Friday, November 18, 2011

விளக்கு

வெளிச்சம் தரும்
பக்தி தரும்
இருள் போக்கும்
என்றே தான் அறிந்திருந்தேன்
விட்டில் பூச்சி அதனில்
இறக்கும் வரை

Thursday, November 17, 2011

சுழற்சி

உலகம் தன்னை
தினமும் சுற்றுகிறது
என்றறிந்தேன்
நான் இருக்கும் இடம்
மட்டும் ஏனோ நகரவேயில்லை

Wednesday, November 16, 2011

பயிற்சி

தாலி கட்டி,
வேலி கட்டி,
மஞ்சள் கொடியில்
என்னை கட்டி,
தினமும் விடுபட்டு,
தினமும் சிறைபட்டு,
முடியும் தினம் தெரியவில்லை...!

விடாது செய்கிறேன் நானும்
ஒரு பயிற்சி..!!

Tuesday, November 15, 2011

நாய்க்குட்டி!

நாய்க்குட்டியைப் போல
அவள் பின்னால்
தினமும் நான்...!

'வாலாட்டுவது' மட்டும்தான்
தெரிகிறது அவளுக்கு!

Monday, November 14, 2011

அயற்சி

கடலை கோப்பையில்
எடுத்து கரை சேர்க்க,
நெடுநாளாய் முயற்சிக்கிறேன்...
அலைகள் குறையவில்லை!

வேலை நடுவே விழித்தேன்...
வேலை குறையவில்லை!
அயற்சி மட்டும் தான் மிச்சம்!!

Sunday, November 13, 2011

முயற்சி

விண்ணை தொடத்தான் எம்பினேன்..
விட்டத்தை கூட தொடவில்லை!

ஆனாலும் எம்புவதை
விடவில்லை..!!

Thursday, November 10, 2011

குளியல்

முழு குளியல் என்றுமில்லை...
குளித்ததெல்லாம் போறவில்லை...
நீண்டதாய் இல்லை தினமும்...
சிறியதாயேனும் குளியல் உண்டு...

மனதிற்கும் ஒரு முறையேனும்
உற்சாக நினைவு தினமும் தேவை
குளியல் போலவே..!!

Sunday, November 6, 2011

அழகு

தேடியிருக்க,
தேடுதலிலும்
அழகில்லாதிருக்கும்!
நாடியிருக்க,
நாடுதலில்
நாட்டமின்றிருக்கும்..!
நல்லவையிலே
இருந்திருக்கும்!!

Saturday, November 5, 2011

பொறுமை

குடும்பத்தில் அன்பாகும்,
மற்றோரிடம் மதிப்பாகும்,
தன்னிடம் நம்பிக்கையாகும்,
இறைவனிடம் பக்தியாகும்,
இருந்திருக்க குணமாயிருக்கும்..!

Friday, November 4, 2011

கோபம்

தன்னில் தவறில்லையெனில்
தேவையில்லை..!

தவறாய் தானிருக்க
பயனில்லை...!!

தன்னிலை அறிந்திருக்க,
கோபம் என்றே ஒன்றில்லை..!!!

Tuesday, November 1, 2011

பயம்

நிழல் போல்
சிறியதையும்
பெரிதாய் காட்டும்..!

நிழல் போல்தான்
என்று மறந்திருக்க,
மறைந்திருக்கும்..!

அல்லால்
அவையே வாழ்வில்
நிறைந்திருக்கும்!