Wednesday, December 29, 2010

காதலா காதலா

காதலா காதலா இது தான் காதலா
தன்னை ஈதலால் தந்தது காதலா
தனை ஈர்த்ததால் ஈன்றது காதலா
காதலா காதலா இது தான் காதலா

சேர்தலால் கொண்டது காதலா
நீ அன்றி தேய்தலாலானது காதலா
ஊடலால் ஊர்ந்தது காதலா இல்லை
கூடலில் சுரந்தது காதலா

இல்லத்தால் ஆனது காதலா உனை
உள்ளத்தால் ஏற்றது காதலா
தாழ்தலால் வளர்ந்தது காதலா நீ
ஏற்றதால் படர்ந்தது காதலா


பருவத்தின் களவாய் காதலா
அருவத்தின் அளவாய் காதலா
முதுமை ஆனதால் காதலா உன்
பதுமை மனதால் வந்தது காதலா

உன் உணர்வே தான் காதலா
உள்ளுணர்வே தான் காதலா
நீயில்லா சாதலும் காதலா
சாதலில் வாழ்தலும் காதலா

காதலா காதலா இது தான் காதலா

Sunday, December 12, 2010

பேருந்து கவிதைகள் - 1

குளிரூட்டப்பட்ட பேருந்தின்
எதிர் இருக்கையில் அவள்!


இப்படித்தான் பாந்தமாய்
உடுத்த வேண்டும் என்கிறது
அவளது சேலை!


கூந்தலை பின்னலிட்டு,
காதுகள் கேட்கும் சங்கீதத்தைப் பொருத்திவிட்டு,
அளவான ஒப்பனையில்
அவளைப் பார்க்கும்போது
ஏனோ எனது மனைவியின் நினைவு!


காலை நேரச் சமையலறையில் படும் அவதி...
என் பெற்றோருக்கு முகம் கோணாத பணிவிடை...
அலுவலகத்திற்கு நேரத்தில் இருந்தாக வேண்டிய கட்டாயம்...
வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் துவங்கும் வேலை...
மழலைகளுக்கு நேரம் ஒதுக்கி பாடத்தைப் பதிவு செய்யும் நேர்த்தி..
சில இரவுகளில் என்னுள் மிருகத்திற்குத் தீனி போட வேண்டிய நிர்ப்பந்தம்...
பெண்ணே! இவை உனக்கும் உண்டா?


இத்துணை சுமைகள் இருந்தும்,
உடையில் தென்படும் ரசனை,
புருவத்தை உயர வைக்கிறது,
கண்ணை விட்டு அகலத்தான் மறுக்கிறது!


எனது பார்வையின் குறுஞ்செய்தியைப்
புரிந்து கொண்டாளா என்ன?
மெலிதான புன்னகை அவள்
இதழோரம் பூக்கிறது!


ஒரு பெண்ணை இப்படியும் பார்ப்பது,
வயதாவதால் வந்த கண்ணியமா?
இல்லை எனக்கும் ஒரு பெண்ணிருக்கிறது என்பதாலா?


நினைக்கத் துவங்குமுன்
நிறுத்தம் வந்து விடுகிறது!
அவளும் நானும்
வெவ்வேறு பேருந்துகளில்
பயணத்தைத் தொடர்கிறோம்!