Wednesday, October 14, 2009

அற்புத கணங்கள்!

பள்ளத்தாக்கினின்றும் சுழன்று எழும்
மேகப்புகை போலும் என்
எண்ணங்கள்....

கள் உண்போர்
களைப்பாறுதலும்
காய் நகர்த்தி
சூதாடுதலும்
பின்னிரவின்
நிழல் காரியங்களும்
அவ்வப்போது நிகழ்ந்தாலும்...

காய்ந்த காக்கை எச்சம்
கண்களில் சீற்றம்
கை உடைந்த ஐய்யனார் சிலை!

வருடங்களாகியும்
வாய் மூடாமல்
வாசலில் நிற்கும்
குதிரைகள் மட்டும்
துணையாய்.. ..

கேட்பாரற்றுக்கிடக்கும்
ஊரின் எல்லையில்!

வாழ்க்கை நீரின் வட்டத்தில்
வளைந்த தென்னையினின்றும்
குதித்து மறைந்த சிறுவர்கள்...

வெற்றிலை இடிக்கும்
கிழவியின் வயோதிகம்
உணர்த்தும்
காய்ந்த அரசமரச் சருகுகள்...

இயல்பு மறந்து
புரிதலற்றுப்போகும்
பொய் முகங்களின்
வாழ்க்கை
கனவுகளின் சுவாசத்தில்...

ஆசுவாசம் தொலைத்து
சுயம் தேயும்
அவசர வாழ்க்கையிலும்
அவ்வப்போது நிகழும்
இத்தகைய அற்புத
கணங்கள்!

2 comments: