Sunday, December 6, 2009

மணிவிழா நாயகன் - 4

இரு வேடங்களில் ரஜினி!


அமிதாப் படங்களின் தமிழாக்கத்தில் ரஜினி நடிக்கத் துவங்கியது 'பில்லா' (1980) படத்திலிருந்துதான்.

கடத்தல் மன்னனாக, தெருவோர ஆட்டக்காரனாக இரு வேடங்களில் தன்னை முழுமையாகக் கொடுத்து, இந்திப் பதிப்பிற்கு ஈடாக பொருத்திக் கொண்டார் ரஜினி. கண்ணதாசன் எழுதிய 'மை நேம் இஸ் பில்லா', 'நாட்டுக்குள்ள எனக்கு ஒரு ஊருண்டு' பாடல்களின் வரிகள் ரஜினியை நடிகனுக்கும் மேலான தனி மனிதனாய் மக்களுக்கு அடையாளம் காட்டின. சூப்பர் ஸ்டார் பட்டம் 'பைரவி' தந்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ரஜினிக்குக் கிடைத்த படம் 'பில்லா'.

அன்றைய அலங்கார் திரையரங்கில் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி ரஜினிக்குப் புகழை வாரிக்கொடுத்த 'பில்லா', தயாரிப்பாளர் பாலாஜி அவர்களுக்கும் 'ரீமேக்' படங்களைத் தயாரிக்கும் ஆர்வத்திற்குப் 'புதுப்பாதை' அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.ரஜினி-மகேந்திரன் கூட்டணியில், வித்தியாசமான பின்னணியில் அமைந்த படம் 'ஜானி'(1980).

நாவிதராக வரும் ரஜினியின் கஞ்சத்தனம் - வீட்டிற்கு இரு பூட்டுக்களைப் பூட்டிவிட்டு இழுத்துப் பார்ப்பது, செடியிலுள்ள பூக்களை எண்ணி எண்ணிச் சரி பார்ப்பது - sober look, நடை, உடை அனைத்திலும் வித்தியாசமோ வித்தியாசம். கத்திரிக்கோலைப் பிடிப்பதிலும், முடி வெட்டுவதிலும் ஸ்டைலோ ஸ்டைல். ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப் பொருத்தம் இயல்பு+சூப்பர். திருடன் ரஜினி, ஸ்ரீதேவியிடம் அன்பை எதிர்பார்க்கும் இடம் இனிமை.

'எப்போதும் ஒண்ணை விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதுக்கு முடிவே இல்ல' என்கிற ரஜினி டயலாக் படத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான் எத்துணை பொருத்தமானது?!

இளையராஜாவின் இசை + அசோக்குமார் ஒளிப்பதிவு படம் முழுதும் ஒட்டியிருப்பது மற்றுமொரு சிறப்பு.

"பாகவதரிடமோ, எம்ஜியாரிடமோ இருந்த சில சிறப்பு அம்சங்கள் எதுவுமே இல்லாமல், தனக்கென உயர்வான ஒரு தனி மேடையை மக்களால் அமைத்துக்கொண்ட ரஜினியின் ஆற்றல் மகத்தானது. " 'சூப்பர் ஸ்டார்' பட்டம் நிரந்தரமல்ல," என்று அவர் சொன்னாலும், 'சூப்பர் ஸ்டார்' புகழ் மக்களால் தரப்பட்டது. இனியொருவர் இந்த இடத்தைப் பிடிப்பது நடக்கிற காரியமில்லை" என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.


பொதுவாக மகன் தவறு செய்வான்; தந்தை தட்டிக் கேட்பார். இதுவே தலைகீழாயிருந்தால்? நெற்றிக்கண்(1981) கதை இதுதான்.

தன் வயதிற்கு மீறிய வேடமென்றாலும், ரஜினி அப்பா 'சக்ரவர்த்தி'யாக ஏற்று நடித்துக் காட்டிய ஸ்டைல், தோரணை அடேங்கப்பா! ரஜினியின் நடிப்புக்கு சவால் விடும் ரெட்டை வேடங்கள், 'நடிப்பு பிசாசு'கள் லக்ஷ்மி/சரிதா, விசுவின் அருமையான கருத்து/கசையடி வசனங்கள், இளையராஜாவின் இன்னிசை என அத்துணை அம்சங்களும் இருந்தால் படம் ஏன் நூறு நாட்கள் ஓடாது?!

"அப்பா பிள்ளை டூயல் ரோல் என்பதால் இரண்டு பேரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் ரொம்பவே மெனக்கிட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் மாஸ்க் பண்ணிப் பண்ணித்தான் எடுக்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்குமிடையே சண்டையும் வரும். அதையும் மிகவும் கவனமாக மாஸ்க் பண்ணித்தான் பாபு எடுத்தார். அப்படி மாஸ்க் பண்ணும்போது, நடுவில் கோடு தெரியாமல் எடுக்கும் லாவகத்தை ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் பெற்றிருந்தார்" என இயக்குநர் எஸ் பி எம் பெருமிதமாய்ப் பேசுகிறார்.

'ரஜினி என்னும் வைரத்தை நான் கண்டுபிடித்தாலும், வைரத்தைப் பலவிதமான கதா பாத்திரங்களைக் கொடுத்து, எஸ் பி எம் பட்டை தீட்டினார்' என்கிறார் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.

மூன்று படங்களும் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளியில் வெளி வந்து, வெற்றி முத்திரை பதித்து, ரஜினியை 'புது அவதார'மாய்ப் படவுலகுக்கு அடையாளம் காட்டின.

இவைகளுக்கு நடுவில் மிக முக்கியமான படமொன்றிலும் ரஜினி நடித்தார், அது...

தகவல்களுக்கு நன்றி
ஏவி எம் தந்த எஸ் பி எம் - விகடன் பிரசுரம்
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்

3 comments:

 1. தகவலுக்கு நன்றி
  நல்ல பதிவு

  ReplyDelete
 2. பில்லா அத்துணை பிடித்த படம் இல்லை என்றாலும், ஜானி என்னோட பட்டியலில் ever green movie. அதிலும் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அருமை. "ஒரு இனிய மனது.....", "என் வானிலே........", "ஆசைய காத்துல........." "காற்றில் எந்தன் கீதம்........" எல்லாமே என்னோட favourite songs. ஜானி படத்தில சில நிமிடமே வரும் ஒரு கதா பாத்திரத்தை விட்டுடீங்களே? (ஆசைய காத்துல......). நெற்றிக்கண் படமும் நான் ரொம்பவும் ரசித்த படம்.

  ReplyDelete
 3. ரஜினியை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் 1979 to 1985 காலங்களில் வந்த படங்களை பார்க்க வேண்டும்.

  ReplyDelete