Monday, October 31, 2011

நினைப்பதை செய்

நினைவெல்லாம்
செயலாக,
நினைவே
வாழ்வாகும்!
வசமாகும்!!

செயலில்லா
நினைவாய்
மட்டுமிருக்க,
வாழ்வே
நினைவாய்
மட்டுமிருக்கும்!
வசமில்லாதிருக்கும்!!
வாசமில்லாது போகும்!!

Sunday, October 30, 2011

எல்லாம் சில காலம்

மழையாய், வெயிலாய்,
உதிர்தலாய், வசந்தமாய்,
எல்லாம் சில காலம்
மனிதரின் வாழ்வு போல...!

ஏற்றமும், இறக்கமும்,
இருப்பும், இல்லாமையும்,
உறவும், பிரிவும்,
சிரிப்பும், துக்கமும் என
எல்லாம் சில காலம்...!

புரிந்தோருக்கும் மட்டும்
என்றும் வசந்தகாலம்தான்...!!

Saturday, October 29, 2011

விதை

சிறிதாய் மண்ணுள் விதைக்க,
பெரிதாய் மரமாய் ஆனது;
ஸ்திரமாய் நிழலும் தந்தது!

சிறிதாய் என்னுள் விதைக்க,
பெரிதாய் வரமானது;
வாழ்வே ஸ்திரமானது!

விதை சிறிதேயானாலும்,
விதைத்தாலே பலனாகும்!
விதையாய் மட்டுமே
வைத்திருக்க வீணாகும்!!

Friday, October 28, 2011

கடனாயேனும் சிரி

தினமொரு முறையேனும்
கடனாய் சிரித்தாலும் போதும்!

உலகம் இனித்திடும்!!
உன்னை சுற்றி
யாவும் சிரித்திடும்!
இவ்வுலகமும் சிரிப்பாய்
இருந்திடும்...!!

Thursday, October 27, 2011

தீபாவளி - 3

கையெல்லாம் பட்டாசு மருந்து
முகமெல்லாம் பூரிப்பு
கடனாய் வந்ததென்றாலும்
கடலாய் இருந்தது சிரிப்பு அன்று..

கையில் படாது பட்டாசு வெடித்து
சொந்தமாய் யாவுமிருந்தும்
சொந்தங்கள் தூரமிருக்க
கடலாய் யாவுமிருந்தும்
கடனாய் வந்தது போலிருக்கும்
கண்ணாடி பார்த்து சிரித்திருக்கும் இன்று..

Wednesday, October 26, 2011

தீபாவளி - 2

காலையிலே எழுந்திக்கிட்டு,
எண்ணைதனை தேச்சிக்கிட்டு,
சுடுதண்ணில குளிச்சிக்கிட்டு,
புச்சு துணி உடுத்திக்கிட்டு,
சாமிதனை நெனச்சிகிட்டு,
பெரிசுகளை வணங்கிகிட்டு,
புஸ்வானம் பூத்துகிட்டு,
இனிப்புதனை நக்கிகிட்டு,
காரம்தனை ஏத்திகிட்டு,
டி வி தனை கட்டிகிட்டு,
ரிலீஸ் படத்த பாத்துகிட்டு,
ரிலாக்ஸா ஓட்டிக்கிட்டு...
இருக்கத்தானே தீபாவளி...!

தீபாவளி -1

வரிசையாய் ஒளி
விளக்காய் ஒளி
வெடியாய் ஒளி
மத்தாப்பாய் ஒளி
என எங்கும் ஒளியாய்
ஒரு பண்டிகை!

யாவருக்கும் இனி
ஒளிமயமாய் வாழ்விருக்க
ஒளி அறிந்தோருக்கு
மட்டுமிது தீபாவளி!

ஒளியே பாராது
என்றுமிருப்போரும்
ஒளி பார்த்திடும்
நாளதிலே
உலகெங்கும்
வந்திடும் தீபாவளி!

Saturday, October 22, 2011

கடன்

தீர்த்தது பாதி
தீர்ந்தது பாதி
ஆயுளிலும் மீதி

பிறந்ததும் பெற்றதும்
வளர்ந்ததும் வளர்த்ததும்
கடனே இங்கு

இறந்தாலும் போகாதிருக்கும்
இறைவனுக்கு மட்டும் தெரியும்

கடனில்லாத வாழ்வில்லையென்று
மற்றோருக்கு வார்த்தை
மட்டும் மிச்சமாய் இருக்கும்
கடனாய் நிற்கும்!

Friday, October 21, 2011

விதி

அறியாத, தெரியாத வாழ்வில்
பிறந்ததும் இறப்பதும் விதியே...!

நாளையும், வருடம்
தாண்டியும் திட்டமிடுவோம்...!
விதித்தது எதுவென்றறியாது
விதிப்பயன் என்றே வசித்திருப்போம்...!!

Thursday, October 20, 2011

ஓர் மடக்கு நீர்

நீரின் மகத்துவம்
நிதம் தெரியும் அதிசயம்!

குழப்பி விட்டாலும்
தெளிந்து போகும்...
எரிந்தே இருந்தாலும்
அணைத்திடும்...

குளிர்ந்த நீரினிலே
தலை நனைத்திடவே
துரோகமும், மன ரணமும்,
வலியும் ஏமாற்றமும்
மறைந்திடுமே...!

சினந்தனிலே
மன சுமைதனிலே
விழிகளில் கண்ணீருடன்
நீ இருக்கையிலே,
ஓர் மடக்கு நீர் போதும்...
ஓராயிரம் கவலைகள் போகும்!

Wednesday, October 19, 2011

எல்லைக்கோடு

நாடுகளுக்கிடையில் மட்டுமல்ல..
வீட்டினுள்ளும் இருக்குது!

எல்லை மீறி வாழ்தலே
மரபான இயற்கையாகும்...
எல்லை மீறாதிருத்தலே
செயற்கையாய் நன்மை தரும்...

இயற்கை நசித்து,
செயற்கை ரசித்து,
நலம் பெறும் உலகமிது ...
இல்லா எல்லையை விதித்து,
எல்லைக்கோடோடு வாழும் உலகிது...!

Sunday, October 16, 2011

அலை!

பையன் நல்லா பரிட்சை எழுதுவானா..?
பஸ்சுல உக்கார எடம் கெடைக்குமா...?
பாஸு தாளிக்காம இருப்பாரா...?
பெண்டிங் வேலைய முடிச்சு போடணும்..!
மழை வரும்போல இருக்கே...!
வெங்காய வாசன தூக்குதே...!
என்ன கவிதை எழுதுறது ...?
வீக் எண்ட் எங்க போலாம்...?
அம்மாடி, மணியாச்சே!

அமைதி வேண்டி
அமர்ந்து செய்த
அய்ந்து நிமிட தியானத்தில்...
அலைபாயும் மனது...!!

Saturday, October 15, 2011

வேர்கள்

என் தேசத்து வேரெல்லாம்
கடல் தாண்டி வளர்ந்ததுவே!
வேர் வைத்த வேர்வை
தேசத்தில் வேறாயானதே;

வேர்வை தேடும் வேரிருக்க
என் தேசம் தழைத்திடுமே!
வேறாயிருக்க வேரின்றி
ஆயிடுமே!!

வேர் வைக்க வேர்த்திடுமென்றே
வேருக்கும் ஓதிடுவோம்...
வேரெல்லாம் தேசத்தோடு
சேர்த்தே வளர்த்திடுவோம்...
தேசத்து வேர்களாய்!

Friday, October 14, 2011

தர்மம்

தீராது தந்தும் தருமனுக்கு
வாராதிருந்த தர்மம்..

போறாது என்று கேட்ட
கண்ணனுக்கு அசராது
கர்ணன் தந்திட்ட தர்மம்..

கேளாத குசேலனை
பிடிஅவலினில் குபேரனாய்
ஆக்கிய தர்மம்..

பலன் தேடாத செய்கையிலே,
யாருக்கும் சேர்ந்திருக்கும்..!

Thursday, October 13, 2011

காமம்

விடலையில் கனவாய்,
இளமையில் புதிராய்,
முதுமையில் தெளிவாய்
இல்லாதிருக்க இணங்கும்
மனது அறிந்திருக்க,
இணங்கா வயதாய்,
யாரையும் தேடவைக்கும்...
பேதமில்லா தெய்வம் இது!
பழகாது வந்திடும் தியானமிது!

Wednesday, October 12, 2011

வாழ்வு

எந்நேரம் குந்திகிட்டு,
சாமிகிட்ட தவமிருந்தா,
வரம்தான் கெடச்சிருமா?
வளம்தான் சேந்திருமா?

துண்ணூறு இட்டுகிட்டு,
சாமிதனை வணங்கி விட்டு,
கடமைதனை செஞ்சி போட்டா,
வாழ்வும்தானே செழிச்சிருமே...!
பொறந்த கடன் அடஞ்சிருமே...!!

Tuesday, October 11, 2011

இல்லா இருப்பு

முதலில் பிறந்தது எமனாம்
அதுவே வேத சொல்லாம்...

இருப்பது இறப்பதற்கே
என்று புரிவதற்கே
இறப்பை பிறப்பித்து,
வாழ்வை தருவித்தவன்...

புரிந்தோர்க்கு இறப்பும்
நாளைய இருப்பாகும்...
இருப்பென்பதே
இல்லா பொருளாகும்..!

Monday, October 10, 2011

காதல் பத்தியம்

எடையில்லா இடையோடு
நடை பயின்றாள்......
அந்நினைவே பத்தியமாய்
எடையிழந்தான் அவன்..!

Sunday, October 9, 2011

வெளங்கல?!

புரியல?! படிச்சுபோட்டும் இத துவங்கலாம்...

காதல் புரியும் மாமா...
கன்னிய காக்க வெக்கலாமா...?

சாதி சனம் கூட்டியாந்து...
மேள தாளம் கொட்டிப்போட்டு...
தாலி ஒண்ண கட்டிபோட்டா
என்னிய நானும் கொடுத்திடுவேன்...

ஊரறிய சேத்துகிட்டா...
ஊரடங்கப்போ தந்திடுவேன்...

மையெழுதும் கண்ணில...
மனசெல்லாம் உன்னுல...
உடம்ப தேடும் வயசுல...
உனக்கு வெளங்க வெக்க முடியல...!

Saturday, October 8, 2011

புரியல?!

கண்ணுல காட்டுற ஆசையில,
அது தரும் போதையில...
மாதவியாத்தான் மயக்குற..!

மனசு தந்த தெகிரியத்துல,
கைகள் நீளும் நேரத்துல...
கண்ணகியாத்தான் தீய்க்குற...!

சுட்டாத்தானே
தங்கமும் துலங்குது...!
கைப்பட்டாத்தானே
பெண்மையும் மலருது..!
இது உனக்கு மட்டும்
ஏன் புரியாம போகுது...?!

-தொடரும் (?!)

Friday, October 7, 2011

காதலன் காதலியை வர்ணித்தல்..

கண்

என் முகம் காட்டும்,
அவள் மனம் காட்டும்,
மதி மயக்கும்,
விடாது என்னை
கட்டியிழுக்கும்!

நாசி

காற்றாய், மூச்சாய்
அவள் நாசியில்...
பின் காதலாய்,
காதலின் நினைவாய் ஆனது!

செவி

இருபக்கமும் பளபளக்க
தோடாய் தொங்கவிட்டு
வருவதில்,
என் மனதும்
தொங்கிப்போகுமதில்!


வாய்

மதுரமாய் மொழியாகும்
முத்தாய் சிரிப்பாகும்
மொத்தமாய் அள்ளிப்போகும்

காதல் தருவாயின்,
வாழ்வு தரும் வாயிலாய்...
வாழ்வின் வாசலாய்..!

Thursday, October 6, 2011

சந்ததி

பாட்டனும் தந்தையும்
பேசியதில்லை...
தந்தையும் நானும்
கைகோர்த்ததில்லை...
மகனிடம் நான்
எதையும் மறைப்பதில்லை...

இடைவெளி குறைதல்
குற்றமில்லை...!
குறைவாய் ஏதுமில்லை...!

Wednesday, October 5, 2011

காதல்

வலி என்றறிந்தும்,
வலிய வரவழைத்து,
வருத்திக்கொள்ளும்
விநோதம்!

Tuesday, October 4, 2011

எறிதல்

கல்லடிச்ச கொளத்தில
வானம்தான் கலஞ்சாச்சி...!

சொல்லடிச்ச நொடில
உறவுதான் தொலஞ்சாச்சி...!

Monday, October 3, 2011

காதலில் இருந்ததென்ன...?

வானவில்லாய் வந்ததென்ன...
வண்ணத்துப்பூச்சியாய் பறந்ததென்ன...

மனதை அள்ளிச் சென்றதென்ன..
நெஞ்சைக் கிள்ளிப் போனதென்ன..

மாற்றான் கைப் பிடித்ததென்ன...
சொல்லாமல் கொன்றதென்ன...

பித்துப் பிடித்ததென்ன...
செத்து வாழ்வதென்ன..

கேள்வியாய் நின்றதென்ன...
கேலியாய் ஆனதென்ன...

காதலில் இருந்ததென்ன...
காதலி போன பின்ன..?

Sunday, October 2, 2011

ஸ்டிக்கர் பொட்டு!

பெரிய மண்டபம் எடுத்து..
சீரு செனத்தி வெச்சி...
கண்ணாலம்தான் பண்ணீரு...!

அயல்நாடு சோடியாப்போனா
பொண்ணு, மருமவப்புள்ள...
பாத்த கண்ணுலதான் கண்ணீரு..!

சீரு செனத்தி என்னாச்சி...?
வங்கி இருப்புல மண்ணாச்சி...!

பொண்ணு நெத்தியில,
ஸ்டிக்கர் பொட்டுதான் மிச்சமாச்சி...!

Saturday, October 1, 2011

மித வேகம்

எதிலும் வேகம்,
எப்பொழுதும் வேகம்,
இன்றைய வாழ்வில்...!

திடீர் வேகம் தடுமாற்றும்...!
மித வேகம் முன்னேற்றும்..!.
வேகமும் மிதமாய்ததான்
வருமென உண்மை உணர்த்தும்...!!

இதை அறியாதோர் வேகம் தடையாகும்...!
அறிந்தோர்க்கு மாத்திரம் துரிதமாகும்...!!