயங்காட்டி மறையும்
கல்லறைக் கூட்டம்.

என்னைப் போல் எதிரே
அமர்ந்தவருக்கும் இக்காட்சிகள்
வாய்த்திருக்குமோ என்று
விசனத்தில் நான்!

Saturday, November 14, 2009

குழந்தை!

அழுகையிலும், சிரிப்பிலும்,
கோபத்திலும், தூக்கத்திலும்,
எந்த கோலத்திலும் அழகு!

கொஞ்ச நினைப்போர்க்கு
சுகித்திருக்கும்
நம் வாழ்வைப்போல!

Friday, November 13, 2009

பிரசவம்

தானே இறைவனாகித்
தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
மரணத்தைத் தொட்டு,
ஜனனத்தைத் தந்திடும் சாகஸம்!!

Wednesday, November 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 10

கரை நிரந்தரமில்லை என
கரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்
கரையைத் தழுவி அலுத்தபின்,
கடலில் போய் அலையும் சேரும்!

உறவைத் தேடி அலையும் மனிதா...!
உறவைத் தேடி அலுத்த மனிதா...!
உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என
உறவின் உண்மை புரிந்து விடும்!

Tuesday, November 10, 2009

ஊடல்!

மிக அருகிலும் அழகாயிருக்கிறாய் நீ!
மெளனத்திலும் பேசுகிறாய் நீ!

உன் கோபம்
கையினுள் பனியாய்,
காதல் போர்வையில் கரைந்திடும்!

மீண்டும் பனி தேடும் மனது
போர்வையின் தைரியத்தில்!

Monday, November 9, 2009

என் டைரி!

அவசர உலகத்தின்
அனாவசிய டென்ஷன் இல்லாமல்
அதிசயமாய்ப் பழைய டைரியுடன் உட்கார்ந்தேன்...

எழுதிய பக்கங்களை விட
எழுதாத பக்கங்கள் பேசிய கதைகள்...

தட்டுத் தடுமாறி
என் ஷ¥வில் கால் புதைத்து
விளையாடிய
பக்கத்து வீட்டு சிறுமியை
ரசித்து எழுதிய கவிதை...

நட்ட இடமெல்லாம் பூ பூத்து
'அட்ஜஸ்டபிளிடியை' கற்றுக் கொடுத்த
செவந்திப்பூவின் கவிதை...

கடவுளுக்குத் தேர் இருக்கிறது,
கனவான்களுக்குக் கார் இருக்கிறது என்று
கவலைப்படாமல்
கால்கள் இருக்கின்றதென்று
கர்வப்பட்ட
காலத்தின் கதை...

ஒவ்வொரு பக்கமும் நினைவுறுத்திய
கதைகளும் கவிதைகளும்
சொல்லாமல் சொல்லியது
தொலைந்து போன
என் முகத்தின் அடையாளத்தை...
தவறிவிட்ட என் ரசனைகளின் ஆத்மார்த்தத்தை...

இன்று கவிதை
எழுதக்
கருவின்றி
தேடிக் கொண்டு இருக்கின்றேன்
என் டைரிகளில்...!

திருத்தமும், வருத்தமும்!

அனைவருக்கும்,

அன்பர் கருணா அவர்கள் சொன்னதைப் போல இந்தக் கவிதையை 'கவிவுணர்வு'டன் நிறுத்திக் கொள்வோம்.

மற்றபடி, இதற்குள்ளான அரசியலில் புக எங்களுக்கு விருப்பமில்லை.

தலைப்பு, சிலரைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. எங்கள் நோக்கம் அதுவல்ல. இருந்தாலும் மன்னிப்பைக் கோருகிறோம்.

இனி, விழிப்புடன் இருப்போம்!

என்றும் அன்புடன்,
இன்றைய கவிதை நண்பர்கள்

அகதிகள்

சுவாசம் விட இடந்தேடிடுவார்!

வேரறுத்து நிலமின்றி,
வேற்றுகிரகத்தார் போல்,
கால் ஊன்ற நிலம் தேடுவார்!

விதை விதைக்கும் உலகில் இவர்கள்
வேர் விதைக்க பயிலும் மனிதர்கள்!

Sunday, November 8, 2009

அடேங்கப்பாவும், அட போங்கப்பாவும்!

பா. ரா! வம்புல மாட்டி விட்டுட்டீயளே!


விதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி!

விதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

விதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

அடேங்கப்பா!

அரசியல்: ஜீவா, கக்கன்
எழுத்து: சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், என் சொக்கன், நா பார்த்தசாரதி
கவிதை: மகாகவி பாரதி, கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், மருதகாசி, கா மு ஷெரீ·ப்
நடிகர்: என் எஸ் கிருஷ்ணன், நாகேஷ், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், ரகுவரன்
நடிகை: சரோஜாதேவி, ஸ்ரீதேவி, பானுப்ரியா, த்ரிஷா, தமன்னா (ஹி..ஹி)
இயக்கம்: பாலசந்தர், ஸ்ரீதர்
இசை: கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வி குமார், எஸ் பி பாலசுப்ரமணியன், சங்கர் கணேஷ்
கிரிக்கெட்: ஸ்ரீகாந்த்
ஊர்கள்: திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்
சமையல்: அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்!

அட போங்கப்பா!

அரசியல்: கலைஞர், சோனியா
எழுத்து: யாருமில்லீங்கோ!
கவிதை: பா விஜய்
நடிகர்: இளைய / குட்டி / புரட்சி தளபதிகள் (கண்டுபிடிங்கோ!)
நடிகை: கொல்லங்குடி கருப்பாயி, பரவை முனிம்மா (அடிக்காதீங்கோ!)
இயக்கம்: அகத்தியன் (நிறைய எதிர்பார்த்து ஏமாந்தது), மணிரத்னம் (ரெண்டு வார்த்தை வசனங்களால்!)
இசை: யாருமில்லீங்கோ!
கிரிக்கெட்: எல் சிவராமகிருஷ்ணன் (வாய்ப்புகளை கோட்டை விட்டதற்காக!)
ஊர்கள்: சிங்காரச் சென்னை!
சமையல்: நானே செய்ய நேரிடும்போது!

ஜே கே, வார்த்தை தவறிவிட்டாயே நண்பா!!

Saturday, November 7, 2009

ராப்பிச்சை

புசித்த ஏப்பத்தின் மீதியை அள்ள வந்த
பசித்த ஏக்கத்தின் மிகுதி...

Thursday, November 5, 2009

என்றோ எழுதிய கவிதை - 9

"Divorce comes before Marriage"
in English Dictionary...
தமிழர் நாங்கள் பண்பாடு காப்பவர்கள்....!
அகராதியைப் புரட்டுங்கள்,
"திருமணத்திற்குப் பிறகுதானே
விவாகரத்து வருகிறது!"

Wednesday, November 4, 2009

காதல்!

திரும்ப முடியா பாதையில்
திக்குத் தெரியா பயணம்,
கைப்பிடித்துத் துணையாகும்
மரணம் வரை குறையாத
சுவையாகும்!

Tuesday, November 3, 2009

பொய்!

பொய் ஒன்றுதானே வாழ்வில் நிம்மதி
வெறுமை இல்லாத சங்கதி...!

வெண்மையாய் நீயும் வாழ்ந்து பாரடா!
தன்மையாய் நீயும் இருந்து பாரடா!
மனம் இங்கு மங்கிப் போகும்
மதி இங்கு குன்றிப் போகும்
வாழ்வும் பின் தங்கிப் போகுமடா...!

பொய் ஒன்றைக் கேட்டுப் பார்
மனதுள்ளே மயங்கிப் பார்
கண்ணோடு பேசிப் பார்
நடைமுறையை நினைந்து பார்
நிஜம் இங்கு வலிக்குமடா!

தந்தையாய் மகனின் அன்பு மாறாதே
தாயாயினும் மனையாளின் காதல் குறையாதே
காலமாயினும் நட்பின் வலிகள் உறைக்காதே
வயதாயினும் கண்ணில் நீரும் சுரக்காதே
வாய்மையாய் இருக்க வலியின் நிறம் புரியுதடா...

கண்மூடி நின்று பார்
உன்னை நீயும் கேட்டுப் பார்
உலகை உன்னில் உரித்துப் பார்
உண்மை உனக்கு வலிக்கும் பாரடா!

Monday, November 2, 2009

காத்திருத்தல்

ஊருக்கு நடுவே கடிகாரம்
ஊரெல்லாம் சரி பார்க்கும் நேரம்
என்னை நிற்க வைத்து
உனக்கு மட்டும் நின்று போகும்!

தனியன் - 2

தனியன் கவிதைக்கு ப்ரபா அவர்களின் பதில் கவிதை இதோ!


எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாமல் போனாலும்,
எல்லோரும் இருந்தும்
எவரும் இல்லாமல் போனாலும்,
எல்லோர் மேல் பழியிருந்தும்
என் மீது மட்டுமே விழும்போதும்,
நான் தனியன்தான்,
'BUG' assign ஆகும் பொழுது...!

Saturday, October 31, 2009

கவிதைப் பெண்...!

கவிதை கூட
பெண்ணின் பார்வை போலத்தான்...
ஆயிரம் அர்த்தங்கள் இருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணின் மனசு போலத்தான்...
ஆழமாயிருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணின் இடை போலத்தான்...
'சிக்' என்றிருக்க வேண்டும்!

கவிதை கூட
பெண்ணைப் போலத்தான்...
ரசித்து அனுபவிக்க வேண்டும்,
ஆராயக்கூடாது!

நடுத்தரம்!

முதல் வாரமே
மாதக்கடைசியாகி
மீண்டும்
முதல் வாரம் தேடும்
தரித்திரம்!

Thursday, October 29, 2009

தனியன்

வீடு சுற்றி தோட்டம் வளர்த்து,
பதியன் போட்டு, பூ வளர்த்து,
தனியாய் ரசிப்பேன் நான்
தனியாய் வந்தவன்தானே நான்,
போகப் போவதும் தனியாய்த்தான்!!

Wednesday, October 28, 2009

கனவு

விழித்திரையில் நம்
நினைவுகளின் நிழல்!

உறங்கையில் முழித்திருக்கும்,
விழிக்கையில் உறங்கிப்போகும்!

என்றோ எழுதிய கவிதை - 8

'மதர் டங் தெலுங்கு. படிக்கறது கான்வென்ட். அவளுக்கு போயி பர்த்டே ப்ரஸன்ட் பாலகுமாரன் புக்கா? அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இதுலல்லாம் இல்லங்கறதாவது உனக்கு தெரியுமா? ' என்று பொங்கிய தங்கைக்கு என் அவஸ்தை புன்னகைதான் பதில்.

பாலகுமாரன் எழுதிய 'மௌனமே காதலாகி...' புத்தகத்தின் முதல் பக்கத்தில்

'அன்பு' என்பது மூன்றெழுத்து
'நட்பு' என்பது மூன்றெழுத்து
'பாசம்' என்பது மூன்றெழுத்து
'.....' (அவள் பெயர்!) என்பதும் மூன்றெழுத்துதான்!

என்று கையொப்பமிட்டுக் கொடுத்ததின் பின்னணியை எப்படி என் அப்பாவித் தங்கையிடம் சொல்வேன்?!

இன்று, ஈஸிசேரில் உட்கார்ந்து அசை போடும் போது, "கொஞ்சம் தைரியமாய்
"'காதல்' என்பது மூன்றெழுத்து" எனும் வரிகளைச் சேர்த்திருந்தால்
'தோல்வி' என்ற மூன்றெழுத்தைத் தவிர்த்திருக்கலாமோ?!"
என்று தோன்றுகிறது!

Saturday, October 24, 2009

குத்தால சாரல்!

குத்தால சாரல் நீயடி!
உன் காதலில் நனைந்தேன் நானடி!
நிற்காத அருவி உன் நினைவடி!
குளித்தால் மனது குளிருதடி!

அருவியின் வெள்ளத்தில் நனைந்தேனே!
உன் பார்வையின் வெள்ளத்தில் மறைந்தேனே!
கண்ணிலே கண்ணிலே உனை நான் கண்டபின்
மண்ணிலே மண்ணிலே சொர்க்கம்தானே!

வீட்டினுள் அருவியைச் சிறையாக்க,
வாழ்வினில் பாதி உனையாக்க,
தாலிகட்டி சொந்தமாய்,
வேலி கட்டி மொத்தமாய், எனக்கு...!

பொறந்த கொழந்தை ரொம்ப அழகா இருந்தா திருஷ்டிப் பொட்டு வெப்பாங்க! அது போல, அருவியாக் கொட்டிய 'ஜே கே' கவிதைக்கு 'கேயார்' பதில் உரை இதோ... (பதில் கவிதைன்னு சொல்ல மனசு வர்லே!)

பார்க்கப் பார்க்க
அருவியும் அழகு...!
பார்க்கப் பார்க்க
பாவையும் அழகு...!

அருவியில் நனைந்தபின்
ஆனந்தமாய்க் குளித்தபின்
பசிதான் தோன்றும்...
மனம் உணவைத்தான் தேடும்!

உன்னில் நனைந்தபின்
உன்னில் குளித்தபின்
பசிதான் தீருமடி..!
உணர்வும் உறங்குமடி!

சாரலாய் நீயிருந்தாலும் - உனைச்
சார்ந்தேதான் நான் என்றும்!

அடியேய்!

விழித்து எழுகையில்,
குளித்து முடிக்கையில்,
உண்டு களிக்கையில்,
நடந்து போகையில்,
படுத்து உறங்கையில்,
விடாது துரத்தும்
நிழலாய் உன் நினைவு,
அடியேய்! என்னை வாழவிடு!
இல்லையேல் வாழ்வாய் வந்துவிடு!

Thursday, October 22, 2009

நதிகள்!

மலையில் ஜனித்து
நிலத்தில் புலம்பெயரும்
அகதிகள்!

வெயிலில் மெலிந்து,
மழையில் பெருத்து,
புயலில் பூரித்து,
கடலில் கலந்து போகும்
தியாகிகள்!

அரசியல் சாக்கடையால்
தம் உறவைச் சேர இயலா
அனாதைகள்!

நறுக்ஸ் - நாலு வரிகள்!

நறுக்ஸ்-1, நறுக்ஸ்-2, நறுக்ஸ்-3 மின்னஞ்சலில் வந்த கவிதைகள். நாங்கள் எழுதியது அல்ல.

நல்ல கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் வெளியிடப்பட்டவை. உங்களை, எங்களை சிந்திக்க வைத்த முகந்தெரியாத கவிஞர்களுக்கும், கருத்துக்களைப் பதித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி!

நறுக்ஸ் - 3

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்

*திமிர்..*
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்.

*கொலை..*
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு.

*அடக்கம்..*
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்.

*ஆணாதிக்கம்..*
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

*வேலி..*
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

Sunday, October 18, 2009

நறுக்ஸ் - 2

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்


*ஊர்...*
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


*உறுத்தல்..*
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


*மனிதன்..*
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

*மேடை...*
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்

*பெண்..*
ஏடுகளில் முன்பக்க
அட்டையில்
வீடுகளில் பின்பக்க
அடுப்பங்கரையில்.

Saturday, October 17, 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அப்பாவும் தீபாவளியும் உங்களை அசைத்துப் பார்க்கும் படைப்பு இது!


எங்கள் படைப்புகளைச்
சகித்து, சுகித்து,
பொறுத்துக்கொண்டிருக்கும்
வாசகர்கள் அனைவருக்கும்
எங்களின் சிரம் தாழ்ந்த,
உளங்கனிந்த,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Friday, October 16, 2009

நறுக்ஸ் - 1

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்


*கோயில்..*

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.


*தளை..*

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


*பெண்மை..*

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்.


*வெறி..*

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்…

எரிந்ததுஅடுப்பல்ல-சேரி.



*சாமி..*

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம்.

Wednesday, October 14, 2009

என்றோ எழுதிய கவிதை - 7

"என் மீது குற்றமாம்...
சிலர் கூவித் திரிகிறார்கள்..
விட்டுத் தள்ளு அவர்களை...

சேற்றை அள்ளி வீசுவதாய்
நினைத்துக்கொண்டு
கைகளைச்
சேறாக்கிக் கொள்பவர்கள்!"

அற்புத கணங்கள்!

பள்ளத்தாக்கினின்றும் சுழன்று எழும்
மேகப்புகை போலும் என்
எண்ணங்கள்....

கள் உண்போர்
களைப்பாறுதலும்
காய் நகர்த்தி
சூதாடுதலும்
பின்னிரவின்
நிழல் காரியங்களும்
அவ்வப்போது நிகழ்ந்தாலும்...

காய்ந்த காக்கை எச்சம்
கண்களில் சீற்றம்
கை உடைந்த ஐய்யனார் சிலை!

வருடங்களாகியும்
வாய் மூடாமல்
வாசலில் நிற்கும்
குதிரைகள் மட்டும்
துணையாய்.. ..

கேட்பாரற்றுக்கிடக்கும்
ஊரின் எல்லையில்!

வாழ்க்கை நீரின் வட்டத்தில்
வளைந்த தென்னையினின்றும்
குதித்து மறைந்த சிறுவர்கள்...

வெற்றிலை இடிக்கும்
கிழவியின் வயோதிகம்
உணர்த்தும்
காய்ந்த அரசமரச் சருகுகள்...

இயல்பு மறந்து
புரிதலற்றுப்போகும்
பொய் முகங்களின்
வாழ்க்கை
கனவுகளின் சுவாசத்தில்...

ஆசுவாசம் தொலைத்து
சுயம் தேயும்
அவசர வாழ்க்கையிலும்
அவ்வப்போது நிகழும்
இத்தகைய அற்புத
கணங்கள்!

Sunday, October 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 6

'மாற்றான் தோட்டத்து
மல்லிகை மணக்கும்!'
என்கிறாயே...
வெட்கமாயில்லை?!
அவன் முகர்ந்த
எ(மி)ச்சம்தானே உனக்கு!

Saturday, October 10, 2009

காதல்...!

சந்திர பார்வை,
நிசப்த நடுநிசி,
கீற்றுகளோடு காற்று
உறவாடும் வேளை,
ஊரே உறங்கிக்கொண்டு...
நான் மட்டும் விழித்துக்கொண்டு..

அறியா வயதில்
ஆராயாமல் வந்த காதல்...

நினைத்துப் பார்க்கிறேன்,

விதை ஒன்று
பட்டென்று முளைத்து,
பளிச்சென்று சிரித்து
பசுமை காட்டுமே...
அது போலத்தான்
உன் நினைவுகளும்...

கலர் கலராய்க்
கண்ட கனவுகள்
உன் நினைவில் இருக்குமா????

எப்பொழுதும் இல்லையென்றாலும்
எப்போழுதாவது நினைத்துக் கொள்வாயா???

ஒரு காலத்தில்
உன்னை முழுதுமாய் அறிந்தவன் - இன்று
உண்மை அறியமுடியாமல்...

எனக்குள் இருக்கும்,
எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள்
உனக்குள்ளும் இருக்குமா???

விடை இல்லாக் கேள்விகள்தான்
வாழ்க்கையா??

முடிவில்லா வினாக்களில்
தான் வாழ்க்கை யென்றால் - இந்த
கவிதைக்கு மட்டும்
முடிவெதற்கு???

என்றோ எழுதிய கவிதை - 5

அவள் என்னைப் பார்த்து,
'நான் அழகா?' எனக் கேட்டாள்!

நான் சொன்னேன்
'தூரத்திலிருந்து பார்க்கும்போது
நீ அழகுதான்,
அருகில் வந்தபிறகுதான் தெரிகிறது
உனக்கும் அழகுக்கும்
தூரமென!'

ரஜினிக்கு ஒரு பாட்டு!

வெற்றிக்கனி எட்டி பறிக்க
எம்பத்தான் வேண்டும்
வியர்வைத்துளி பூமியிலே
சிந்தத்தான் வேண்டும்
சோதனையை முட்டித்தள்ள
நிமிரத்தான் வேண்டும்
வேதனையை விட்டுத்தள்ள
சிரிக்கத்தான் வேண்டும்

இமையிலே உறக்கம் அழுத்தும்போதும்
முழிக்கத்தான் வேண்டும்
வழியிலே தோல்வி வருத்தும்போதும்
ஏற்கத்தான் வேண்டும்
இடையிலே தடைகள் வரும்போதும்
தாண்டத்தான் வேண்டும்
உன் அடியிலே பூமி நழுவும்போதும்
நிற்கத்தான் வேண்டும்

தலையில கனம் இல்லாம
இருக்கத்தான் வேண்டும்
மனசுல திடம் என்றுமே
இருக்கத்தான் வேண்டும்
உறுதி ஒளி கண்ணுக்குள்ளே
மின்னத்தான் வேண்டும்
வெற்றிப்பசி வயிற்றுக்குள்ளே
கிள்ளத்தான் வேண்டும்
நம்பிக்கை பலம் புஜத்தினிலே
தெரியத்தான் வேண்டும்
இலட்சிய இலக்கை இறுதியிலே
அடையத்தான் வேண்டும்

(ரஜினியின் சிவாஜி தான் இன்று ஊரெங்கும் ஒரே பேச்சு. சரி நம்பளும் ரஜினி சார் பாடுகிற மாதிரி எழுதலாம்னு ஒரு முயற்சி !! பாட்டுல முதல் வரி எல்லாம் ரஜினி பாடுகிற மாதிரியும் அடுத்த வரி எல்லாம் பக்கத்துல கூட்டமா மற்றவர்கள் எல்லோரும் CHORUS பாடுகிற மாதிரியும் யோசித்தேன், அதன் விளைவு தான் இந்த பாடல்!)

Thursday, October 8, 2009

என்றோ எழுதிய கவிதை - 4

அதிகாலை விழித்து,
அரனைப் பூசித்து,
இரையைப் புசித்து,
பஸ்ஸில் நெரிந்து,
வியர்வை வழிந்து,
அலுவலகத்துள் நுழைந்து,
வேலைக்குள் அமிழ்ந்து,
'ஸார்' எனப் பணிந்து,
மதியம் உணவை அடைத்து,
மாலை மறந்து,
இரவுப்பறவையாய்ப் பறந்து,
வீட்டினுள் அடைந்து,
'அம்மாடி' என விழுந்து,
நிமிரும் பொழுதில்

முகம் மலர்ந்து,
சீண்டிச் சிரித்து,
ஆறு மாத மழலை தவழ்ந்து
பாதம் பிடிக்கையில்,
இயந்திர வாழ்க்கை இழந்து,
இயல்பாய் ஆகும் தருணம் அது!

நான்?

விடை தெரியா வினாவொன்று
வழி தெரியாமல் உள்ளிருக்க,
வடிகாலின்றி எண்ணங்கள்
மனத்திரையில் மன்றாடும்.

'நான்' என்று ஏதுமில்லை;
பிறர் சொல்லும் 'நான்' நானில்லை;
மனம் கூறும் 'நான்' பிடிக்கவில்லை;
எந்தையும் தாயும் உருவாக்கிய
'நான்' தெரியத்தான் இல்லை!

பல வடிவெடுத்ததில்
என் உருவம் மறைய,
என்னை நானே தேடுகிறேன்;
என்னை நானே எதிர்க்கிறேன்!

'என்'னை 'நான்' பார்க்கும் கண்ணாடி
புகையாய் இருக்க,
பனிமூட்டம் தானோ?!
கை வீச மறைந்திடுமோ
'நான்' யார் என்று?!

Wednesday, October 7, 2009

என்றோ எழுதிய கவிதை - 3

பின்னலை முன்னே இட்டு
பேசித் தள்ளும்
அவளைப் பார்க்கையில்....

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்....
மனசு!

என்றும் காதல்...

காதல் என்றும் சுகந்தருமே!
உள்மனதைக் கேளு சொல்லிடுமே!

ஏழ்மையிலும் வளருமடி இது!
தூய்மையான கவிதையடி!
கண்களில் வளர்ந்து மனதில் படர்ந்து
உலகை இங்கே வளர்க்குதடி!

உயிரைக் கூட உருவிக் கொண்டோடும்,
பிரிந்த உறவைச் சேர்த்து வைக்கும்,
அன்பாய் அழகாய் மனதை மாற்றும்,
சுவையாய் முழுமையாக்கும்

இங்கு சிரித்திருப்பதும்,
சுகித்திருப்பதும் நம் கையில்
காதலில் வாழ்வோமே,
ஒன்றாய் வள்ர்வோமே...!

காதல் செய்ய இளமையாய் மாறும் மனது,
காதல் கொள்ள மன்னிக்க பழகும் மனது,
பகைமை பொறாமை ஏதுமில்லாமல்,
வெண்மையாய், வெறும் குழந்தையாய் ஆக்கிடும்...

காதல் என்றும் சுகந்தருமே!

Tuesday, October 6, 2009

நீயும்....?!

வெற்று மணலை ஈரமாக்கி,
வாசம் கிளப்பி,
விழிகளை வியக்க வைத்தபின்,
வான் மேகங்கள்
விலகி விடும்! -
நீயும் மேகம்தானோ?!

என்றோ எழுதிய கவிதை - 2

மனிதர்கள் மூன்று வகை...
ஒன்று எண்ணத் தெரிந்தவர்கள்...
மற்றொன்று எண்ணத் தெரியாதவர்கள்...!

அன்றும் இன்றும்

கைகள் உணர்வாய்
மொழிக்கும் மௌனமாய்
காதல் காமமாய்
எழுதும் கவிதையாய்

மயிர்க்கால் அசைவும்
மனசுள் அலைபாயும்
சிரிக்க சிரிக்க
சிலிர்த்துப் போகும்

வெட்கம் விட்டு
விரசம் மறந்து
விரகம் உணர்ந்து
வளர்த்த தீபம்
இன்னும் அணையவேயில்லை!
ஒளியாய்ப் பக்கத்தில்!

நடு சாமத்தில்
'தொம்' என்று கால்போட்டு
தூக்கம் கலைக்கும்
என் வீட்டுக் கொழுந்து!!

தாலாட்டி மடி ஆடும்,
நாவும் பாட்டு பாடும்,
மனம் மட்டும்
அன்றைய நினைவை அசைபோட்டு,
என்றும் எனக்கு அழகாய்,
உறங்கும் மனைவியைப் பார்த்து,
பெருமூச்சு விடும்!
மடி ஆட்டிக்கொண்டே!

Sunday, October 4, 2009

உணர்வு

உதயத் தீயில், மணங்கமழ் மலர் புன்னகைக்கும்,
மதியம், தூரத்துச் சாலைகள் கண்ணீர் சிந்தும்,
சந்தியம், தென்றல் பூப்பெய்தும்,
இரவுதனில் தீச்சுடர் சிறையில் சோகமாகும்;

வளர் மழலை இன்பந்தந்து, இடர் நினைவுறுத்தும்,
பருவ மகளிர் அழகு கவர்ந்து, பயமுறுத்தும்;
வளர்ந்த வயதும், அனுபவங்கண்டு இன்பம் தள்ளி வைக்கும்
மூப்பெய்தும் பருவமும் மரணம் தெரிந்தும் இன்புறும்!

கலவைகள் கோர்வையிங்கு
ஒன்றின் ஜீவிதம் உணவாம் மற்றதிற்கு;
தள்ளி வைத்து வசித்தல் ஞானம்,
உள் வைத்து இருத்தலோ சூன்யம்.

என் காற்று...என் (சு)வாசம்!

காற்றே இங்கு வீசாதே! காதல் தீயை மூட்டாதே!
பிரிவின் ராகம் பாடாதே! சோக கீதம் மீட்டாதே!

உன் பிரிவுக்காற்றை என்னுள் வைத்து
நான் சுவாசிக்க மறந்தாலும்
உன் நினைவுக்காற்று என்னுள் வந்து
என்னை சுவாசிக்க வைத்திடுமே!

உன் வாசம் நானெடுத்து ஒரு நேசம் வித்திட்டேன்
என் சுவாசம் நீயெடுத்து ஒரு வாசம் வித்திட்டாய்
இனி வீடெங்கும் மணம்தான் என்றென்றும் வீசி
என்னோடு தினம் தினம் பேசிடுமே!

ஓடி ஓடிக் காதல் நான் புரிந்ததேன்?
இன்று பிரிந்து நானும் வருந்துவதேன்?
தேடித் தேடி காற்றும் நம்மைப் பார்ப்பதேன்?
புயல் காற்றும் என்னுள் வேர்ப்பதேன்?

இன்றும் கூட முதிர் காதல் என்னுள்ளதோ?!

என்றோ எழுதிய கவிதை - 1

இருளான எதிர்காலம்
என்முன்
பிரகாசமாய் நிற்கிறது!