Showing posts with label எ எ க. Show all posts
Showing posts with label எ எ க. Show all posts

Thursday, August 25, 2011

என்றோ எழுதிய கவிதை - 24

இரவு படுத்தால்
விழித்தெழுவது
உன் கையில் இல்லை
எனும்போது...

'நாளை நமதே' என்பது
எந்த நம்பிக்கையில்?!

Monday, July 18, 2011

என்றோ எழுதிய கவிதை - 23

பாடிப் பறந்தேன்...!
தாவித் திரிந்தேன்...!
யார் கையிலும் சிக்காத
காற்றின் சுதந்திரம் எனக்கு...!

அனைத்தையும்
'மூன்று முடிச்சு'-களில்
இழந்து விட்டேன்!!

Monday, June 20, 2011

என்றோ எழுதிய கவிதை - 22

தலையில் வீட்டுக் கடன்...
உடலில் உறவானவரின் கடன்...
நெஞ்சில் நண்பர்களின் கடன்...
உயிரில் உயிரான்வரின் கடன்...
இத்துணை சுமைகளின் நடுவில்...
ஒரு துளி தேனாய்...
இன்றைய கவிதை!

Sunday, June 19, 2011

என்றோ எழுதிய கவிதை - 21

தோழர் ஜே கே 'சொல்லிக்காம கொண்டுக்காம'  போனதால... இதோ இப்ப 'சைடு கேப்ல' நம்ம கவிதை...!

தன்னந்தனியாய் அவள்...
தாகமாய் நான்...!
திகட்டாத தித்திப்பாய் அவள்...
தீயாய் நான்...!
துள்ளலாய் அவள்..
தூண்டில் மீனாய் நான்..!
தெம்மாங்காய் அவள்...
தேனிசையாய் நான்...!
தையலாய் அவள்...
தொட்டு விடும் தூரத்தில் நான்...! - என்றாலும் 
தோல்வியில் முடிந்தது எங்கள் காதல்..!!

Friday, April 1, 2011

என்றோ எழுதிய கவிதை - 20

சினிமாத் தலைப்பு (அ) உயிரெழுத்துக் கவிதை!

அன்னக்கிளியாய் அவளிருக்க,
ஆசையுடன் நான்
'இதயத்தை திருடாதே' என்றேன்!

'உயர்ந்த மனிதன் நீ,
ஊருக்கு உழைப்பவன் நீ,
எங்கள் தங்கம் நீ,
ஏணிப்படிகள் ஏறினாலும் எட்டாத
ஒரு தலை ராகம் நம் காதல்' என்றதும்
ஓசையின்றி நொறுங்கிப் போனேன்!

Wednesday, March 16, 2011

என்றோ எழுதிய கவிதை - 19

தங்கத் தமிழ்
தாலாட்டும் தமிழ்
திக்கெட்டும் தமிழ்
தீந் தமிழ்
துள்ளும் தமிழ்
தூரிகைத் தமிழ்
தெளிவுத் தமிழ்
தேன் தமிழ்
தைரியத் தமிழ்
தொலைந்த தமிழ்
தோகைத் தமிழ்
த்த்த் தமிழ்!

Tuesday, February 8, 2011

என்றோ எழுதிய கவிதை - 18

அலைகள் ஒரு நாள் ஓயும்...
சூரியன் மேற்கில் உதிப்பான்..
காற்று கைகளில் சிக்கும்...
காதலுக்குக் கூட மரியாதை கிட்டிவிடும்..
ஆயின்..
மாமியார் - மருமகள் உறவில்
சமாதான உடன்படிக்கை
என்று கையெழுத்திடப்படும்?!

Tuesday, March 23, 2010

என்றோ எழுதிய கவிதை - 17

நான் யார்?

உயிரா?
உயிர் உள்ள உடலா?
உயிரும் உடலுமா?

உயிர்த்தது "நான்" என்றால்...
உதிர்வதும் "நான்" தானே?
எனில்...
உயிரில்தான் "நான்"!

உடலின் தோற்றம் "நான்" என்றால்...
உடல் மறைவதும் "நான்" தானே?
எனில்...
உடலில்தான் "நான்"!

உயிரும் உடலும் "நான்" என்றால்..
உயிரோடு உடல் போவதும் "நான்" தானே?
எனில்..
உடலும் உயிரும்தான் "நான்"!

யோசித்து பார்தததில் தவறு தெரிந்தது...
"நான்" என்பது "நான்" அல்ல...
எல்லாம் வல்ல "அவன்" என்று!

Tuesday, March 16, 2010

என்றோ எழுதிய கவிதை - 16

அருகில் வந்து
என் தலையைக் கலைத்து
அழகு காட்டிச் செல்லும்
அவளைப் பார்க்கையில்...

தத்தித் தத்தித் தாவும்
குழந்தையாய்...
மனசு...!!

Monday, March 1, 2010

என்றோ எழுதிய கவிதை - 15

காலேஜு போவுறப்போ, இன்னா நோட்டாயிருந்தாலும் மொத பக்கத்துல பிள்ளையார் சுழியோட, நடுவுல சின்னதா ஒரு கவிதை இருக்கும். சில சமயம் ஸீரியஸாவும், பல சமயம் லொள்ளாவும், அந்த வயசுக்கேத்த எதிர்பார்ப்போட, ஏக்கங்களோட இருக்கும். அப்படி நான் எழுதிய ஒரு கவிதை............

பாவை நீ
பூவை வைத்தாய்.......
பொட்டும் வைத்தாய்...
நெஞ்சை மட்டும்
ஏன் விட்டு வைத்தாய்?!!

புரியாதவங்களுக்குச் சுளுவாக

பாவை நீ
பூவை வைத்தால் கூந்தலுக்கு அழகு...
பொட்டு வைத்தால் நெற்றிக்கு அழகு...
நெஞ்சில் என்னை வைத்தாலோ அழகோ அழகு!

திருவல்லிக்கேணி •ப்ரெண்ட்ஸை பாத்துட்டு, 45B பஸ்ல, (ஈவினிங்) காலேஜ் போற ரூட்டுல (தொங்கிகினே) நோட்டை ரோட்ல விட்டுட்டேன்! ஸ்லோவா பஸ் போனதுல எப்படியோ இறங்கி நோட்-ஐ தேடி (ஓடி!) வந்தேன். அதற்குள் யாரோ எடுத்து கைல வெச்சிருந்தாங்கோ.

டேங்க்ஸ் சொல்லி 'ஜுட்'றதுக்கு முன்னாடி, எடுத்து வெச்ச மகராசனோட கிண்டல் கேள்வி "நோட்புக்கை(யும்) ஏன் விட்டு வைத்தாய்?!"

Thursday, December 17, 2009

என்றோ எழுதிய கவிதை - 13

ரோஜா ஒன்று என் காதோரம் வந்து
க(வி)தை பேசிற்று...

"இருந்தாலும் ஒரே மணம்
பறித்தாலும் ஒரே மணம்
முகர்ந்தாலும் ஒரே மணம்
பரமனுக்குப் படைத்தாலும் ஒரே மணம்
பாவை அவள் வைத்தாலும் ஒரே மணம்
பிய்த்தாலும் ஒரே மணம்
வாடி உலர்ந்தாலும் ஒரே மணம்

ஆயின்...உங்களுக்கு

களிப்பிற்கு ஒரு முகம்
கவலைக்கு ஒரு முகம்
வஞ்சனைக்கு ஒரு முகம்
வாசனைக்கு ஒரு முகம்
அசிங்கமாய் ஒரு முகம்
அவலமாய் ஒரு முகம்
நீங்கள் மட்டுமே அறிந்த ஒரு முகம்
மொத்தத்தில் எங்கே தொலைந்தது
உங்கள் திருமுகம்?"

கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை...
உங்களிடம்...?

Saturday, November 21, 2009

என்றோ எழுதிய கவிதை - 12

தொட்டால் குழையும் சோறு...
தொட்டால் விறைக்கும் மனைவி...
நொந்து போகுது மனசு!

Monday, November 16, 2009

என்றோ எழுதிய கவிதை - 11

கற்பனை கூட பல சமயங்களில்
கிணற்றிலிட்ட
கல் போல அமிழ்ந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
நெஞ்சிலிருக்கும் வார்த்தைகளாய்
உறைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
காகிதங்களில் அச்சாகாமல்
கரைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
கையில் சிக்காத காற்றாய்
காணாமல் போகிறது!

கற்பனை கூட சில சமயங்களில்
கவிஞனின் கைபட்டு
காவியமாய் மிளிர்கிறது!

Wednesday, November 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 10

கரை நிரந்தரமில்லை என
கரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்
கரையைத் தழுவி அலுத்தபின்,
கடலில் போய் அலையும் சேரும்!

உறவைத் தேடி அலையும் மனிதா...!
உறவைத் தேடி அலுத்த மனிதா...!
உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என
உறவின் உண்மை புரிந்து விடும்!

Thursday, November 5, 2009

என்றோ எழுதிய கவிதை - 9

"Divorce comes before Marriage"
in English Dictionary...
தமிழர் நாங்கள் பண்பாடு காப்பவர்கள்....!
அகராதியைப் புரட்டுங்கள்,
"திருமணத்திற்குப் பிறகுதானே
விவாகரத்து வருகிறது!"

Wednesday, October 28, 2009

என்றோ எழுதிய கவிதை - 8

'மதர் டங் தெலுங்கு. படிக்கறது கான்வென்ட். அவளுக்கு போயி பர்த்டே ப்ரஸன்ட் பாலகுமாரன் புக்கா? அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இதுலல்லாம் இல்லங்கறதாவது உனக்கு தெரியுமா? ' என்று பொங்கிய தங்கைக்கு என் அவஸ்தை புன்னகைதான் பதில்.

பாலகுமாரன் எழுதிய 'மௌனமே காதலாகி...' புத்தகத்தின் முதல் பக்கத்தில்

'அன்பு' என்பது மூன்றெழுத்து
'நட்பு' என்பது மூன்றெழுத்து
'பாசம்' என்பது மூன்றெழுத்து
'.....' (அவள் பெயர்!) என்பதும் மூன்றெழுத்துதான்!

என்று கையொப்பமிட்டுக் கொடுத்ததின் பின்னணியை எப்படி என் அப்பாவித் தங்கையிடம் சொல்வேன்?!

இன்று, ஈஸிசேரில் உட்கார்ந்து அசை போடும் போது, "கொஞ்சம் தைரியமாய்
"'காதல்' என்பது மூன்றெழுத்து" எனும் வரிகளைச் சேர்த்திருந்தால்
'தோல்வி' என்ற மூன்றெழுத்தைத் தவிர்த்திருக்கலாமோ?!"
என்று தோன்றுகிறது!

Wednesday, October 14, 2009

என்றோ எழுதிய கவிதை - 7

"என் மீது குற்றமாம்...
சிலர் கூவித் திரிகிறார்கள்..
விட்டுத் தள்ளு அவர்களை...

சேற்றை அள்ளி வீசுவதாய்
நினைத்துக்கொண்டு
கைகளைச்
சேறாக்கிக் கொள்பவர்கள்!"

Sunday, October 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 6

'மாற்றான் தோட்டத்து
மல்லிகை மணக்கும்!'
என்கிறாயே...
வெட்கமாயில்லை?!
அவன் முகர்ந்த
எ(மி)ச்சம்தானே உனக்கு!

Saturday, October 10, 2009

என்றோ எழுதிய கவிதை - 5

அவள் என்னைப் பார்த்து,
'நான் அழகா?' எனக் கேட்டாள்!

நான் சொன்னேன்
'தூரத்திலிருந்து பார்க்கும்போது
நீ அழகுதான்,
அருகில் வந்தபிறகுதான் தெரிகிறது
உனக்கும் அழகுக்கும்
தூரமென!'