Friday, September 30, 2011

ஒரு கோடு

பிறந்தும், வளர்ந்தும்,
வாழ்ந்தும், இறந்தும்,
இருக்கும் உலகில்...

வளர்ந்ததின், வாழ்ந்ததின்
அர்த்தம் அறிவிக்காது
பிறப்பு - இறப்பு என்று
மட்டுமே சேதி சொல்லும்!

இறந்தவர் நம்மிடை
இல்லாததைச் சொல்லும்...!!
நமக்கு நாளை இல்லாமல்
போவதைச் சொல்லும்...!

Thursday, September 29, 2011

ஏன் இறைவா?

புகழுக்கு நாணி,
கர்வத்திற்குக் கூனி,
பணிவிற்குப் பழகி,
பந்தத்திற்க்கடங்கி,
பாசத்திற்கு மயங்கி,
நேசத்திற்கு முடங்கி,
உறவுக்கு ஏங்கியிருக்கும்
பிறப்பாய் நான்...

உருவம் இருந்தும்
உறவும், பலரும்,
எனை அருவமாய்
பார்க்கும் அவலம்...!

இவையாவும் புரியும்படி
படைத்ததும்...

ஏன் இறைவா?!

Wednesday, September 28, 2011

காதல் குளம்

ஓரிடத்திலிருக்கும்,
தீராதிருக்கும்,
அமுதசுரபியாயிருக்கும்,
அனுபவம் தந்திருக்கும்,
சிரிக்கச் சிரித்திருக்கும்,
சலனப்படச் சலனமாகும்,
முங்கி எழ, மோகம் தரும்,
மீண்டும் முங்கச்சொல்லும்...

எல்லையை என்னிடத்தில் தந்தே...
எல்லையில்லாதிருக்கும்!

Tuesday, September 27, 2011

புரிதல்

அறிவதற்கு ஆயிரம் உண்டிங்கு..
அறிவதெல்லாம் புரிவதில்லை!
புரியாதது அறிந்தும் பயனில்லை..!!

சிறிதாய் அறிந்தாலும், புரிந்தே
அறிதல் சிறப்பாகும்...!
வாழ்வை சிறப்பாக்கும்..!!

Monday, September 26, 2011

ஏணி

ஏற்றம் தரும் ஏணிக்கு
என்றும் ஏற்றமில்லை!
தன்னிலை அறிந்து,
தன்னிடமே இருந்திட,
ஏமாற்றமில்லை!!

ஏறுவோர் இறுங்கிடுவர்
என்றறிந்த ஏணி போல்,
ஏற்றிவிடு மற்றவரை...!
இறங்குவோரை தாங்கிடவே
நீ நிலையாய் இருந்திட,
ஏமாற்றமில்லை வாழ்விலே!!

Sunday, September 25, 2011

பிரிவு

பிரிந்து நீ செல்லுமுன்னே,
அந்நினைவே துயர் தருமிங்கே!

நினைவிலும் பிரியாதிருக்க,
பிரிவென்றே சொல்லாதிரு,
என் அன்பே...!

Thursday, September 22, 2011

கானல் நீர்

பொருட்செல்வ பற்று
கானல் நீர் போல்...

எல்லை காட்டும்..
எல்லை சென்றடைய,
எல்லையில்லாது போகும்..!!

Wednesday, September 21, 2011

ஓர் கல்

குளத்தில் எறிந்தே
சலனமாக்கலாம்....
இலக்கில் எறிந்தே
கனியும் கொய்யலாம்...

வீசும் கையும்,
வீச்சும் நம்மிடத்தே...
வினையாயும்
விதையாயும் அவை...
அமைவதோ..
நம் எண்ணமிடத்தே..!!

Tuesday, September 20, 2011

காதல் கவிதை

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை! எழுதியது நினைவிருக்கலாம்...! இது முழுக்க முழுக்க சினிமாத் தலைப்புகள் வைத்து எழுதப்பட்ட கவிதை...! வேறு வார்த்தைகளைச் சேர்க்கக்கூடாது என்கிற வைராக்கியம்(?!)

எனக்கு 20 உனக்கு 18
இளமை ஊஞ்சலாடுகிறது ...!

கண் சிமிட்டும் நேரம்
காதல் வைரஸ்....
'சில்லு'னு ஒரு காதல்...

டார்லிங் டார்லிங் டார்லிங்...!
'ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே...!'
வா இந்த பக்கம்...!

கெட்டி மேளம்...?
தாலி பாக்கியம்..?
போலீஸ்காரன் மகள்...??!!

காதலிக்க நேரமில்லை...!!!

Monday, September 19, 2011

கவிதை திர'ட்டு'!

காதலி
நோட்டு,
காதலன்
பாட்டு...!

அப்பா
திட்டு...
கண்டிப்பா
வெட்டு..!

வீட்டை
விட்டு,
கம்பி
நீட்டு..!

கால்
கட்டு...
கட்டில்
தொட்டு,
தொட்டில்
ஆட்டு...!

இல்லை
துட்டு...!
கணவன்
சுட்டு...

அழுத
சிட்டு..
புத்தி
மட்டு..!

Sunday, September 18, 2011

வீழ்தலில் வாழ்தல்

சொல்லும் சொல்லில் வில்லும்
வைத்திங்கு வாழ்க்கை..
எய்தவனும் இலக்கும் வீழும்
விநோத வாழ்க்கை...

வீழ்தல் இங்கே தின நிகழ்வு;
வீழ்ந்த பின் எழுதலில்
அல்லவோ வாழ்வு??

வீழ்தலில் வீழ்ந்தே கிடத்தல்
இறப்பாகும்....
மீண்டும் இலக்காயினும் எழுதலே
சிறப்பாகும்...!

Saturday, September 17, 2011

மழைத்துளி

கடலில் சேர உருத்தெரியாது போகும்...
நிலத்தில் விழ மறைந்து போகும்...
கழிவில் விழ கழிவாகும்...

சிப்பிக்குள் விழ முத்தாகும்...
காரிகை முதல் கடவுள் வரை
அலங்கரிக்கும் சொத்தாகும்..!!

சேருமிடம் பொறுத்தே
மழைத்துளிக்கு கூட மகத்துவம்...
மாந்தர் நாம் எம்மாத்திரம்?

தேடி சேர்வோம்...
சேர்ந்தே தேடுவோம்...
நல்லிடத்தை..!!

Friday, September 16, 2011

உன் வசமாகும்

கடலும் மழைத்துளியாய் பொழியுதே!
காற்றும் உயிர் மூச்சாய் பெருகுதே!
மரங்கள் விதையாய் வளருதே!
சிறிதாய் யாவுமிருக்க கைக்குள் அடங்குதே!
பெரிதாயிருக்க் நோக்கில் மட்டும் பொருந்துதே!

பெரிதாயிருப்பதை சிறிதாய் ஆக்கவே,
உலகம் கையில் அடங்குமே...!
உன் வசமாகுமே..!!

Thursday, September 15, 2011

தாம்பத்ய தேர்

தாம்பத்ய தேரில்
வாழ்க்கை பவனி...!
இரு மாடுகளாய்
ஓர் வாழ்க்கை
இழுக்கும் பணி...!

சேராது சேருமிசை
அபஸ்வரமாய்...
இருந்தும் இனிக்கும்
இசையாகும்...!

திசை வேறாயிருந்தாலும்
சேர்ந்திழுத்து...
முன்னே இட்டுச் செல்லும்!

Wednesday, September 14, 2011

இணைதல்

இரு பாலரின் இணைதல்,
ஆலயத்தின் கருவறை போல்...
இருளினுள் தெய்வம் தேடும்,
செயலிலும் செயலிழந்திருக்கும்,
தன்னிலையிழந்தும் வாழ்ந்திருக்கும்,
முன்னிலையில்லாது வாழ்வுருவாக்கும்...!

Tuesday, September 13, 2011

அசையா உயிர்

அசையா உயிரும் அசையும்,
அசையும் உயிரிடத்தே...

அசையும் உயிரும் அசையாது போகும்...
அசையாது செய்யும் அசைவினிலே!

உயிரின் உயிர் அசைவில் இருக்க,
அசையாததெல்லாம் உயிராகிடுமே...
நம் அசைவின் பொருளாகிடுமே..!

-Inspired by an art named “Still Life”in Hyderabad Salar Jung Museum

Sunday, September 11, 2011

கண் தானம்

இறப்போர் ஈன்றிடவே,
பெற்றவர் மூலம்,
மீண்டும் பிறந்திடுவாரே..!

பகலிலும் இரவு கண்ட
பெற்றவரோ
இருளிலும் ஒளி காண்பாரே...!

நம் கண் இறவாது
இருந்திடவே
மறவாது கண் தானம்
செய்திடுவோமே..!

Saturday, September 10, 2011

நம் கையில்

வலியும் சுகமும்
நம்முள் நாம் தருவதே
சுகமும் துக்கமும்
நம்மில் நாம் தருவிப்பதே

இனிப்பும் துவர்ப்பும்
நமக்கு நாம் சுவைப்பதே
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நாம் நமக்கு தருவதே

நம் கையில் தான்
யாவுமிருக்குது இங்கே...!

Friday, September 9, 2011

ஏழ்மை பயில்

வாழ்வில் உயர,
ஏழ்மை பயில வேண்டும்!
ஏழ்மை அறியா வாழ்வு
அனுபவம் தரா படிப்பாகும்..!!

அன்றே அரசரும்
குருகுலமாய்
ஏழ்மை பயின்றார்
நாடாள...!
இன்று நாமும்
ஏழ்மை பயின்றிடுவோம்
நம்மை ஆளவே..!!

Thursday, September 8, 2011

நட்பின் ஊடல்

நட்பின் ஊடே
ஊடலுண்டு!
கேட்காதிருக்கும்,
பார்க்காதிருக்கும்,
பேசாதிருக்கும்...!

பழமை எண்ணங்கள் கூடி,
மீண்டும் கூடலாகும்,
மீண்டும் நட்பாகும்...!!

Wednesday, September 7, 2011

மனதே கடவுள்

பயின்றதும், பயிற்றுவித்ததும்
பயனுள்ள அனுபவமாகும்..
அனுபவமே கடவுளாகும்..
போதனை கேட்டுக்கொள்ளும்..!

நாமே அனுபவமாக,
நம் மனதே கடவுளாகும்..!
போதிக்கும்!!

Tuesday, September 6, 2011

நெடுஞ்சாலைப் பயணமாய்...(2)

எங்களை ஊக்குவிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி..!

நண்பா, பத்தாயிரம் என்ற எண்ணைப்பார்க்கையில் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கிறது, இதில் தங்களின் பொன்னான நேரத்தை நம் பதிவிற்கு வந்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் நம் நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும், அவர்கள் இன்றி இந்த எண் இல்லை.

அதே போல் நீ இன்றி உன் உந்துதல் இன்றி நான் தினமொரு கவிதை என்று ஆரம்பித்திருக்க முடியாது இது இன்னும் செம்மையாக தொடர அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்…

நம் நட்பு போல் நம் வாசகர்களின் நட்பும் ஊக்கமும் போல் என்றும் நிலைத்திருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஒத்திருந்து, ஓடித்திரிந்து,
ஊழியம் செய்தே...
உள்ளம் சிதைந்தோம்!

சிதைந்தது சரி பார்க்க,
சிந்தனை களைந்தோம்...
பயணம் தொடங்கி,
கவிதை வளர்த்தோம்..!

கைகோர்த்திங்கு பயணித்திருக்க...
கடந்த பாதையும், தூரமும்
கடந்ததை விட,
இருப்பதை காட்டும்!!

இதில் என் அடி
கடந்த சாலையும்
உன் அடி தாண்டிய
சாலையும் கணக்கில் வாரா...!

ஒத்திருந்து, ஓடி திரிய,
இருக்கும் சாலையே
நெடுஞ்சாலை என்றுணர்த்தும்...
பயணம் தொடர்ந்திருக்கும்,
சிந்தனை களைந்திருக்கும்,
இது நெடுஞ்சாலைபயணம்,
நிற்காது முடியாதிருக்கும்
தொடர்பயணம்,
நம் நட்பு போல்!

வாசகரின் உந்துதலில்
விடிவெள்ளி தேடும்
கவிதைப்பயணம் இது….!!

ஏழை

நிலமில்லாது நின்றிடுவர்...
வீடில்லாது வாழ்ந்திடுவர்...

கூடில்லாதும் சுற்றம் வளர்த்தே,
வேரில்லா மரமாய் இவர்கள்!

விழுது மட்டும் விட்டே
மறைந்திடுவாரே!!

Monday, September 5, 2011

உலகம் உன்னில்...!

விதைக்குள் வேராய்,
முன்னேற்றம் உன்னுள்...!

வேரும், நீரும்,
மன்ணுள்ளே...!

உன் விதைக்கு
நீ நீர் தேட,
வேரும் விண் பார்க்கும்...
தருவாக உருவாகும்..!

மற்றெல்லாம் மண்ணாகும்
காற்றுத்துகளாகும்!!

Sunday, September 4, 2011

உபகார உபத்திரவம்

சிற்றெறும்பு ஒன்றுக்கு
உபகாரமாய் இருந்திடவே,
போக்கை நிறுத்தி,
கையில் இருத்தி,
இலக்கில் சேர்த்தேன்...!

விட்ட நொடியில்
இலக்கின்றி ஆனது..!!

உபகாரம்,
செய்வதில் மட்டுமில்லை
செய்யாதிருத்தலிலும்
உண்டென்றே உணர்ந்தேன்!

Saturday, September 3, 2011

நெடுஞ்சாலைப் பயணமாய்...

அன்புள்ள அனைவருக்கும்,

நம்முடைய வலைதளத்தின் விருந்தினர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

http://inkavi.blogspot.com/

ஜே கே என் பெயரைச் சொன்னாலும்...இதனுடைய நாயகன் என்னமோ ஜே கே தான்....ஜே கையின் சில கவிதைகளைப் படித்தால் (நேரத்தை எடுத்துக்கொண்டு படியுங்கள்!) உங்களுக்குப் புரியும்.....நம்மோடு ஒரு கவிஞன் இருப்பதும் தெரியும்.

இனி என்ன? ஒரு புத்தகம்...? ஒரு ஆல்பம்? தெரியவில்லை. கோடு ஒன்றைப் போட்டிருக்கிறோம்....! நெடுஞ்சாலைப் பயணமாய் அமைய வாழ்த்துங்களேன்...!

என்றும் அன்புடன்,
கேயார்

Friday, September 2, 2011

அந்தரங்கம்

நான் புனைந்து, நான் பாடி,
நான் மட்டும் கேட்குமிசை!

எனக்கு சப்தஸ்வரம்...
மற்றோர் கேட்க அபஸ்வரம்!!

Thursday, September 1, 2011

பிள்ளையாரு வர்றாரு!!


வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!

காதுகளை விசிறிகிட்டு...
தும்பிக்கையை ஆட்டிகிட்டு ...
தொந்திதனை தூக்கிகிட்டு...
வர்றாரரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!

கொயுக்கட்டை துன்னுகிட்டு
கொயு கொயுன்னு இருக்கிறாரு...!
கொண்ட கடலை மென்னுகிட்டு
கொண்டாட்டம் செய்யுறாரு...!
பழங்களை முழுங்கிகிட்டு
பள பளன்னு சொலிக்கிறாரு...!

அலுங்காம, நலுங்காம,
தளுககாதான் பூபோட்டு,
அவர் காலைப் புடிச்சாத்தான்
நல்லத பேச விடுவாரு...!
நல்ல மனசை கொடுப்பாரு...!
'லஸ்மி'யான்ட சொல்லிவிட்டு,
'ரிச்'சா வாழ வெப்பாரு!

சிம்பிள் சாமி அவருதானே...!
அரச மரம் போதும்தானே...!
மஞ்சத்தூளை வெச்சி நாமும் - அவர்
மனசை புடிச்சி வெப்போமே!

மொத சாமி அவருதானே...!
மொத சுளியும் அவருதானே...!
டெய்லி அவரை நெஞ்சில வெச்சா,
கஸ்டமெல்லாம் தொலஞ்சிருமே..!
எல்லாம் சோக்கா முடிஞ்சிருமே...!!

வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!