Monday, November 30, 2009

மணிவிழா நாயகன் - 2


முள்ளும் மலரும் (1978)


அண்ணன்-தங்கை பாசம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'பாச மலர்'; இதற்கடுத்து, பளிச்செனப் பதிவது 'முள்ளும் மலரும்'தான்.

சில காட்சிகளை யாராலும் மறக்க முடியாது!

டிபிகல் தொழிலாளிபோல் 'ஸார் உடனே வரச்சொன்னீங்களாமே' என ஷேவிங் க்ரீம் முகத்துடன் அப்பாவி லுக்-குடன் சரத்பாபு முன் ரஜினி நிற்பது...

ஆஸ்பத்திரியிலிருந்து வரும் ரஜினியை அணைக்கும்போது 'இடது கை' துண்டித்திருப்பதை ஷோபா உணரும்போது...

'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...

படாபட், ரஜினியை மீறி, சரத்பாபுவிடம் ஷோபாவை ஏற்கச் சொல்லும்போது...

'இவ்ளோ பேர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை; ஏன்னா எந்த நாயும் என்னோட கூடப் பொறக்கலை; ஆனா, வள்ளி நீ....நீயுமா என்னை விட்டு போறே?' என ஷோபாவிடம் நெகிழும்போது...

ரஜினி என்கிற குணச்சித்திர நடிகருக்குக்கான அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பம்!

படத்திற்கு 'ரஜினி'தான் 'காளி' என்பதைத் தீர்மானித்து, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் இயக்குநர் மகேந்திரன் சொன்னபோது,

'என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு; நல்ல கறுப்பு வேறே...வேணவே வேணாம். வேற யாராச்சும் சொல்லு.'


இதே வேணு செட்டியார் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு "அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே...படத்துல வசனமே இல்லே...அங்கே ஒண்ணு...இங்கே ஒண்ணு வருது வசனம்..படமா எடுத்திருக்கே..." என்று இயக்குநரைத் திட்டித்தீர்த்து விட்டார்!

படம் வந்த முதல் மூன்று வாரங்கள் பரபரப்பேயில்லாமிலிருக்க, 'படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்க' என ரஜினியும், மகேந்திரனும் கெஞ்ச, வேணு செட்டியார் சொன்னார்: "ஓடாத படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை...ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை. அது தெரியுமா, உங்களுக்கு?!'

உண்மைதானே? நான்காவது வாரத்திலிருந்து துவங்கிய ஆரவாரம் நூறாவது நாள் வரை ஓயத்தான் இல்லை!

தகவல்களுக்கு நன்றி:
சினிமாவும், நானும் - இயக்குநர் மகேந்திரன்

Friday, November 27, 2009

ஏலாமை!

ஆங்கே வீடின்றி
யாவரும் அலைகையில்
இங்கே என்னுள்ளே
வெற்றிடம்!

Thursday, November 26, 2009

மணிவிழா நாயகன் - 1

மணிவிழா நாயகன் என்கிற தொடர் பதிவில், ரஜினி என்கிற கலைஞனைப் பற்றிய எங்கள் கண்ணோட்டங்கள் இடம்பெறும். மற்றபடி அரசியலில் அவருடைய நிலைப்பாடுகள், இன்னபிற விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் இருந்ததேயில்லை.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)


மகரிஷி எழுதிய நாவலைப் படமாக்க முற்பட்டபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், திரைக்கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்திற்கும் தோன்றிய 'வில்லனா நடிக்கற 'புதுப்பையனை' ஹீரோவாகவும், கதாநாயகனா எஸ்டாப்ளிஷான சிவக்குமாரை வில்லனாகவும் மாத்திப் போட்டா என்ன?' தான் ரஜினி எனும் நாயகன் உருவாகக் காரணமாயிருந்தது.

சம்பத் என்கிற இளைஞனாக, காதலை இழந்த காதலனாக, சந்தர்ப்பவசத்தால் தன்னை இழந்த நாயகிக்குக் கணவனாக, குடித்துக்குடித்து உடலை வருத்திக்கொள்ளும் நோயாளியாக, ரஜினியை மாற்றிய பெருமை நிச்சயம் இயக்குநர் எஸ் பி எம்-க்கு உண்டு. அதிலும் சிகரெட்டைப் புகைத்தபின், சாம்பலைச் சுண்டும் ரஜினி ஸ்டைல் அடேங்கப்பா!

படப்பிடிப்பின் முதல் நாளில் தனக்கு நீட்டப்பட்ட வசனங்களைப் பார்த்துவிட்டு 'பாலச்சந்தர் ஸார் ஒரு முழுப்படத்துக்கே இவ்ளோ டயலாக் தரமாட்டார். எந்த நம்பிக்கையிலே எனக்கு இவ்ளோ தர்றீங்க. ரொம்ப கஷ்டம், என்ன விட்டுடுங்க' எனத் தப்பிக்க நினைத்த ரஜினியைச் சமாதானப்படுத்தி நடிக்க வைத்த புண்ணியமும் எஸ் பி எம்-க்குத்தான்!

ரஜினியால் தன்னுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போவது, எங்களுக்குத் தெரிந்து இந்த ஒரு படத்தில் மட்டும்தான்!

நடிகர் திரு சிவகுமார் அவர்கள் கூறியது போல 'அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தியை எடுத்து, ரஜினியை வரவேற்கத் துவங்கிவிட்ட காலகட்டம் அது!'

தகவல்களுக்கு நன்றி:
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - விகடன் பிரசுரம்
இது ராஜபாட்டை அல்ல - அல்லையன்ஸ்

Wednesday, November 25, 2009

மனிதமும் மல்லிகையும்!

குப்பை லாரியின் பின்னால்
இழுத்துப் புரண்டு சிதைந்து
வாழ்க்கையின் ஏதோ ஒரு
பக்கத்தை நினைவுபடுத்தியபடி
செல்கிறது
நேற்றெங்கோ மணத்த
மல்லிகைச் சரம்.

கவனிக்க மனமின்றி
இயங்குகிறது
காங்க்ரீட் சதுரங்களில்
நசுங்கிக் கசியும்
இயல்பு மறந்த மனிதம்!

Saturday, November 21, 2009

என்றோ எழுதிய கவிதை - 12

தொட்டால் குழையும் சோறு...
தொட்டால் விறைக்கும் மனைவி...
நொந்து போகுது மனசு!

Friday, November 20, 2009

ஜே கே-வுக்கு எது பிடிக்கும், பிடிக்காது?!

பொது வாய்ப்பு அளித்த பா ரா விற்கு நன்றி!!

அரசியல்:

பிடித்தது இந்திய அரசியலில் இளைஞர்கள்.

பிடிக்காதது ஜோதி பாசு, கருணாநிதி , வாஜ்பாய் என நடக்க கூட முடியாது இன்னமும் அரசியலில் இருக்கும் மூதறிஞர்களையும் அவர்களின் சுயசெயலையும்.

எழுத்து:

பிடித்தது சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், சொல்லிக்கொண்டே போகலாம்.

பிடிக்காதது தமிழ் என்று வந்து விட்டால் எல்லாம் சுகமே; பிடிக்காதது ஏதுமில்லை.

கவிதை:

பிடித்தது நம் இணையதள நண்பர்களின் கவிதைகள் (புகழ்பெற்ற அனைவரையும் விதிவிலக்காய் தள்ளிவைத்து அவங்களை பிடிக்கும் பிடிக்கலைன்னு சொல்ல முடியாதுப்பா!!) .

பிடிக்காதது நம் நண்பர்கள் போன்று எழுத முனையும் போது, என்னை!

நடிகர்:

பிடித்தது ப்ருத்விராஜ், நானா படேகர், நாசர் , பிரகாஷ் ராஜ் (ரொம்ப சாதாரணமாய் நடிப்பவர்கள் -man next door).

பிடிக்காதது கமல், சிவாஜி , ரஜினி, அமிதாப் இவர்கள் எல்லை தாண்டி வயதிற்கு ஒப்பாமல் நடிக்கும் பொழுது.

நடிகை:

பிடித்தது நமிதா! (விநாயக முருகனுக்காக!) எல்லாரையும் பிடிக்கும்! (ஹிஹிஹி!)

பிடிக்காதது இப்பொழுது வரும் பெரும்பான்மையான புதுமுகங்களை!

இயக்கம்:

பிடித்தது மணிரத்னம், மிஷ்கின்.

பிடிக்காதது ராம் நாராயணன் (இவர் எப்படியும் மிருகத்தை வச்சு தான் எடுப்பார் இதுல் சேர்த்துகலாமா? ) .

இசை:

பிடிக்காததுன்னு ஏதுமில்லை.

கிரிக்கெட்:

பிடித்தது மொத்தமாக இந்திய அணி யார் ஆடினாலும் நாக்கை தொங்க போட்டு பார்ப்பேன்.

பிடிக்காதது அதே இந்திய அணி தான் ரொம்ப காலமா ஜெயிக்கற மாதிரி பாவ்லா காட்டி விட்டு தோற்பது.

ஊர்கள்:

பிடித்தது பல தமிழ் நாட்டு கிராம்ங்கள் மனதில் நின்றாலும் சுந்தர பாண்டியபுரம் புல்லாந்திட்டும், ஆறும் , சென்னையும்.

பிடிக்காதது வட ஆறகாடு சாயல்குடி, முதுகுளத்தூர் பக்கம் ரொம்ப வறண்டு இருக்கும்.

சமையல்:

பிடித்தது அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்! (இத மாத்தி சொல்லி யாரு வாங்கி கட்டிக்கறது?!) .

பிடிக்காதது நல்லா பசிக்கும் போது இவங்களே சொதப்பி நம்மள சாவடிக்க, நாம் சிரித்துக்கொண்டே விழுங்கும் போது..!

Wednesday, November 18, 2009

பிரிவு!

இந்தப் பிரிவு

உங்களை
நெகிழ வைக்கும்!
சிரிக்க வைக்கும்!
புன்னகைக்க வைக்கும்!

படித்துப் பாருங்களேன்!!

லாட்டிரி டிக்கெட்!

1. கையில் பல லட்சங்கள்...!
வயிற்றுப்பசியுடன் விற்கும் சிறுவன்!!

2. கையில் பல லட்சங்கள்...!
கவலைகளுடன் என் தாத்தா!!

Monday, November 16, 2009

என்றோ எழுதிய கவிதை - 11

கற்பனை கூட பல சமயங்களில்
கிணற்றிலிட்ட
கல் போல அமிழ்ந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
நெஞ்சிலிருக்கும் வார்த்தைகளாய்
உறைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
காகிதங்களில் அச்சாகாமல்
கரைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
கையில் சிக்காத காற்றாய்
காணாமல் போகிறது!

கற்பனை கூட சில சமயங்களில்
கவிஞனின் கைபட்டு
காவியமாய் மிளிர்கிறது!

Sunday, November 15, 2009

ப்ரயாணம்!

பரந்து விரிந்த பாலையாய்
மாட்டுவண்டித் தடங்களூடே
நடந்துபோன மனிதர்களின்
காலடித் தடங்களைக்
கலைக்காமல் வைத்திருந்து
கடந்துபோனதொரு
பெயர் தெரியாத ஆறு.

சற்று முன் கூட வந்து
சட்டென்று திரும்பி
வேறெங்கோ செல்லும்
இருப்புப் பாதையொன்று.

ஒரு நவீன ஓவியம் போலும்
கலைந்து கூடும் மேகப் பொதிகளின்
பின்னணியில் மாலை வெயிலினூடே
நீண்ட நிழல் சிலுவைகளோடு
சற்றே பயங்காட்டி மறையும்
கல்லறைக் கூட்டம்.

என்னைப் போல் எதிரே
அமர்ந்தவருக்கும் இக்காட்சிகள்
வாய்த்திருக்குமோ என்று
விசனத்தில் நான்!

Saturday, November 14, 2009

குழந்தை!

அழுகையிலும், சிரிப்பிலும்,
கோபத்திலும், தூக்கத்திலும்,
எந்த கோலத்திலும் அழகு!

கொஞ்ச நினைப்போர்க்கு
சுகித்திருக்கும்
நம் வாழ்வைப்போல!

Friday, November 13, 2009

பிரசவம்

தானே இறைவனாகித்
தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
மரணத்தைத் தொட்டு,
ஜனனத்தைத் தந்திடும் சாகஸம்!!

Wednesday, November 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 10

கரை நிரந்தரமில்லை என
கரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்
கரையைத் தழுவி அலுத்தபின்,
கடலில் போய் அலையும் சேரும்!

உறவைத் தேடி அலையும் மனிதா...!
உறவைத் தேடி அலுத்த மனிதா...!
உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என
உறவின் உண்மை புரிந்து விடும்!

Tuesday, November 10, 2009

ஊடல்!

மிக அருகிலும் அழகாயிருக்கிறாய் நீ!
மெளனத்திலும் பேசுகிறாய் நீ!

உன் கோபம்
கையினுள் பனியாய்,
காதல் போர்வையில் கரைந்திடும்!

மீண்டும் பனி தேடும் மனது
போர்வையின் தைரியத்தில்!

Monday, November 9, 2009

என் டைரி!

அவசர உலகத்தின்
அனாவசிய டென்ஷன் இல்லாமல்
அதிசயமாய்ப் பழைய டைரியுடன் உட்கார்ந்தேன்...

எழுதிய பக்கங்களை விட
எழுதாத பக்கங்கள் பேசிய கதைகள்...

தட்டுத் தடுமாறி
என் ஷ¥வில் கால் புதைத்து
விளையாடிய
பக்கத்து வீட்டு சிறுமியை
ரசித்து எழுதிய கவிதை...

நட்ட இடமெல்லாம் பூ பூத்து
'அட்ஜஸ்டபிளிடியை' கற்றுக் கொடுத்த
செவந்திப்பூவின் கவிதை...

கடவுளுக்குத் தேர் இருக்கிறது,
கனவான்களுக்குக் கார் இருக்கிறது என்று
கவலைப்படாமல்
கால்கள் இருக்கின்றதென்று
கர்வப்பட்ட
காலத்தின் கதை...

ஒவ்வொரு பக்கமும் நினைவுறுத்திய
கதைகளும் கவிதைகளும்
சொல்லாமல் சொல்லியது
தொலைந்து போன
என் முகத்தின் அடையாளத்தை...
தவறிவிட்ட என் ரசனைகளின் ஆத்மார்த்தத்தை...

இன்று கவிதை
எழுதக்
கருவின்றி
தேடிக் கொண்டு இருக்கின்றேன்
என் டைரிகளில்...!

திருத்தமும், வருத்தமும்!

அனைவருக்கும்,

அன்பர் கருணா அவர்கள் சொன்னதைப் போல இந்தக் கவிதையை 'கவிவுணர்வு'டன் நிறுத்திக் கொள்வோம்.

மற்றபடி, இதற்குள்ளான அரசியலில் புக எங்களுக்கு விருப்பமில்லை.

தலைப்பு, சிலரைப் புண்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. எங்கள் நோக்கம் அதுவல்ல. இருந்தாலும் மன்னிப்பைக் கோருகிறோம்.

இனி, விழிப்புடன் இருப்போம்!

என்றும் அன்புடன்,
இன்றைய கவிதை நண்பர்கள்

அகதிகள்

சுவாசம் விட இடந்தேடிடுவார்!

வேரறுத்து நிலமின்றி,
வேற்றுகிரகத்தார் போல்,
கால் ஊன்ற நிலம் தேடுவார்!

விதை விதைக்கும் உலகில் இவர்கள்
வேர் விதைக்க பயிலும் மனிதர்கள்!

Sunday, November 8, 2009

அடேங்கப்பாவும், அட போங்கப்பாவும்!

பா. ரா! வம்புல மாட்டி விட்டுட்டீயளே!


விதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி!

விதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

விதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

அடேங்கப்பா!

அரசியல்: ஜீவா, கக்கன்
எழுத்து: சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், என் சொக்கன், நா பார்த்தசாரதி
கவிதை: மகாகவி பாரதி, கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், மருதகாசி, கா மு ஷெரீ·ப்
நடிகர்: என் எஸ் கிருஷ்ணன், நாகேஷ், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், ரகுவரன்
நடிகை: சரோஜாதேவி, ஸ்ரீதேவி, பானுப்ரியா, த்ரிஷா, தமன்னா (ஹி..ஹி)
இயக்கம்: பாலசந்தர், ஸ்ரீதர்
இசை: கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வி குமார், எஸ் பி பாலசுப்ரமணியன், சங்கர் கணேஷ்
கிரிக்கெட்: ஸ்ரீகாந்த்
ஊர்கள்: திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்
சமையல்: அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்!

அட போங்கப்பா!

அரசியல்: கலைஞர், சோனியா
எழுத்து: யாருமில்லீங்கோ!
கவிதை: பா விஜய்
நடிகர்: இளைய / குட்டி / புரட்சி தளபதிகள் (கண்டுபிடிங்கோ!)
நடிகை: கொல்லங்குடி கருப்பாயி, பரவை முனிம்மா (அடிக்காதீங்கோ!)
இயக்கம்: அகத்தியன் (நிறைய எதிர்பார்த்து ஏமாந்தது), மணிரத்னம் (ரெண்டு வார்த்தை வசனங்களால்!)
இசை: யாருமில்லீங்கோ!
கிரிக்கெட்: எல் சிவராமகிருஷ்ணன் (வாய்ப்புகளை கோட்டை விட்டதற்காக!)
ஊர்கள்: சிங்காரச் சென்னை!
சமையல்: நானே செய்ய நேரிடும்போது!

ஜே கே, வார்த்தை தவறிவிட்டாயே நண்பா!!

Saturday, November 7, 2009

ராப்பிச்சை

புசித்த ஏப்பத்தின் மீதியை அள்ள வந்த
பசித்த ஏக்கத்தின் மிகுதி...

Thursday, November 5, 2009

என்றோ எழுதிய கவிதை - 9

"Divorce comes before Marriage"
in English Dictionary...
தமிழர் நாங்கள் பண்பாடு காப்பவர்கள்....!
அகராதியைப் புரட்டுங்கள்,
"திருமணத்திற்குப் பிறகுதானே
விவாகரத்து வருகிறது!"

Wednesday, November 4, 2009

காதல்!

திரும்ப முடியா பாதையில்
திக்குத் தெரியா பயணம்,
கைப்பிடித்துத் துணையாகும்
மரணம் வரை குறையாத
சுவையாகும்!

Tuesday, November 3, 2009

பொய்!

பொய் ஒன்றுதானே வாழ்வில் நிம்மதி
வெறுமை இல்லாத சங்கதி...!

வெண்மையாய் நீயும் வாழ்ந்து பாரடா!
தன்மையாய் நீயும் இருந்து பாரடா!
மனம் இங்கு மங்கிப் போகும்
மதி இங்கு குன்றிப் போகும்
வாழ்வும் பின் தங்கிப் போகுமடா...!

பொய் ஒன்றைக் கேட்டுப் பார்
மனதுள்ளே மயங்கிப் பார்
கண்ணோடு பேசிப் பார்
நடைமுறையை நினைந்து பார்
நிஜம் இங்கு வலிக்குமடா!

தந்தையாய் மகனின் அன்பு மாறாதே
தாயாயினும் மனையாளின் காதல் குறையாதே
காலமாயினும் நட்பின் வலிகள் உறைக்காதே
வயதாயினும் கண்ணில் நீரும் சுரக்காதே
வாய்மையாய் இருக்க வலியின் நிறம் புரியுதடா...

கண்மூடி நின்று பார்
உன்னை நீயும் கேட்டுப் பார்
உலகை உன்னில் உரித்துப் பார்
உண்மை உனக்கு வலிக்கும் பாரடா!

Monday, November 2, 2009

காத்திருத்தல்

ஊருக்கு நடுவே கடிகாரம்
ஊரெல்லாம் சரி பார்க்கும் நேரம்
என்னை நிற்க வைத்து
உனக்கு மட்டும் நின்று போகும்!

தனியன் - 2

தனியன் கவிதைக்கு ப்ரபா அவர்களின் பதில் கவிதை இதோ!


எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாமல் போனாலும்,
எல்லோரும் இருந்தும்
எவரும் இல்லாமல் போனாலும்,
எல்லோர் மேல் பழியிருந்தும்
என் மீது மட்டுமே விழும்போதும்,
நான் தனியன்தான்,
'BUG' assign ஆகும் பொழுது...!