Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Friday, December 11, 2009

"பாயும் புலி" பாட்ஷா!

ரஜினி அவர்கள் பிறந்த நாளன்று (12/12/2002) எழுதப்பட்ட கவிதை
இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.


அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் உரைப்பவனே!
துடிக்கும் கரங்கள் உடையவனே!
தர்மத்தின் தலைவனான
இந்த முத்து எங்கள் சொத்து!

முரட்டுக்காளையாய் இருந்தாலும்
மூன்று முடிச்சில் அடங்கித்தான் போனாய்!
ஆறிலிருந்து அறுபது வரை ஆன்மிகம்தான்
என்றாலும் அகிலமெங்கும் உன் கொடி பறக்குது!

பொல்லாதவன் எனச் சிலர் நினைக்க
நல்லவனுக்கு நல்லவன் நான் என்றாய்!
போக்கிரி ராஜா எனச் சிலர் தூற்ற
தனிக்காட்டு ராஜா நான் என்றாய்!
அவர்கள் விமர்சனம் உனக்கு எங்கேயோ கேட்ட குரல்!
ஏனெனில் அனேக தமிழர் உன் படையப்பா!

நான் அடிமை இல்லை என உரக்க நீ உரைத்தாலும்
இந்த அண்ணாமலைக்கு நாங்கள் அடிமைதான்!
பாபா முத்திரைதான் எங்களுக்குப் பாட முத்திரை!!

அபூர்வ ராகங்களாய் இதயத்தில் நுழைந்தவனே!
உன்னை நினைத்தாலே இனிக்கும்!!

Sunday, December 6, 2009

மணிவிழா நாயகன் - 4

இரு வேடங்களில் ரஜினி!


அமிதாப் படங்களின் தமிழாக்கத்தில் ரஜினி நடிக்கத் துவங்கியது 'பில்லா' (1980) படத்திலிருந்துதான்.

கடத்தல் மன்னனாக, தெருவோர ஆட்டக்காரனாக இரு வேடங்களில் தன்னை முழுமையாகக் கொடுத்து, இந்திப் பதிப்பிற்கு ஈடாக பொருத்திக் கொண்டார் ரஜினி. கண்ணதாசன் எழுதிய 'மை நேம் இஸ் பில்லா', 'நாட்டுக்குள்ள எனக்கு ஒரு ஊருண்டு' பாடல்களின் வரிகள் ரஜினியை நடிகனுக்கும் மேலான தனி மனிதனாய் மக்களுக்கு அடையாளம் காட்டின. சூப்பர் ஸ்டார் பட்டம் 'பைரவி' தந்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ரஜினிக்குக் கிடைத்த படம் 'பில்லா'.

அன்றைய அலங்கார் திரையரங்கில் 25 வாரங்களுக்கும் மேலாக ஓடி ரஜினிக்குப் புகழை வாரிக்கொடுத்த 'பில்லா', தயாரிப்பாளர் பாலாஜி அவர்களுக்கும் 'ரீமேக்' படங்களைத் தயாரிக்கும் ஆர்வத்திற்குப் 'புதுப்பாதை' அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.



ரஜினி-மகேந்திரன் கூட்டணியில், வித்தியாசமான பின்னணியில் அமைந்த படம் 'ஜானி'(1980).

நாவிதராக வரும் ரஜினியின் கஞ்சத்தனம் - வீட்டிற்கு இரு பூட்டுக்களைப் பூட்டிவிட்டு இழுத்துப் பார்ப்பது, செடியிலுள்ள பூக்களை எண்ணி எண்ணிச் சரி பார்ப்பது - sober look, நடை, உடை அனைத்திலும் வித்தியாசமோ வித்தியாசம். கத்திரிக்கோலைப் பிடிப்பதிலும், முடி வெட்டுவதிலும் ஸ்டைலோ ஸ்டைல். ரஜினி-ஸ்ரீதேவி ஜோடிப் பொருத்தம் இயல்பு+சூப்பர். திருடன் ரஜினி, ஸ்ரீதேவியிடம் அன்பை எதிர்பார்க்கும் இடம் இனிமை.

'எப்போதும் ஒண்ணை விட ஒண்ணு பெட்டராத்தான் இருக்கும். அதுக்கு முடிவே இல்ல' என்கிற ரஜினி டயலாக் படத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான் எத்துணை பொருத்தமானது?!

இளையராஜாவின் இசை + அசோக்குமார் ஒளிப்பதிவு படம் முழுதும் ஒட்டியிருப்பது மற்றுமொரு சிறப்பு.

"பாகவதரிடமோ, எம்ஜியாரிடமோ இருந்த சில சிறப்பு அம்சங்கள் எதுவுமே இல்லாமல், தனக்கென உயர்வான ஒரு தனி மேடையை மக்களால் அமைத்துக்கொண்ட ரஜினியின் ஆற்றல் மகத்தானது. " 'சூப்பர் ஸ்டார்' பட்டம் நிரந்தரமல்ல," என்று அவர் சொன்னாலும், 'சூப்பர் ஸ்டார்' புகழ் மக்களால் தரப்பட்டது. இனியொருவர் இந்த இடத்தைப் பிடிப்பது நடக்கிற காரியமில்லை" என்கிறார் இயக்குநர் மகேந்திரன்.


பொதுவாக மகன் தவறு செய்வான்; தந்தை தட்டிக் கேட்பார். இதுவே தலைகீழாயிருந்தால்? நெற்றிக்கண்(1981) கதை இதுதான்.

தன் வயதிற்கு மீறிய வேடமென்றாலும், ரஜினி அப்பா 'சக்ரவர்த்தி'யாக ஏற்று நடித்துக் காட்டிய ஸ்டைல், தோரணை அடேங்கப்பா! ரஜினியின் நடிப்புக்கு சவால் விடும் ரெட்டை வேடங்கள், 'நடிப்பு பிசாசு'கள் லக்ஷ்மி/சரிதா, விசுவின் அருமையான கருத்து/கசையடி வசனங்கள், இளையராஜாவின் இன்னிசை என அத்துணை அம்சங்களும் இருந்தால் படம் ஏன் நூறு நாட்கள் ஓடாது?!

"அப்பா பிள்ளை டூயல் ரோல் என்பதால் இரண்டு பேரும் ஒன்றாகத் தோன்றும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் ரொம்பவே மெனக்கிட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் மாஸ்க் பண்ணிப் பண்ணித்தான் எடுக்க வேண்டும். அப்பாவுக்கும் மகனுக்குமிடையே சண்டையும் வரும். அதையும் மிகவும் கவனமாக மாஸ்க் பண்ணித்தான் பாபு எடுத்தார். அப்படி மாஸ்க் பண்ணும்போது, நடுவில் கோடு தெரியாமல் எடுக்கும் லாவகத்தை ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள் பெற்றிருந்தார்" என இயக்குநர் எஸ் பி எம் பெருமிதமாய்ப் பேசுகிறார்.

'ரஜினி என்னும் வைரத்தை நான் கண்டுபிடித்தாலும், வைரத்தைப் பலவிதமான கதா பாத்திரங்களைக் கொடுத்து, எஸ் பி எம் பட்டை தீட்டினார்' என்கிறார் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.

மூன்று படங்களும் ஒன்றரை ஆண்டுகள் இடைவெளியில் வெளி வந்து, வெற்றி முத்திரை பதித்து, ரஜினியை 'புது அவதார'மாய்ப் படவுலகுக்கு அடையாளம் காட்டின.

இவைகளுக்கு நடுவில் மிக முக்கியமான படமொன்றிலும் ரஜினி நடித்தார், அது...

தகவல்களுக்கு நன்றி
ஏவி எம் தந்த எஸ் பி எம் - விகடன் பிரசுரம்
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்

Friday, December 4, 2009

மணிவிழா நாயகன் - 3

நினைத்தாலே இனிக்கும் (1979)




பாலச்சந்தர் இயக்கத்தில், சுஜாதா எழுத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நனைந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியின் பங்கு முக்கியமானது.

கொஞ்சம் உன்னிப்பாக நோக்கினால் தீபக் பாத்திரத்தில், சுஜாதாவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான வஸந்த்-ஐப் பார்க்கலாம். பேச்சில் நக்கல், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தன்மை, எந்தப் பெண்ணைப் பார்த்ததும் விழிகள் விரிவது, கொஞ்சம் புத்திசாலித்தனம்/நகைச்சுவை கலவையில், குறுந்தாடி ரஜினி 'புகுந்து விளையாடிய' படம்.

சின்னச் சின்ன திருட்டுக்கள், 'டேப் சுந்தரி'யைத் தேடி அலைவது, 'வரவேற்பாளினி' (நன்றி: சுஜாதா)யைப் பார்த்து ஜொள்ளு விடுவது, 'சிவ சம்போ' (அப்போதே சிவனுடன் சம்பந்தம் இருந்திருக்கிறது!)வை விடாது பிடித்திருப்பது, 'சிவ சம்போ' / 'நம்ம ஊரு சிங்காரி' பாடல்களில் ஏகத்துக்கு 'ஷ்டைலு', போக வில்லன்களைப் போட்டு உதைப்பது என ரஜினிக்குத் தீனி நெறைய்ய!

இதையெல்லாம் விட, டொயோட்டா காருக்கு ஆசைப்பட்டு, இறுதியில் 'சுண்டு விரல் போதும் ஸார்!' என உச்சபட்ச டென்ஷனுடன் ரஜினி அடங்கிப்போவது ஹிலேரியஸ் அடேங்கப்பா!

ரஜினிக்கு நகைச்சுவை உணர்வு(ம்) உண்டு என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காட்டிய முதல் படமும் இதுதான்!

Monday, November 30, 2009

மணிவிழா நாயகன் - 2


முள்ளும் மலரும் (1978)


அண்ணன்-தங்கை பாசம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'பாச மலர்'; இதற்கடுத்து, பளிச்செனப் பதிவது 'முள்ளும் மலரும்'தான்.

சில காட்சிகளை யாராலும் மறக்க முடியாது!

டிபிகல் தொழிலாளிபோல் 'ஸார் உடனே வரச்சொன்னீங்களாமே' என ஷேவிங் க்ரீம் முகத்துடன் அப்பாவி லுக்-குடன் சரத்பாபு முன் ரஜினி நிற்பது...

ஆஸ்பத்திரியிலிருந்து வரும் ரஜினியை அணைக்கும்போது 'இடது கை' துண்டித்திருப்பதை ஷோபா உணரும்போது...

'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...

படாபட், ரஜினியை மீறி, சரத்பாபுவிடம் ஷோபாவை ஏற்கச் சொல்லும்போது...

'இவ்ளோ பேர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை; ஏன்னா எந்த நாயும் என்னோட கூடப் பொறக்கலை; ஆனா, வள்ளி நீ....நீயுமா என்னை விட்டு போறே?' என ஷோபாவிடம் நெகிழும்போது...

ரஜினி என்கிற குணச்சித்திர நடிகருக்குக்கான அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பம்!

படத்திற்கு 'ரஜினி'தான் 'காளி' என்பதைத் தீர்மானித்து, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் இயக்குநர் மகேந்திரன் சொன்னபோது,

'என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு; நல்ல கறுப்பு வேறே...வேணவே வேணாம். வேற யாராச்சும் சொல்லு.'


இதே வேணு செட்டியார் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு "அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே...படத்துல வசனமே இல்லே...அங்கே ஒண்ணு...இங்கே ஒண்ணு வருது வசனம்..படமா எடுத்திருக்கே..." என்று இயக்குநரைத் திட்டித்தீர்த்து விட்டார்!

படம் வந்த முதல் மூன்று வாரங்கள் பரபரப்பேயில்லாமிலிருக்க, 'படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்க' என ரஜினியும், மகேந்திரனும் கெஞ்ச, வேணு செட்டியார் சொன்னார்: "ஓடாத படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை...ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை. அது தெரியுமா, உங்களுக்கு?!'

உண்மைதானே? நான்காவது வாரத்திலிருந்து துவங்கிய ஆரவாரம் நூறாவது நாள் வரை ஓயத்தான் இல்லை!

தகவல்களுக்கு நன்றி:
சினிமாவும், நானும் - இயக்குநர் மகேந்திரன்

Thursday, November 26, 2009

மணிவிழா நாயகன் - 1

மணிவிழா நாயகன் என்கிற தொடர் பதிவில், ரஜினி என்கிற கலைஞனைப் பற்றிய எங்கள் கண்ணோட்டங்கள் இடம்பெறும். மற்றபடி அரசியலில் அவருடைய நிலைப்பாடுகள், இன்னபிற விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் இருந்ததேயில்லை.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)


மகரிஷி எழுதிய நாவலைப் படமாக்க முற்பட்டபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், திரைக்கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்திற்கும் தோன்றிய 'வில்லனா நடிக்கற 'புதுப்பையனை' ஹீரோவாகவும், கதாநாயகனா எஸ்டாப்ளிஷான சிவக்குமாரை வில்லனாகவும் மாத்திப் போட்டா என்ன?' தான் ரஜினி எனும் நாயகன் உருவாகக் காரணமாயிருந்தது.

சம்பத் என்கிற இளைஞனாக, காதலை இழந்த காதலனாக, சந்தர்ப்பவசத்தால் தன்னை இழந்த நாயகிக்குக் கணவனாக, குடித்துக்குடித்து உடலை வருத்திக்கொள்ளும் நோயாளியாக, ரஜினியை மாற்றிய பெருமை நிச்சயம் இயக்குநர் எஸ் பி எம்-க்கு உண்டு. அதிலும் சிகரெட்டைப் புகைத்தபின், சாம்பலைச் சுண்டும் ரஜினி ஸ்டைல் அடேங்கப்பா!

படப்பிடிப்பின் முதல் நாளில் தனக்கு நீட்டப்பட்ட வசனங்களைப் பார்த்துவிட்டு 'பாலச்சந்தர் ஸார் ஒரு முழுப்படத்துக்கே இவ்ளோ டயலாக் தரமாட்டார். எந்த நம்பிக்கையிலே எனக்கு இவ்ளோ தர்றீங்க. ரொம்ப கஷ்டம், என்ன விட்டுடுங்க' எனத் தப்பிக்க நினைத்த ரஜினியைச் சமாதானப்படுத்தி நடிக்க வைத்த புண்ணியமும் எஸ் பி எம்-க்குத்தான்!

ரஜினியால் தன்னுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போவது, எங்களுக்குத் தெரிந்து இந்த ஒரு படத்தில் மட்டும்தான்!

நடிகர் திரு சிவகுமார் அவர்கள் கூறியது போல 'அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தியை எடுத்து, ரஜினியை வரவேற்கத் துவங்கிவிட்ட காலகட்டம் அது!'

தகவல்களுக்கு நன்றி:
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - விகடன் பிரசுரம்
இது ராஜபாட்டை அல்ல - அல்லையன்ஸ்

Saturday, October 10, 2009

ரஜினிக்கு ஒரு பாட்டு!

வெற்றிக்கனி எட்டி பறிக்க
எம்பத்தான் வேண்டும்
வியர்வைத்துளி பூமியிலே
சிந்தத்தான் வேண்டும்
சோதனையை முட்டித்தள்ள
நிமிரத்தான் வேண்டும்
வேதனையை விட்டுத்தள்ள
சிரிக்கத்தான் வேண்டும்

இமையிலே உறக்கம் அழுத்தும்போதும்
முழிக்கத்தான் வேண்டும்
வழியிலே தோல்வி வருத்தும்போதும்
ஏற்கத்தான் வேண்டும்
இடையிலே தடைகள் வரும்போதும்
தாண்டத்தான் வேண்டும்
உன் அடியிலே பூமி நழுவும்போதும்
நிற்கத்தான் வேண்டும்

தலையில கனம் இல்லாம
இருக்கத்தான் வேண்டும்
மனசுல திடம் என்றுமே
இருக்கத்தான் வேண்டும்
உறுதி ஒளி கண்ணுக்குள்ளே
மின்னத்தான் வேண்டும்
வெற்றிப்பசி வயிற்றுக்குள்ளே
கிள்ளத்தான் வேண்டும்
நம்பிக்கை பலம் புஜத்தினிலே
தெரியத்தான் வேண்டும்
இலட்சிய இலக்கை இறுதியிலே
அடையத்தான் வேண்டும்

(ரஜினியின் சிவாஜி தான் இன்று ஊரெங்கும் ஒரே பேச்சு. சரி நம்பளும் ரஜினி சார் பாடுகிற மாதிரி எழுதலாம்னு ஒரு முயற்சி !! பாட்டுல முதல் வரி எல்லாம் ரஜினி பாடுகிற மாதிரியும் அடுத்த வரி எல்லாம் பக்கத்துல கூட்டமா மற்றவர்கள் எல்லோரும் CHORUS பாடுகிற மாதிரியும் யோசித்தேன், அதன் விளைவு தான் இந்த பாடல்!)