Sunday, December 6, 2009

கவிதை என்ன செய்யவேண்டும்?

இந்தியா தனது ஜனநாயகத்தை விரயம் செய்து கொண்டிருப்பதைப் போல நம் கவிஞர்கள் கவிதையைச் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிதை என்ன செய்யவேண்டும்?

வாழ்க்கையையும் மொழியையும் அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சமூகத்தையும் சக மனிதர்களையும் காதலிக்கக் கற்றுத்தரவேண்டும். மரபின் மீது பெருமிதமும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.

Saturday, December 5, 2009

விடைகொடு என் தோழா!

இன்றைய கணிப்பொறி உலகில் நிலையானது ஏதுமில்லை.

என்னுடன் உழைத்த சக நண்பர்களில் ஒருவர் வேலையிழக்க நேரிட்டது. 8 வருட காலமாக பக்கத்து இருக்கையில், 12 மணி நேரம் பின் கணினி மூலம், இன்னும் சில, என்று இருந்தவர் இனி பேசக்கூட இல்லாமல் போய் விடுவார் என்ற வருத்ததிலும்,

இறுதி நாளில் இருந்த கடைசி 10 நிமிடங்களில் அவருக்கு ஏதேனும் பரிசாய், நினைவாய், கொடுக்க எண்ணி எழுதியது இது.

அவர்தம் குடும்ப சகிதம் இதைப் படித்து அனுபவித்ததையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இழப்பு சோகம், இருந்தும் இல்லாமல் இருப்பது பெரும் சோகம், அதுவும் நம் நாடன்றி வெளிநாட்டில் இது தாளாத சோகம்..


விடைகொடு என் தோழா, விடையற்ற வினாவோடு
விடைகொடு என் தோழா,
விடாது இருக்கும் நம் நட்பு, தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நதிபோல் பல பாதை நாம் கடந்தோம்
கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் களைந்தோம்
சேர்ந்தே தெளிந்தோம் யாவும் பகிர்ந்தோம்
நம்மை விதைத்தே நாம் வளர்ந்தோம்
பிரிவென்பதை மறந்தோம் உழைப்பினில்
நம்மை மறந்தோம்

தேடுதலில் புரிதலின்றி வேட்டையில் இலக்கின்றி
பாதையில் நோக்கின்றி காலத்தின் மாற்றம் கண்டோம்
இனி விவாதிக்க, வம்பிழுக்க சிரித்திருக்க, வெறுமே
பார்த்திருக்க பக்கத்தில் உன் உருவமில்லாது போகும்

இருக்கைகள் எல்லாம் இளைப்பாற
நினைவுகள் வேலை செய்யும் நேரமிது
வெற்று பார்வையில் காற்றை தீண்டி
இல்லாத தாகத்திற்கு தண்ணீர் தேடி
கடிகார முள்ளை நானும் சேர்ந்தே தள்ளி
நாள் நகர்த்தும் காலமிது

வேற்று கிரகம் போல் என் இடமாகும்
நீருற்று போல் நாம் இருந்த காலம்
நினைவில் ஓடும்
வழியில் பார்ப்போமினி
கை உயர்த்தி கண் இருத்தி
பெருமூச்சோடு நம் வழி தொடருவோம்
விடாது இருக்கும் நம் நட்பு தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நீ இனி போகுமிடமெல்லாம்
வெற்றி கண்டு வீடோடு சிரித்திருக்க
என் மனதோடு பிரார்த்திருப்பேன்
விடைகொடு என் தோழா!

Friday, December 4, 2009

மணிவிழா நாயகன் - 3

நினைத்தாலே இனிக்கும் (1979)




பாலச்சந்தர் இயக்கத்தில், சுஜாதா எழுத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நனைந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியின் பங்கு முக்கியமானது.

கொஞ்சம் உன்னிப்பாக நோக்கினால் தீபக் பாத்திரத்தில், சுஜாதாவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான வஸந்த்-ஐப் பார்க்கலாம். பேச்சில் நக்கல், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தன்மை, எந்தப் பெண்ணைப் பார்த்ததும் விழிகள் விரிவது, கொஞ்சம் புத்திசாலித்தனம்/நகைச்சுவை கலவையில், குறுந்தாடி ரஜினி 'புகுந்து விளையாடிய' படம்.

சின்னச் சின்ன திருட்டுக்கள், 'டேப் சுந்தரி'யைத் தேடி அலைவது, 'வரவேற்பாளினி' (நன்றி: சுஜாதா)யைப் பார்த்து ஜொள்ளு விடுவது, 'சிவ சம்போ' (அப்போதே சிவனுடன் சம்பந்தம் இருந்திருக்கிறது!)வை விடாது பிடித்திருப்பது, 'சிவ சம்போ' / 'நம்ம ஊரு சிங்காரி' பாடல்களில் ஏகத்துக்கு 'ஷ்டைலு', போக வில்லன்களைப் போட்டு உதைப்பது என ரஜினிக்குத் தீனி நெறைய்ய!

இதையெல்லாம் விட, டொயோட்டா காருக்கு ஆசைப்பட்டு, இறுதியில் 'சுண்டு விரல் போதும் ஸார்!' என உச்சபட்ச டென்ஷனுடன் ரஜினி அடங்கிப்போவது ஹிலேரியஸ் அடேங்கப்பா!

ரஜினிக்கு நகைச்சுவை உணர்வு(ம்) உண்டு என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காட்டிய முதல் படமும் இதுதான்!

Thursday, December 3, 2009

தியாவிற்கு நன்றி!

கவிதை கொண்டு, விதையிட்டு,
தமிழ் வளர்த்து, தமிழ் ரசித்தோம்!

தீயாய் தரணியில்,
தீரா தாகம் கொண்ட தியா,
தன்னிலும் வளர்த்து, பிறரிலும் ரசித்து,
விருதொன்று தந்து,
பதிவுகளுக்கு விழுதாய் ஆகிவிட்டாரே!

நண்பர்களுக்கு விருந்தாய்,
பதிவிற்கு விருது தந்து,
தன்னையே அனைவரிலும் பதிந்து விட்டாரே!

கவிதை வளர்க்கக்
கவிதையாய் வித்திட்டாரே!
தான் உயர, தரம் உயரும்,
நாம் உயர,தரணி உயரும்
என உணர்த்திட்டாரே!

பதிவாளர்களையும் வாழ்த்தி
நன்றியாய் வந்த கவிதை இது!
நன்றாய் ஏற்றுக்கொள்வாயா
நண்பரே, தியாவே?!

விருது பெற்ற அனைத்து பதிவாளர்களுக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

Tuesday, December 1, 2009

சின்னதாய் ஒரு தோட்டம்...

என் தோட்டம்
மிகச் சிறியது...

முன் காலையில்
இலையின் விளிம்பிலின்று
சந்தோஷமாய்த்
தற்கொலை செய்து கொள்ளும்
பனித்துளி!

தோட்டமொன்றை வைக்கச்
செடிகளை விடச்
சிந்தனைகள்தான் வேண்டும் எனச்
சொல்லாமல் சொல்லிப்போகும்
வண்ணத்துப்பூச்சி!

மெத்தென்ற புல்வெளியில்
தன் 'குட்டி' குட்டிகளைப் போட்டு
இரை தேடிச் செல்லும்
பூனை!

அவ்வப்போது வந்து...
ஆங்கிலத்தில் கொஞ்சி
ரோஜா கேட்கும்
மழலை மொழி!

இன்று என் வீடு,
நாளை மாடி வீடு - என
உயரும் கிறிஸ்துமஸ் செடி!

மெலிதான தூறல்களின்
தாளத்துக்குத் தாக்குப் பிடிக்கும்
சின்னச் சின்ன விதைகள்...

கவிதையே தோட்டமா??
தோட்டமே கவிதையா??

இரண்டும் ஒன்றுதான்..
பெரிது பார்வையும்
சிறிது நேரமும் இருந்தால்...!

ஒரு தோட்டத்தின் அழகு
பராமரிப்பவரைப் பொறுத்தது...!

ஒரு கவிதையின் அழகு
படைப்பவரைப் பொறுத்தது..!

கனவுகளில்லாமல்
வாழ வந்த
இந்திய நகரத்தில்
கனவு கண்டது

சின்னதாய் ஒரு வீடும்
பெரியதாய் ஒரு தோட்டமும்...!

நிழலின் முகத்தில்
நிஜமறிய
மனது திருத்திக்கொண்டது!

சின்னதாய் ஒரு வீடும்
(அட்லீஸ்ட்) மிகச் சின்னதாய்
ஒரு தோட்டமும்..!