Tuesday, December 1, 2009

சின்னதாய் ஒரு தோட்டம்...

என் தோட்டம்
மிகச் சிறியது...

முன் காலையில்
இலையின் விளிம்பிலின்று
சந்தோஷமாய்த்
தற்கொலை செய்து கொள்ளும்
பனித்துளி!

தோட்டமொன்றை வைக்கச்
செடிகளை விடச்
சிந்தனைகள்தான் வேண்டும் எனச்
சொல்லாமல் சொல்லிப்போகும்
வண்ணத்துப்பூச்சி!

மெத்தென்ற புல்வெளியில்
தன் 'குட்டி' குட்டிகளைப் போட்டு
இரை தேடிச் செல்லும்
பூனை!

அவ்வப்போது வந்து...
ஆங்கிலத்தில் கொஞ்சி
ரோஜா கேட்கும்
மழலை மொழி!

இன்று என் வீடு,
நாளை மாடி வீடு - என
உயரும் கிறிஸ்துமஸ் செடி!

மெலிதான தூறல்களின்
தாளத்துக்குத் தாக்குப் பிடிக்கும்
சின்னச் சின்ன விதைகள்...

கவிதையே தோட்டமா??
தோட்டமே கவிதையா??

இரண்டும் ஒன்றுதான்..
பெரிது பார்வையும்
சிறிது நேரமும் இருந்தால்...!

ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது...!

ஒரு கவிதையின் அழகு
படைப்பவரைப் பொறுத்தது..!

கனவுகளில்லாமல்
வாழ வந்த
இந்திய நகரத்தில்
கனவு கண்டது

சின்னதாய் ஒரு வீடும்
பெரியதாய் ஒரு தோட்டமும்...!

நிழலின் முகத்தில்
நிஜமறிய
மனது திருத்திக்கொண்டது!

சின்னதாய் ஒரு வீடும்
(அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்
ஒரு தோட்டமும்..!

8 comments:

  1. //ஒரு தோட்டத்தின் அழகு
    பராமரிப்பவரைப் பொறுத்தது...!

    ஒரு கவிதையின் அழகு
    படைப்பவரைப் பொறுத்தது..!//

    ரொம்ப டச்சிங், ப்ரபா!
    அருமையான வரிகள்,
    மிக முக்கியமாய்...
    அருமையான கவிதை!

    -கேயார்

    ReplyDelete
  2. //தூற்றல்களின்//
    தூறல்களின் என்று இருக்க வேண்டுமோ?
    ==

    Atleast....

    Wow. wonderful.

    ReplyDelete
  3. //ஒரு தோட்டத்தின் அழகு
    பராமரிப்பவரைப் பொறுத்தது...!

    ஒரு கவிதையின் அழகு
    படைப்பவரைப் பொறுத்தது..!//

    தோட்டத்தையும் கவிதையயும் ஒப்பிட்டது அருமை மட்டுமல்ல அழகும்...

    ReplyDelete
  4. //சின்னதாய் ஒரு வீடும்
    (அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்
    ஒரு தோட்டமும்..!//
    என்ன செய்ய...? மிக சின்னதாய் ஒரு தோட்டம் போட கூட இடமில்லாத அதிர்ஷ்டசாலி நான். அருமையான கவிதை ப்ரபா. நன்றி.

    ReplyDelete
  5. //தோட்டமொன்றை வைக்கச்
    செடிகளை விடச்
    சிந்தனைகள்தான் வேண்டும் எனச்
    சொல்லாமல் சொல்லிப்போகும்
    வண்ணத்துப்பூச்சி!//

    இந்த வரி ரொம்ப அழகு

    எல்லா வரிகளுமே ரசனையானவையே ...எதை விடுப்பது எதை எடுப்பது என்று குழம்ப வைக்கும் அழகான வரிகள்.கவிதை அழகா இருக்குங்க.

    ReplyDelete
  6. அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
    http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

    ReplyDelete
  7. @விதூஷ்

    'தூற்றல்' தூறலாகி விட்டது!
    உன்னிப்பாகக் கவனித்தமைக்கும்,
    திருத்தச் சொன்னதற்கும் நன்றி!

    @புலவரே

    இவ்வரிகள் எல்லோருக்கும் பிடித்துப்
    போகும்!

    @கல்யாணி சுரேஷ்

    வளர்ந்து வரும் அடுக்குமாடியில்
    தோட்டத்துக்கு எங்கே போவது அம்மணி?!

    ஆதங்கம் நியாயமானது!

    @Mrs Dev

    வண்ணத்துப்பூச்சியை ரசித்தமைக்கு நன்றி!
    தங்கள் வரவு நல்வரவாகுக!
    அடிக்கடி வந்து போனால் இன்னும் நன்றாயிருக்கும்!

    @தியா

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை தோழரே!
    எங்களை மிக உயரத்தில் வைப்பது சந்தோஷத்துடன், சங்கடத்தையும் தருகிறது!

    நிலைக்க வேண்டி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete